Published: June 16, 2017 09:08 ISTUpdated: June 16, 2017 09:08 IST
பாவம் மாணவர்கள்!
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி களில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக நடைபெற்ற தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகளை வெளியிட அனுமதி வழங்கியிருப்பதன் மூலம், மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் நுழைவதற்கான காத்திருப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஜூன் 24-க்குள் தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. ஆனால், தமிழகம் இத்தேர்வு தொடர்பில் எழுப்பியிருக்கும் முக்கியமான கேள்விகள், அதன் ஆட்சேபணைகள் யாராலும் பொருட்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை.
மருத்துவப் படிப்புக்கான கட்டமைப்பு உருவாக்கத்தில் நாட்டிலேயே முன்னணியில் இருக்கும் தமிழகம், இந்தத் தேர்வுமுறையால் பாதிக்கப்படும் என்று மாநில அரசு கருதுவது மிக நியாயமான ஒரு விஷயம். ‘ஒரே நாடு - ஒரே தேர்வு’ என்றெல்லாம் கூறப்பட்டாலும், எல்லோரும் ஓர் நிறையாகக் கருதப்படுவதற்கான சூழலை இந்தத் தேர்வு உருவாக்கப்போவதில்லை என்பதற்கான சமிக்ஞைகள் ஆரம்பத்திலேயே தெரியத்தொடங்கிவிட்டன. மே 7-ல் நடைபெற்ற ‘நீட்’ தேர்வில் ஆங்கிலம், இந்தி வினாத்தாள்கள் ஒரே மாதிரியிருந்தாலும், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் தயாரிக்கப்பட்ட மாறுபட்ட வினாத்தாள்கள் கடினமாக இருந்ததாகப் புகார்கள் எழுந்தன. வங்க அமைச்சர் இது தொடர்பில் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டினார். மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் கல்வித் துறை இருக்கும்போது, ஏன் அதைப் பறிக்க மத்திய அரசு இப்படி துடியாய்த் துடிக்கிறது என்று தெரியவில்லை!
இந்த விவகாரத்தின் போக்கை யூகித்தே சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ‘நீட்’ தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்திருந்தது. இந்தத் தடையை விலக்கக் கோரும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி அளித்ததுடன், “2017 ‘நீட்’ தேர்வு தொடர்பான எந்த வழக்கையும் எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றும் உயர் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. அதிர்ச்சி அளிக்கும் ஒரு முடிவு இது. மாநிலங்களின் அதிகாரத்தோடு சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் அதிலும், இந்தத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் தமிழகத்தின் மசோதா குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் இருக்கும் நிலையில், வழக்கை ஒட்டுமொத்தப் பின்னணியிலும் பொருத்திப் பார்த்திருக்க வேண்டும் உச்ச நீதிமன்றம்.
தமிழகத்தின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட, நூற்றுக்கணக்கான மாணவர்கள் சம்பந்தப்பட்ட மசோதாவை நிறைவேற்றித் தரும் அக்கறை மத்திய அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம், மாநிலங்களின் உரிமை சம்பந்தப்பட்ட இந்த மசோதா ஏன் தாமதமாகிறது என்று மத்திய அரசைக் கேள்வி கேட்கும் திராணியும் மாநிலத்தை ஆளும் அதிமுக அரசிடம் இல்லை. இதுகுறித்து முடிவெடுக்கும் நிர்ப்பந்தத்தை உருவாக்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவும் இப்போது காலியாகிவிட்ட நிலையில், தமிழக மாணவர்களையும் எதிர்காலச் சூழலையும் நினைக்கையில் வருத்தமே கவிகிறது!
No comments:
Post a Comment