Sunday, June 18, 2017

சென்னையில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு: சமாளிக்குமா குடிநீர் வாரியம்?

By DIN  |   Published on : 18th June 2017 04:40 AM 
சென்னை நகரில் பெரும்பாலான பகுதிகளில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொதுமக்களின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய சென்னைக் குடிநீர் வாரியம் இயன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் குளம்,ஆறு, ஏரிகள் தண்ணீர் வறண்டு விட்டன.
சென்னை மக்களின் ஒரு நாளுக்கான குடிநீர்த் தேவை 83 கோடி லிட்டர் ஆகும். எனினும் பற்றாக்குறை காரணமாக தற்போது 500 மில்லியன் லிட்டருக்கும் குறைவான தண்ணீர்தான் விநியோகிக்கப்படுகிறது. சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஏரிகள் முற்றிலும் வறண்டு வருகின்றன. சென்னை மக்களுக்கு தினமும் குழாய்களில் வழங்கப்பட்டு வந்த குடிநீர் வெகுவாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஒரு சில பகுதிகளில் சில மணி நேரம் மட்டும் தண்ணீர் வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு நிலைமை ஓரளவுக்கு சமாளிக்கப்பட்டு வருகிறது.
ஏரிகளில் தண்ணீர் முற்றிலும் வற்றி விட்டதால் மாங்காடு அருகே உள்ள சிக்கராயபுரம் கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை எடுத்து சுத்திகரித்து விநியோகித்து வருகின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளதால் அனைத்துப் பகுதியிலும் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரின் அளவும் வெகுவாக குறைந்து விட்டதால் சென்னையில் பல பகுதிகளில் பொதுமக்கள் தினமும் குடிநீருக்காக அல்லல் பட்டு வருகின்றனர்.
நகரின் பெரும்பாலான தெருக்களில் உள்ள பொதுமக்கள் லாரி குடிநீருக்காகவும், குழாய் தண்ணீருக்காகவும் குடங்களுடன் காத்திருக்கின்றனர்.
சென்னையின் மையப் பகுதிகளான எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பாரிமுனை, சூளை, வட சென்னை பகுதிகளான பெரம்பூர், சௌகார்பேட்டை, ராயபுரம், மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் கடும் குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் குடிநீர் அடிபம்புகளில் தண்ணீர் வருவதில்லை. ஆதம்பாக்கத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேல் குடிநீர் விநியோகம் இல்லை என பொதுமக்கள் தொடர்புடைய அதிகாரிகளுக்கு புகார் அளிப்பதுடன் ஆங்காங்கே குடிநீருக்காக ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
குடிநீர் தட்டுப்பாட்டால் கேன் குடிநீர் விற்பனை அதிகரித்து வருகிறது. தேவை அதிகமாக இருப்பதால் நகரின் பல இடங்களில் குடிநீர் கேன்களின் விலை ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது.
சென்னையில் குடிநீர்ப் பற்றாக்குறை அதிகமாக இருக்கும் தெருக்களில் சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் கூடுதல் லாரிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. எனினும் தேவையுடன் ஒப்பிடுகையில் விநியோகம் மிகவும் குறைவாகவே உள்ளது.
இது குறித்து சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது:
சென்னை நகரின் குடிநீர்த் தட்டுப்பாட்டை முன்னரே கணித்து முடிந்தளவுக்கு நிலைமையைச் சமாளித்து வருகிறோம். 4 குடிநீர் ஏரிகளிலும் மொத்த கொள்ளளவில் (11 டிஎம்சி) தற்போது 1 சதவீத அளவுக்கு (125 மில்லியன் கன அடி) மட்டுமே தண்ணீர் உள்ளது. நகரின் அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தடி நீரின் அளவு மிகவும் கீழே சென்று விட்டது. இதனால் குடிநீர் விநியோகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சவால்களை எதிர்கொண்டு வருகிறோம்.
இந்தநிலையிலும் நெம்மேலி, மீஞ்சூர் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள், கல்குவாரிகள், விவசாயக் கிணறுகள் மூலம் குடிநீரைப் பெற்று விநியோகித்து வருகிறோம்.
நெம்மேலியில் தற்போது 100 மில்லியன் கன அடி பெறப்பட்டு வருகிறது. மிக விரைவில் இங்கிருந்து கூடுதல் நீரைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று சில வாரங்களில் போரூர் ஏரியிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்படும். இது தவிர நூற்றுக்கணக்கான குடிசைப் பகுதிகளுக்கு வழக்கத்தைக் காட்டிலும் கூடுதல் குடிநீர் லாரிகள் அனுப்பப்பட்டு வருகின்றன என்றனர்.

No comments:

Post a Comment

news today 02.01.2025