தண்டனை! முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்; மகன் மட்டுமல்ல; மருமகளும் இனி பொறுப்பு
Updated : டிச 06, 2019 00:16 | Added : டிச 05, 2019 23:24
புதுடில்லி: வயதான மாமனார், மாமியாரை பராமரிக்காத, மருமகன், மருமகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நடப்பு பார்லி., குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உலகில், 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அதிகமாக உள்ள நாடுகளில், இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2050-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், முதியோர், 20 சதவீதம் இருப்பர் என, கணக்கிடப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் பலரும், தங்கள் பெற்றோர் மீது அக்கறையில்லாமல் இருப்பது வேதனைஅளிக்கும் விஷயம்.
நல்வாழ்வு சட்டம்:
பிள்ளைகள் வேலை தேடி, வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் குடிபெயர்ந்து விடுவதால், மூத்த குடிமக்கள் பலரும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2007ல் நிறைவேற்றப்பட்ட மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு சட்டத்தில், மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம், சில திருத்தங்களை செய்து, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்ட திருத்த மசோதா தயாரித்துள்ளது.
இந்த மசோதாவுக்கு, பிரதமர் மோடி தலைமையில், நேற்று முன்தினம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதா, நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே, தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பற்றி, மத்திய சமூக நீதித்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் தாலுகாக்களில், மூத்த குடிமக்களின் குறைகளை தீர்க்க, ஆணையம் அமைக்கப்படும்.
பராமரிப்பு தொகை:
தங்களது பிள்ளைகளிடமிருந்து, உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவை கிடைக்கவில்லை என்றால், மூத்த குடிமக்கள், அந்த ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம். அவர்களது குறைகள், பிரச்னைகளுக்கு, 90 நாட்களில் ஆணையம் தீர்வு காணும். அதிலும், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது, ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இப்போது, பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு மட்டும் தண்டனை வழங்கப்படுகிறது. இனி, வயதான மாமனார், மாமியாரை பராமரிக்காவிட்டால், மருமகன், மருமகளுக்கும் தண்டனை வழங்கும் வகையில், சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பெற்றோர் பராமரிப்புக்காக, அவர்களது வாரிசுகள், அதிகபட்சமாக, மாதம், 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என, முந்தைய சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்து. சட்ட திருத்தத்தில், அந்த அளவு நீக்கப்பட்டு, வசதியாக இருப்பவர்கள், தங்கள் பெற்றோருக்கு கூடுதல் பராமரிப்பு தொகை வழங்க வழிகாணப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு, 5,000 ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்படும். சில வழக்குகளில், இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என, மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
புகார்:
மூத்த குடிமக்களின் முழு அனுமதியில்லாமல், அவர்களின் பாதுகாப்பாளர்கள், அவர்களது சொத்துக்களை விற்க முடியாது. முதியோர் இல்லங்கள், முதியோருக்கு வீட்டுக்கு வந்து சேவை செய்யும் அமைப்புகள், கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும், மூத்த குடிமக்களின் புகார்களை பெற்று நடவடிக்கை எடுக்க, தனி அதிகாரி நியமிக்கப்படுவார். ஒவ்வொரு மாநிலத்திலும், மூத்த குடிமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க, தனி தொலைபேசி எண் வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு, மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
மக்களின் உரிமைகள், அந்தரங்கங்கள் பாதுகாக்கப்படும்:
''மக்களின் அடிப்படை உரிமைகளும், அந்தரங்கங்களும் பாதுகாக்கப்படும்,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். லோக்சபாவில், நேற்று கேள்வி நேரத்தின் போது, அவர் கூறியதாவது: மக்களை கண்காணிப்பதில், ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது என, அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இது உண்மையல்ல. மக்களின் அடிப்படை உரிமைகளையும், அந்தரங்கங்களையும் பாதுகாக்க, அரசு கடமைப்பட்டுள்ளது. ஆதார் எண், மக்களின் அந்தரங்கங்களை அறிய உதவுகிறது என, பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. ஆதார் எண்ணை வைத்து, ஒருவரின் அந்தரங்கங்களை அறிய முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.
குடியுரிமை மசோதா 9ம் தேதி தாக்கல்:
குடியுரிமை சட்ட திருத்த மசோதா, வரும், 9ம் தேதி, லோக்சபாவில் தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பாக்., வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை, நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. பா.ஜ.,வுக்கு, பெரும்பான்மை இருப்பதால், இந்த மசோதாவை, லோக்சபாவில் நிறைவேற்றுவதில் பிரச்னையில்லை. ராஜ்யசபாவில் பெரும்பான்மையில்லாவிட்டாலும், தோழமை மற்றும் மாநில கட்சிகளின் ஆதரவுடன், மசோதவை நிறைவேற்ற, அரசு உறுதியாக உள்ளது.