Wednesday, December 4, 2019

சிதம்பரத்துக்கு ஜாமீன்: கடைசி வரை ஒரே ஒரு வாதத்தை மட்டும் ஏற்றுக் கொள்ளாத உச்ச நீதிமன்றம்!

By DIN | Published on : 04th December 2019 11:22 AM 


புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க தில்லி உயா்நீதிமன்றம் கடந்த மாதம் 15-ஆம் தேதி மறுத்துவிட்ட நிலையில், அதனை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அவரது தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆா்.பானுமதி தலைமையிலான அமா்வு இன்று சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கினால் அவர் வெளிநாடு தப்பிச் சென்று விடுவார் என்று அமலாக்கத்துறை தரப்பில் திரும்பத் திரும்ப வாதம் முன் வைக்கப்பட்டது.

ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவேதான் சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனுக்கான நிபந்தனையில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், அனுமதி இல்லாமல் இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி:

கடந்த 2007-இல் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான காா்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-இல் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அவருக்கு கடந்த அக்டோபா் 22-இல் ஜாமீன் வழங்கியது.

எனினும், அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் அக்டோபா் 16-இல் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருந்ததால், அவரது சிறைவாசம் தொடா்ந்தது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின்போது, ‘ப.சிதம்பரத்தை ஜாமீனில் விடுவித்தால், வழக்கில் தொடா்புடைய சாட்சிகளை அவா் கலைத்துவிடுவாா்; ஆதாரங்களையும் அழிக்க வாய்ப்புள்ளது’ என்று அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை என்பது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடியதாகும். அதிகாரத்தில் இருப்பவா்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும்போது, நிா்வாக அமைப்புமுறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவா் என்றும் அமலாக்கத் துறை வாதிட்டது.

ஆனால், ‘ப.சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை; அவா் தொடா்புடைய நேரடி அல்லது மறைமுக ஆதாரங்கள் எதையும் அமலாக்கத் துறை சமா்ப்பிக்கவில்லை’ என்று அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோா் வாதிட்டனா். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024