Wednesday, December 4, 2019

அரசு ஓய்வூதியத்தில் சேராத ஓய்வூதிய தொகுப்பு பணப்பலன்: 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்
தமிழகம் முழுவதும் ஓய்வூதியம் பெறும் 10,000 பேரின் ஓய்வூதியத்தில், ஓய்வூதிய தொகுப்பு பணப்பலன் சேர்க்கப்படவில்லை என, பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 7 லட்சத்துக்கும் மேலான ஓய்வூதியர்களும் உள்ளனர்.

ஒவ்வோர் அரசு ஊழியர், அலுவலர், ஆசிரியர்களும் பணி ஓய்வின்போது, ஓரிருமாதத்தில் ஓய்வூதி பணப் பலன்களுடன் அவர்கள் பணிபுரிந்த ஆண்டுகள் மற்றும் சம்பளத்திற்கு தகுந்தவாறு ஓய்வூதிய தொகுப்பு தொகை வழங்கப்படுகிறது. 2003க்குபின் ஒவ்வொருவருக்கும் பல லட்சக்கணக்கில் தொகுப்பு தொகை வழங்கப்படுகிறது.

இத்தொகையை 15 ஆண்டு வரை கணக்கீட்டு, ஓய்வூதியத்தில் இருந்து மாதந்தோறும் அந்தந்த மாவட்ட கருவூலத்தால் பிடித்தம் செய்யப்படுகிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்த அந்தத் தொகை மீண்டும் அவரவர் ஒய்வூதியத்தில் சேர்த்து வழங்கப்படும். இதுவே தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள், அலுவலர்களுக்கு ஓய்வூதிய தொகுப்பு தொகை பிடித்தம் காலம் முடிந்தும், அதற்கான தொகை ஓய்வூதியத்தில் சேர்க்கப்படவில்லை என புகார் எழுகிறது.

பாதிக்கப்பட் டோர் நேரில் சென்று கருவூலத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என ஓய்வூதியர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஓய்வூதியர் சங்க நிர்வாகி என்.அழகுமுத்துவேலாயுதம் கூறியது:

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து 15 ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றேன். எனக்கான ஓய்வூதிய தொகுப்பு தொகை பிடித்த கால அளவு முடிந்து சில மாதமாகியும் அந்தத் தொகை ஓய்வூதியத்தில் சேர்க்க படாமல் உள்ளது.

கருவூலத்தில் முறையாக மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை. என்னைப் போன்று தமிழகத்தில் 2003-க்கும் முன்பு பணி ஓய்வு பெற்ற சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் பாதிக்கப்பட்டுள்ளோம்.

கருவூல அலுவலங்கள் கணினி மயமானாலும் இந்நிலை தொடர்கிறது. கருவூல அதிகாரிகள் இது பற்றி ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.

கருவூல அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ மாவட்ட கருவூலங்கள் கணினி மயமாக்கப் பட்டுள்ளன. அனைத்து ஓய்வூதியர்களும் ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தொகுப்பு தொகை பிடித்தம் காலம் முடிந்தவுடன் அது தானாகவே உரியவர் ஓய்வூதியத்தில் சேர்ந்துவிடும். ஒருவேளை பிரச்சினை இருந்தால் சம்பந்தப்பட்ட கருவூலத்தை அணுகலாம். பென்சன் புத்தக நகலுடன் புகார் மனு கொடுத்து, நிவர்த்தி செய்யலாம்,’’ என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024