Thursday, December 5, 2019

அரைமணி நேரத்தில் புதிய தொழில்நுட்பத்தில் பிரேத பரிசோதனை முயற்சி!

By DIN | Published on : 04th December 2019 09:55 AM |

புது தில்லி: நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் வெளியிட்ட தகவலொன்று புதுமையானதாக இருந்தது. அவர் பேசியதிலிருந்து, ‘இந்தியாவில் இதுவரை பின்பற்றப்பட்டு வரும் பிரேத பரிசோதனை முயற்சிகளில் மனித உடலை கூறு போடும் வகையிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . இதனால் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகும் நிலை இருந்து வருகிறது. எனவே, அவர்களது நீண்ட கால வேதனையைப் போக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்திலான பிரேத பரிசோதனை முறையை இந்திய மருத்துவமனைகள் இனி வரும் நாட்களில் முன்னெடுக்கவிருக்கின்றன’ என்பது தெரிய வந்திருக்கிறது.

இதன் மூலமாக இறந்தவர்களின் உடலை கண்ணியமாக நடத்தும் வகையில், உடலை வெட்டாமல் பிரேத பரிசோதனை நடத்தும் புதிய தொழில்நுட்பத்தை தில்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கூட்டாக உருவாக்கி வருகின்றன. அடுத்த 6 மாதங்களில் இது நடைமுறைப்படுத்தப்படலாம். முதலில் தில்லி எய்ம்ஸிலும் பின்னர் நாடு முழுவதிலும் உள்ள பெருநகர மருத்துவமனைகளிலும் இந்தப் புதிய தொழில்நுட்பத்திலான பிரேத பரிசோதனை முறை செயல்பாட்டுக்கு வரும்.

இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக, இதுவரை இரண்டறை மணி நேரமாக நீடித்து வந்த பிரேத பரிசோதனையை இனி அரை மணி நேரத்தில் முடித்து விடலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நேர விரயத்தை தவிர்க்கலாம். அத்துடன், பிரேத பரிசோதனை தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் கூட இனி எதிர்கால ஆய்வுகளுக்காக டிஜிட்டல் முறையில் சேமித்துக் கொள்ளும் வசதியும் இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் உண்டு என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024