dinamalar 29.09.2018
புதுடில்லி:'கேரளாவில் உள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களும் செல்லலாம்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. வழக்கை விசாரித்த, ஐந்து நீதிபதிகளில் நால்வர், 'மாதவிடாய் காலத்தை காரணம் காட்டி, 10 - 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள், சபரிமலைக்கு செல்ல தடை விதிக்கும் தேவஸ்வம் போர்டின் செயல், அரசியல் சாசனத்திற்கு எதிரானது' என தீர்ப்பளித்துள்ளதால், ஆண்கள் மட்டுமே செல்லலாம் என்ற நடைமுறை தகர்க்கப்பட்டுள்ளது.
'தீர்ப்பு விபரங்களை முழுவதும் படித்த பின், மேல்முறையீடு செய்வது அல்லது தீர்ப்பை அமல்படுத்துவது போன்ற அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்' என, கோவிலை நிர்வகிக்கும் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்தில், வனம், மலைப் பகுதியில், சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வகிக்கிறது.
அடர்ந்த காட்டுப் பகுதியை கடந்து, மலைப் பாதையில் சென்றால் தான், கோவிலை அடைய முடியும் என்பதாலும், காட்டுப் பகுதியில் புலிகள், யானைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் காரணத்தாலும், சபரிமலை கோவிலில், ஆண்டின், நான்கு மாதங்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
வழக்கம்
தவிர, ஒவ்வொரு மாதமும், தமிழ் மாதப் பிறப்பு நாளை ஒட்டி நடக்கும் சிறப்பு பூஜையில், குறைந்த அளவிலான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்வதும் வழக்கம்.இந்த கோவிலின் வழிபாட்டு தெய்வமான அய்யப்பன், திருமணம் ஆகாத பிரம்மச்சாரியாக கருதப்படுவதால், 10 - 50 வயதுக்குட்பட்ட பெண்கள், கோவிலுக்கு வர, தேவஸ்வம் போர்டு சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
பல நுாறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்படும் இந்த நடைமுறையை எதிர்த்து, ஒரு சில அமைப்பின் சார்பிபல், உச்ச நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஆர்.எப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட், ஏ.எம்.கன்வில்கர் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகிய, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில், பெண் நீதிபதியான, இந்து மல்ஹோத்ரா தவிர, மற்ற நான்கு நீதிபதிகளும் ஒரே மாதிரியான
தீர்ப்பு வழங்கினர்.
அதன் விபரம்:
சபரிமலையில், பெண்களுக்கு தடை விதிக்கும் நடைமுறையை ஏற்க முடியாது. குறிப்பிட்ட வயதில், பெண்களுக்கே உரிய, உடல் ரீதியான மாற்றங்களை காரணம் காட்டி, சபரிமலை கோவிலில் நுழைய அவர்களுக்கு தடை விதிப்பது, பெண்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல்.
இழுக்கு
மத ரீதியிலான வழிபாட்டு நடைமுறைகள் என்ற பெயரில், பெண்களுக்கான வழிபாட்டு உரிமைகளை மறுப்பது, அவர்களின் அடிப்படை உரிமையை தட்டிப் பறிப்பதோடு, பெண்களின் கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்துவது போன்றது.வழிபாட்டு நடைமுறைகளில், ஆணும், பெண்ணும் சமம் என்பதை உறுதி செய்யும் வகையில், சபரிமலையில், அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.
வழிபாட்டு நடைமுறை, உடலியல் ரீதியான மாற்றங்கள் போன்றவற்றை காரணம் காட்டி, சபரிமலையில் பெண்களுக்கு தடை விதிப்பது, அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. அய்யப்ப பக்தர்கள் சங்கத்தினர், தங்களுக்கென தனியான வழிபாட்டு நடைமுறை விதிகளை அமல்படுத்த முடியாது.இவ்வாறு, நான்கு நீதிபதிகளும் தீர்ப்பு வழங்கினர்.
உச்ச நீதிமன்ற நீதிபதி, இந்து மல்ஹோத்ரா, இவர்களின் தீர்ப்பிலிருந்து மாறுபட்டார்.இந்து மல்ஹோத்ரா, தீர்ப்பில் கூறியதாவது:நம் நாட்டில் பல்வேறு மதங்களை சேர்ந்தோர் வசிக்கின்றனர். பல வகை வழிபாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
ஆழமான மத நம்பிக்கை அடிப்படையிலான விஷயங்களை, மதசார்பற்ற நிலைப்பாட்டுடன் தொடர்பு படுத்த முயற்சிக் கூடாது. அய்யப்ப பக்தர்கள், அவர்களின் வழிபாட்டு நடைமுறையை பின்பற்ற அனுமதிக்கப்பட வேண்டும்.இவ்வாறுஅவர் கூறியுள்ளார்.
ஐவரில், நான்கு நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியதை அடுத்து, 'சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் அமர்வு தீர்ப்பு வழங்கியது.உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அய்யப்ப தர்ம சேனா அமைப்பின் சார்பில், மேல்முறையீடு செய்யப்படும் என, அந்த அமைப்பின் தலைவர், ராகுல் ஈஸ்வரா தெரிவித்துள்ளார். இவர், சபரிமலை கோவிலின் முன்னாள் தந்திரி கண்டாரு மகேஸ்வரருவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்று சிறப்பு மிக்கது!
கேரள மாநில தேவஸ்வம் அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:வழிபாட்டு முறையில் பெண்களுக்கான சம உரிமையை பெறுவதற்காக நடந்த சட்டப்போராட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்றம், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. சபரிமலையில் மட்டுமின்றி, வழிபாடு நடக்கும் அனைத்து இடங்களிலும், பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வரவேற்பு!
சபரிமலை கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம், பெண்களின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. இது, ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என நம்புகிறேன்.
மேனகா, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், பா.ஜ.,
சிரமம் உள்ளது!
சபரிமலை விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. எனினும், நீதிமன்றதீர்ப்பை மதிக்கிறேன். தற்போதைய சூழ்நிலையில், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் செய்வதில் சிரமம் உள்ளது. இது குறித்து, தேவஸ்வம் போர்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்டரரு ராஜீவரு, சபரிமலை தலைமை தந்திரி
தேவஸ்வம் போர்டு அதிருப்தி
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, தங்களுக்கு அதிருப்தி அளிப்பதாக, தேவஸ்வம் போர்டு தலைவர், பத்மகுமார் தெரிவித்துள்ளார்.இது
குறித்து, பத்மகுமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது. தீர்ப்பு நகல் கிடைத்ததும், தீர்ப்பின் முழு விபரங்களையும் படித்து பார்த்து, சட்ட
வல்லுனர்கள், மதத் தலைவர்களுடன் ஆலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.மேல்முறையீடு செய்வதா அல்லது தீர்ப்பை அமல்படுத்துவதா என, உடனடியாக முடிவு செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
வழக்கு கடந்து வந்த பாதை...
1991
சபரிமலையில் வழிபட அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2006
ஜோதிடர் உன்னி கிருஷ்ண பணிக்கர், சபரிமலையில் நான்கு நாள் பூஜை நடத்தினார். கோயிலுக்குள் வயதுக்கு வந்த பெண் ஒருவர் வந்த அறிகுறி தென்படுவதாக கூறினார்.
2006
கன்னட நடிகை ஜெயமாலா, சபரிமலை கோயிலுக்குள் 1987ல் 28 வயதில் சென்றதாக கூறினார். இது குறித்து போலீசார் விசாரிக்க கேரள அரசு உத்தரவு. சில மாதங்களில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பின் சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கேரளாவை சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
2008
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு சென்றது. ஏழு ஆண்டுகள் விசாரிக்கப்பட வில்லை.
2016
ஜனவரி 11ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
2017
5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டது. விசாரணையில், கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என மாநில அரசு தெரிவித்தது. கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது.
2018
செப். 28ல் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதிஅளித்து உச்சநீதி
மன்றம் உத்தரவு.