Friday, January 30, 2015

வட போச்சே!! – நங்கநல்லூரில் கவரிங் செயினை அறுத்துச் சென்ற அறிவாளித் திருடர்கள்

வட போச்சே!! – நங்கநல்லூரில் கவரிங் செயினை அறுத்துச் சென்ற அறிவாளித் திருடர்கள்

சென்னை நங்கநல்லூரில் தங்க செயின் என்று நினைத்து கவரிங் செயினை திருடர்கள் பறித்துக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் கலகலப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த நங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகலா. இவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென ஸ்ரீகலாவின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்து சென்றனர். இதை கண்டதும் அப்பகுதியினர் சத்தம் போட்டனர். 

ஆனால் ஸ்ரீகலா பதறவே இல்லை. பின்னர் அவரே, "அது தங்கச்சங்கிலி இல்லை. கவரிங் நகை தான்" என்று விளக்கியபோதுதான் அப்பகுதியினர் நிம்மதியடைந்தனர். இருந்தாலும் அந்தத் திருடர்களைப் பிடிக்க ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிருக்கு போராடிய டிரைவர்... எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்!



பெரம்பலூர்: விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய எண்ணெய் லாரி டிரைவர், கிளீனரை காப்பாற்றாமல், லாரியில் இருந்து கொட்டிய எண்ணெய்யை பொதுமக்கள் பிடித்து சென்ற சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று இரவு சென்னையிலிருந்து தனியார் டேங்கர் லாரி ஒன்று பாமாயில் எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு, திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி பெரம்பலூர் மாவட்டம், துறைமங்களம் அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து. நெடுஞ்சாலைத்துறை டிவைடரில் ஏறி, தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில், டிரைவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கைகளிலும் காயம் ஏற்பட்டது. அதேபோல், கிளீனருக்கும் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

அதேநேரத்தில், விபத்தில் சிக்கிய லாரியின் டேங்கரில் இருந்து பாமாயில் எண்ணெய் ரோட்டில் கொட்டியது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், உயிருக்கு போராடிய டிரைவர் மற்றும் கிளீனரைப் பற்றி கவலைப்படாமல், தங்கள் வீடுகளில் இருந்து குடம் மற்றும் கேன்களை கொண்டு வந்து, பாமாயிலை பிடித்துச் சென்றனர். இதனால், இன்னும் மூன்று, நான்கு மாதங்களுக்கு அவர்கள் சமையல் எண்ணெய் வாங்க தேவையில்லை என்கின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.


இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய டிரைவர் மற்றும் கிளீனரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் சிக்கி, உயிருக்கு போராடியவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், தங்களுக்கு தேவையான எண்ணெய்யை மட்டும் பொதுமக்கள் பிடித்துச் சென்ற சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை காப்பாற்றவேண்டும் என்ற ஈவு, இரக்கம் கொஞ்சம் கூடஇல்லாமல், நம் மக்களின் மனம் இப்படி கல்நெஞ்சாக மாறிவிட்டதே என ஆதங்கப்படுகின்றனர் அவர்கள்.

-எம்.திலீபன்

நாயின் காலை துண்டாக்கிய கறிக்கடைக்காரர்!



சென்னை: நாயின் காலை துண்டாக்கிய கறிக்கடைக்கார் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


கடந்த 26ஆம் தேதி மாலை கூடுவாஞ்சேரி பிள்ளையார்கோயில் தெருவில் ஒரு நாய், பின்பக்க வலது கால் துண்டாகி, ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்களில் சிலர் பரிதாபத்துடனும், வேறு சிலர் எதையும் கண்டுக்கொள்ளாமலும் கடந்து சென்றனர்.

அப்போது அதேப் பகுதியை சேர்ந்த விஜய், இந்த காட்சியைப் பார்த்து நாய்க்கு உதவினார். அந்த நாயை அங்கிருந்து மீட்டு ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் கால்நடை கிளினிக்குக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் சுஜாதா, நாய்க்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்தார். இருப்பினும் துண்டான காலை ஓட்டமுடியவில்லை. இப்போது அங்கேயே அட்மிட் செய்யப்பட்டுள்ள அந்த நாய்க்கு தினமும் காலை, மாலை டிரிப்ஸ் ஏற்றப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பிறகு நன்றாக இருக்கும் நாய், 10 நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு அழைத்து செல்லப்படவுள்ளது.

நாய் குறித்து விசாரித்த போது அதை வளர்த்தவர் கூடுவாஞ்சேரியை சேர்ந்த கார்த்திக் என்றும், அந்த நாயின் பெயர் நிக்சன் என்றும் தெரியவந்தது. நிக்சனை குட்டியிலிருந்து செல்லமாக கார்த்திக் வளர்த்து வந்துள்ளார். இப்போது கிளினிக்கில் உள்ள நிக்சனை நன்றாக அவர் கவனித்து வருகிறார்.

நிக்சனை காப்பாற்றிய விஜய், 'பீப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா' என்ற அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். அந்த அமைப்பின் நிறுவனர் அருண்பிரசன்னா, கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் டில்லி பாபு, வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் நாயின் காலை துண்டாக்கியது அந்தப்பகுதியில் கறிக்கடை நடத்தி வரும் ரியாஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரியாஸ் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரியாஸை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து அருண் பிரசன்னா கூறுகையில், "சம்பவத்தன்று நிக்சன் என்ற நாயை விரட்ட கத்தியை தூக்கி வீசியுள்ளார் கறிக்கடைக்காரர் ரியாஸ். இதில் நாயின் முன்பக்க வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் அவர், கத்தியை தூக்கி வீசியதில் பின்பக்க இடது கால் தூண்டாகி உள்ளது. அதற்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி இருக்கிறோம். நாயின் காலை துண்டாக்கிய ரியாஸ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததால் எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களை அவர் மிரட்டினார். அதையும் காவல்துறையில் புகாராக கொடுத்து இருக்கிறோம்.

சென்னையில் ஆங்காங்கே கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதால் ஏற்படும் சுகாதாரசீர்கேட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதோடு நாய், மாடுகள் போன்ற கால்நடைகளை துன்புறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்" என்றார்.

சப்-இன்ஸ்பெக்டர் டில்லிபாபு கூறுகையில், "புகாரின் பேரில் ரியாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடி வருகிறோம்" என்றார்.

சம்பவத்தை நேரில் பார்த்த இன்ஜினியர் ராஜ்கணேஷ் கூறுகையில், "சிக்னலுக்காக பைக்கில் அந்தப்பகுதியில் நின்று கொண்டு இருந்தேன். அப்போது கறிக்கடை முன்பு ஒரு நாய் எதையோ தின்று கொண்டு இருந்தது. இதைப்பார்த்த கறிக்கடைக்காரர் ஆத்திரத்தில் கறி வெட்டும் அரிவாளை நாயின் மீது தூக்கி வீசினார். இதில் நாயின் பின்பக்க கால் துண்டாது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த நாய் ரோட்டில் கத்திக் கொண்டே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடியது. இதைப்பார்த்த நான், பைக்கை அந்த இடத்தில் விட்டு விட்டு நாயை துரத்தினேன். இதற்குள் நாய் ஒரு வீட்டுக்குள் புகுந்து கொண்டது. ரோடு முழுவதும் சிதறிக் கிடந்த ரத்தத்தை வைத்து நாயை கண்டுப்பிடித்து 'பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா' அமைப்பினரின் உதவியோடு நாயை கிளினிக்குக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தோம்.

நாயை காப்பாற்ற முயன்ற எங்களுடன் அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் தகராறு செய்தது வேதனையாக இருக்கிறது. இருப்பினும் நாயின் உயிரை காப்பாற்றியது எங்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

மனிதனுக்கே உதவாத இந்தக்காலத்தில் நாய்க்கு உதவிய மனிதநேயம் பாராட்டத்தக்கது!

-எஸ்.மகேஷ்

பிஎஸ்என்எல் சிம் ஆக்டிவேசன்: காவல்துறைக்கே இந்த கதின்னா..?!






15 ஆண்டுகளுக்கு முன்பு சிம்கார்டு வாங்குவது அவ்வளவு எளிதல்ல. அதுவும் அப்போது பிஎஸ்என்எல் நெட்வொர்க்தான் களத்தில் இருந்தது. போட்டி யாரும் கிடையாது என்பதால், அவ்வளவு எளிதில் சிம் வாங்கி விட முடியாது.

அப்படியும் அப்போது செல்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஒரு ஊரில் விரல் விட்டு எண்ணி விடலாம் செல்லுலார் போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையை. ஆனால், இன்றைக்கு அப்படியல்ல. எல்லோருடைய கையிலும் ஆறாம் விரலாகிப் போனது செல்போன். இதற்கு
காரணம் தொழில் புரட்சி என்று சொல்லலாம், தொழில் நுட்ப வளர்ச்சியென்றும் சொல்லலாம். இத்துறையில் ஏராளமான கம்பெனிகள் வந்து விட்டதால், போட்டோவும், ஐடி புரூப்பும் கொடுத்தால், சிம் ப்ரீ வித் ....... ரூபா டாக்டைம்னு கூவிக்கூவி விற்கிறான். சிம் வாங்கினா அரை மணி நேரத்தில் ஆக்டிவேசன் ஆகுது.

ஆனால், பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கிட்டு ஆக்டிவேசன் ஆக நான் பட்டபாடு எனக்குமட்டும்தான் தெரியும். சியூஜி பிளான் என்பதால் ஆபிஸில் கொடுக்கப்பட்டது அந்த சிம் கார்டு. அடுத்த நாள் ஆக்டிவேசன் ஆகும் என்று சொல்லி(?) கொடுக்கப்பட்டது. நாட்கள் நகர்ந்ததே தவிர ஆக்டிவேசன் ஆகவே இல்லை. பிஎஸ்என்எல்லின் கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டால், "1507-என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என பதில் கூவுகிறது. இல்லேம்மா எனக்கு சிக்னலே கிடைக்க மாட்டேங்குது என்றால், நீங்க பக்கத்தில் உள்ள பிஎஸ்என்எல் ஆபிஸ்ல போய் கேளுங்க" என்றார் அந்த பெண்மணி.

சரி தமிழ்நாட்டில் பிஎஸ்என்எல் ஹெட் ஆபீஸ் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் இருக்கு
என இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கு போய் கேட்டேன். "சாரி சார்.. நீங்க சிம் வாங்கினது ஆர்.ஏ.புரம் ஆபீஸ்ல.. சோ அங்க போய் கேளுங்க!" என்றார். அங்கிருந்த ஆபீஸர். இருப்பினும் இணைய தளத்தில் புகார் பதிவு செய்லாம்னு அங்கேயும் பதிவு செய்தேன்.

கிணற்றில போட்ட கல்லாட்டம் ரிப்ளே எதுவும் வரவில்லை. இணையத்திலேயே தேடி நோடல் ஆபிஸர் ஒருத்தர் நம்பரை தேடி கண்டுபிடித்து போன் பண்ணி விளக்கம் கேட்டேன். "என் நம்பர் எப்படி கிடைத்தது?" என எதிர்கேள்வி கேட்ட அவருக்கு விளக்கம் சொன்னேன். "ஓ... இன்னும் என் நம்பர் அதுல இருக்கா, நான் அந்த செக்சனில் இருந்து வெளியே வந்து 6 மாசம் ஆச்சு!" ன்னார்.

அவரே, ஒரு லேண்ட் லைன் நம்பரை கொடுத்து பேசச் சொன்னார். அந்த நம்பரில் தொடர்பு கொண்டு கேட்டப்ப, இன்னும் 24 மணிநேரத்தில் பிரச்சனை சால்வ் ஆகிடும் என்றார் அதில் பேசியவர். ஆனால், ஆகவில்லை. மறுநாள் ஆர்.ஏ.புரம் பிஎஸ்என்எல் ஆபிஸூக்கு போய் கேட்டேன். நாளைக்குள் ஆகிடும் என்ற அதே பழைய புராணம்தான். 2 நாள் கழித்து போய் நின்றேன்.

அந்த செக்சன் பார்க்கிற மிஸ்டர் பிரதாப், 3 நாள் லீவ், அதனால நீங்க வெள்ளிக்கிழமை வந்து பாருங்க.சரிங்க, அந்த பிரதாப் நம்பர் கொடுங்க, அவர்கிட்ட பேசிட்டே நான் வருகிறேன் என்றேன். "இல்லங்க நம்பர் எல்லாம் கொடுக்க மாட்டோம்!" என்றார் அந்த பெண்மணி. "நீங்க வேலை பார்க்கிறது தகவல் தொழில் நுட்ப துறையின் கீழ் உள்ள ஒரு நிறுவனம், அப்படி இருக்கையிலே, லேண்ட் லைனுக்கு கூப்பிட்டா யாரும் எடுக்கிறது கிடையாது, சம்பந்தப்பட்ட நபர் லீவ்ல இருக்கார். அடுத்து ஒவ்வொரு நாளும் நான் வந்து அலையுறதுக்கு, நீங்க நம்பர் கொடுக்கலாமே?" என்றேன்.

"நீங்க எது பேசுறதா இருந்தாலும் மேலே 6-வது மாடியில் எஸ்டிஇ இருக்காங்க, அவங்ககிட்ட போய் சொல்லுங்க!" என்றார் அந்த பெண்மணி. மேலே சென்று எஸ்டிஇயையும் பார்த்தேன். அவரும் மாலைக்குள் சரியாகி விடும் என்றார் ஆகவே இல்லை. மறுநாள் 10 மணிக்கு போய் நின்றேன் அந்த அலுவலகத்தில், நான் போட்ட சத்தத்தில் அந்த அலுவலகத்தின் தலைமை நிர்வாகியான மேலாளர் வந்தார். அவர் என்னிடம் கேட்டார்.

என்ன பிரச்சனை என்று. விபரத்தை சொன்னேன். அவர் கேட்டார் எந்த நம்பர் ஆக்டிவேசன் ஆகவில்லை என்று. அவரிடம் நான் சொன்னேன். இதுவரை நான் இந்த அலுவலகத்திற்கு 5-6 முறை வந்துவிட்டேன். ஒருத்தர் கூட கேட்கவில்லை ஆக்டிவேசன் ஆக வேண்டிய நம்பர் எதுவென்று. நீங்கள்தான் முதல் முறையாக கேட்டிருக்கிறீர்கள் என்று? அவரிடம் நம்பர் சொன்னேன்.

பதிலுக்கு அவரது நம்பரை கொடுத்தார். மாலையே ஆக்டிவேசன் ஆனது. சரியாக சிம் வாங்கி 29 நாட்கள் கழித்து.!

பின்குறிப்பு: அந்த சிம் தமிழ்நாடு காவல் துறையினர் உபயோகப்படுத்தும் சியூஜி சிம்.!

-எம்.செந்தமிழ் செல்வி
தேனாம்பேட்டை

பிரசவத்துக்கு போராடிய பசு... உதவிய என்ஜினீயரின் மனித நேயம்!

சென்னை: சென்னை நங்கநல்லூரில் நடுரோட்டில் மாட்டுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதில் உயிருக்குப் போராடிய மாட்டுக்கு மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து மாட்டையும், கன்றுக் குட்டியையும் டாக்டர்கள் காப்பாற்றினர்.

 நங்கநல்லூரில்  கடந்த 29ஆம் தேதி இரவு 9 மணி... போக்குவரத்து நெரிசல் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.  ம்மா.... யம்மா... .. என்றொரு அபயகுரல் மட்டும் நான்காவது மெயின் தெருவிலிருந்து வந்த வண்ணம் இருந்தது. இதை யாரும் கண்டுகொள்ளாமல் மக்கள் தங்களது வீடுகளுக்கு அவசரமாக சென்று கொண்டு இருந்தனர். நடுரோட்டில் மாடு ஒன்று, கன்றுவை ஈன்றெடுக்க முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தது. அந்த மாட்டின் அபயக்குரல்தான் அது. மனிதருக்கே உதவி செய்ய முன்வராதவர்கள் எப்படி இந்த மாட்டுக்கு உதவப் போகிறார்கள்? 

ஒருக்கட்டத்தில் அந்த மாடு, பெண் கன்றுக்குட்டியை ஈன்றெடுத்தது. ஆனால், நிலைமை பரிதாபம். கன்றுக்குட்டியுடன் தாய் மாட்டின் கர்ப்பபை, குடல் என உடலில் சில பாகங்கள் வெளியில் சரிந்திருந்தது. இதனால் தாய் மாடு உயிருக்குப் போராடியது. இதை அவ்வழியாக சென்ற ஐ.டி.துறையில் பணியாற்றும் செல்வம் என்ற இன்ஜினியர் பார்க்கிறார். படபடத்துப் போன அவர், முதலில் மாட்டை யாரோ வாகனத்தில் சென்றவர்கள் மோதி விட்டு சென்று விட்டார்கள் என்றே நினைத்துள்ளார்.

 பிறகு மாட்டின் அருகே சென்ற பிறகே அவருக்கு அங்குள்ள விபரீதம் தெரியவந்துள்ளது. உடனடியாக அவர், 'பீப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா' என்ற அமைப்புக்கு தகவல் கொடுக்க..... அதன் பொது மேலாளர் தினேஷ் சம்பவ இடத்தில் ஆஜராகினார். கால்நடை மருத்துவர் திரு மற்றும் இன்னொரு மருத்துவர் சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அந்த இடத்திலேயே சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். முதலில் மாட்டின் வயிற்றுக்குள் இருந்து வெளியேறிய பாகங்களை சுத்தப்படுத்தினர். பிறகு அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அந்தந்த இடத்தில் பொருத்தினார்கள். இதற்கு மூன்று மணி நேரமானது. இதன்பிறகு மாட்டையும், கன்றுக்குட்டியையும் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

இதுகுறித்து தினேஷ் கூறுகையில், "இதுவரை இப்படியொரு சம்பவத்தை என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்ததில்லை. மருத்துவருக்கு உதவியாளராக இருந்து அனைத்தையும் செய்தேன். அந்த தாய் மாடு பிரசவிக்கும் போது அதனுடைய கர்ப்பபை மற்றும் உடலில் உள்ள சில பாகங்கள் வெளியே வந்துவிட்டன. அவற்றை அந்த இடத்திலேயே உப்புத் தண்ணீரால் சுத்தம் செய்து அதே இடத்தில் அறுவை சிகிச்சை மூலம் வைக்கப்பட்டது. இந்த மாடு அரசின் இலவச மாடாகும்.
அந்த மாட்டின் உரிமையாளர் ஏழை விவசாயி கோவிந்தராஜன். அவரும் இந்த மாட்டை கவனிக்காமல் சாலையில் திரியும்படி விட்டுள்ளார். அந்த மாட்டின் பெயர் பொம்மி. இப்போது அந்த மாடு பெண் கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. மாட்டையும், கன்றுக்குட்டியையும் உரிய நேரத்தில் காப்பாற்ற உதவிய இன்ஜினியர் செல்வத்தின் பெயரையே அந்த கன்றுக்குட்டிக்கு சூட்டியுள்ளோம். இப்போது தாயும், கன்றுக்குட்டியும் நன்றாக இருக்கின்றன"என்றார்.

மனிதானாக இருந்தாலும்.. கால்நடைகளாக இருந்தாலும் அது உயிர் என்று ஒவ்வொருவரும் கருத வேண்டும்!

-எஸ்.மகேஷ்

PIO Card Officially Withdrawn

PIO Card Officially Withdrawn

The Embassy of India in Washington, DC, said that that according to Gazette Notification No.26011/01/2014IC.I dated 09.01.2015, all PIO (People of Indian Origin) cards issued till 09.01.2015 are deemed to be OCI card. PIO Card scheme has been withdrawn vide Gazette Notification No.25024/9/2014F.I dated 09.01.2015.

“All PIO applications, pending with the Mission for processing, are being returned to the applicants with a request to apply for OCI card on the same fee prescribed for the PIO card. Henceforth, applicants may apply for OCI card ONLY, as PIO card scheme is no longer in existence,” the Embassy said.

In case the PIO card holder has new passport then he/she can travel to India on their new passport with the valid PIO card and old passport mentioned on the PIO card.

Consular applicants (including OCI/PIO applicants) may visit the Consular and OCI/PIO Wings in the Embassy at 2536 Massachusetts Ave NW Washington DC 20008 from 11.00 am to 12:30 pm on all working days or send an email at consular@indiagov.org (for visa, passport, renunciation of Indian citizenship and miscellaneous services) and ocipio@indiagov.org (for OCI/PIO matters) for redressal of their grievances including those from the service provider.


source document:http://www.indianewengland.com/

ஷீரடி, மந்த்ராலயத்துக்கு சிறப்பு ஆன்மிகச் சுற்றுலா ரயில்



ஷீரடி, மந்த்ராலயம், பண்டேரிபுரம் உள்ளிட்ட ஆன்மிகத் தலங்களுக்கு செல்லும் சிறப்புச் சுற்றுலா ரயில் பிப்ரவரி 5-ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி. கூடுதல் பொது மேலாளர் எல்.ரவிக்குமார் தெரிவித்தார்.

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியது:

2014- 2015-ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் பல்வேறு சிறப்புச் சுற்றுலா, ஆன்மிக யாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி அனைத்து மதத்தினருக்கு ஏற்ப ஆன்மிக யாத்திரை ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தச் சிறப்பு யாத்திரை ரயில்களிலும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த ரயில்களில் 7 படுக்கை வசதி பெட்டியும், இரண்டு ஏ.சி. 3-ஆம் வகுப்பு பெட்டியும், ஒரு ஏ.சி. 2-ஆம் வகுப்பு பெட்டியும், ஒரு சமையல் அறை பெட்டியும், இரண்டு பவர் கார் என, மொத்தம் 13 பெட்டிகள் இருக்கும்.

ஏ.சி. பெட்டிகளில் 190 பயணிகளும், படுக்கை வசதி கொண்ட பெட்டியில் 510 பயணிகளும், மொத்தம் 700 பயணிகள் சிறப்பு யாத்திரை ரயிலில் செல்லலாம். யாத்திரை முழுவதும் தென்னிந்திய சைவ உணவு தயாரித்து வழங்க தனியே சமையல் அறை பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டிக்கும் சுற்றுலா மேலாளர்கள், பாதுகாவலர்கள் தனித்தனியே நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், யாத்திரையில் செல்லும் இடம் பற்றிய விவரங்கள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றை பயணிகளுக்குத் தெரிவிக்க பொது ஒலிப்பெருக்கி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள் விதிகளுக்குள்பட்டு எல்.டி.சி. வசதி பெறலாம்.

ஷீரடி, மந்த்ராலயம், பண்டேரிபுரம் செல்லும் குரு கிருப யாத்திரை ரயில் பிப்ரவரி 5- ஆம் தேதி புறப்படுகிறது. மஹாகாலேஸ்வர், ஓம்காரேஸ்வர், சோம்நாத், பீம்சங்கர், திரயம்பகேஸ்வர், கருநேஸ்வர், அவுண்ட்நாக்நாத், பார்லிவைத்யநாத், ஸ்ரீசைலம் செல்லும் நவ ஜோதிர்லிங்க யாத்திரை ரயில் பிப்ரவரி 14-ஆம் தேதியும் புறப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஜ்ஜ்ஜ்.ண்ழ்ஸ்ரீற்ஸ்ரீற்ர்ன்ழ்ண்ள்ம்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்தில் மேற்கொள்ளளாம் என்றார்.


தாய்லாந்து விமானச் சுற்றுப் பயணம்

தாய்லாந்து நாட்டுக்கு 5 நாள் சுற்றுப் பயணத் திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விமானச் சுற்றுப் பயணம் பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்குகிறது. நபர் ஒன்றுக்கு ரூ.33,600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றுலாவில் விமானப் பயணச் சீட்டு, மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி, ஏ.சி. வாகனம், உணவு, சுற்றிப் பார்க்கக்கூடிய அழகான இடங்களான பட்டாயா, பாங்காக். பயணக் காப்பீடு, சுற்றுலா தகவலர் ஆகியவை அடங்கும்.


யாத்திரை விவரங்கள்

குரு கிருப யாத்திரை: 7 நாள்கள் பிப்ரவரி 5-ஆம் தேதி மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கடலூர், விழுப்புரம், சென்னை எழும்பூரில் இருந்து புறப்பாடு.


ஸ்டேண்டர்டு பேக்கேஜ்: நபர் ஒன்றுக்கு ரூ.6,370. இதில் 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி. தங்கும் விடுதி, தென்னிந்திய சைவ உணவு, ஏ.சி. இல்லாத வாகன வசதிகள் அடங்கும்.


கம்பர்ட் பேக்கேஜ்: நபர் ஒன்றுக்கு ரூ.13,790. இதில் ஏ.சி. 3-ஆம் வகுப்பு பெட்டி. ஏ.சி. இல்லாத ஹோட்டல் அறைகள். தென்னிந்திய சைவ உணவு, ஏ.சி. வாகன வசதிகள் அடங்கும்.


டீலக்ஸ் பேக்கேஜ்: நபர் ஒன்றுக்கு ரூ.18,550. இதில் ஏ.சி. 2-ஆம் வகுப்பு பெட்டி, ஏ.சி. ஹோட்டல் அறைகள். தென்னிந்திய சைவ உணவு, ஏ.சி. வாகன வசதிகள் அடங்கும்.


நவ ஜோதிர்லிங்க யாத்திரை: 14 நாள்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி மதுரை, ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பாடு.



ஸ்டேண்டர்டு பேக்கேஜ்: நபர் ஒன்றுக்கு ரூ.12,470. இதில் 2-ஆம் வகுப்பு படுக்கை வசதிக்கொண்ட பெட்டி. தங்கும் விடுதி, தென்னிந்திய சைவ உணவு, ஏ.சி. இல்லாத வான வசதிகள் அடங்கும்.


கம்பர்ட் பேக்கேஜ்: நபர் ஒன்றுக்கு ரூ.27,580. இதில் ஏ.சி. 3-ஆம் வகுப்பு பெட்டி. ஏ.சி. இல்லாத ஹோட்டல் அறைகள். தென்னிந்திய சைவ உணவு, ஏ.சி. வாகன வசதிகள் அடங்கும்.


டீலக்ஸ் பேக்கேஜ்: நபர் ஒன்றுக்கு ரூ.37,100. இதில் ஏ.சி. 2-ஆம் வகுப்பு பெட்டி, ஏ.சி. ஹோட்டல் அறைகள். தென்னிந்திய சைவ உணவு, ஏ.சி. வாகன வசதிகள் அடங்கும்.


......... தொடர்புக்கு .........


சென்னை, புதுச்சேரி: 044-64594959, 9840902916, 9003140681


காட்பாடி: 9840948484, மதுரை: 9003140714, 9840902915


கோவை: 9003140680

NEWS TODAY 10.06.2026