Monday, September 12, 2016

நாங்கள் 'பாரதி' ஆனது இப்படித்தான்!

பாரதி’ என்ற பெயர் சொல்லும் போதே மீசை முளைக்கும் உணர்வு உண்டாகிறதல்லவா? மகாகவி பாரதியாரின் 95-வது நினைவுதினம் இன்று . 'பாரதி' என்று இயற்பெயர் வைக்கப்பட்டவர்கள் ஒருபுறம் என்றால் தன் பெயரையே பாரதி என்று மாற்றி வைத்துக் கொண்டோ அல்லது பாரதி என்கிற பெயரை தன்னோடு இணைத்துக் கொண்டவர்களையும் பார்க்க முடிகிறது. இந்த வீரக்கவிஞனின் பெயரை சேர்த்துக் கொண்ட பிரபலங்கள் தங்கள் பெயர்க்கதையை சொல்கிறார்கள் இங்கே!



இயக்குநர் பாரதிராஜா:
எனது சகோதரி பாரதியின் பெயரையும், சகோதரர் ஜெயராஜ் பெயரில் இருந்து ராஜாவையும் சேர்த்து 'பாரதிராஜா' என பெயரை வைத்துக்கொண்டேன். பாரதியாரின் கவிதைகளும் போராட்ட குணங்களும் எனக்கும் ரொம்பவே பிடிக்கும்.



கவிஞர் பழநிபாரதி:
என்னுடைய அப்பா கவிஞர் சாமி பழனியப்பன், கவிஞர் பாராதிதாசனின் மாணவராகவும், உதவியாளராகவும் இருந்தார். பாரதியார் மீதும் அதிக பற்றுக்கொண்டிருந்தார். அதனாலேயே எனக்கு 'பாரதி' என பெயர் வைத்தார். தவிர எங்கள் வீட்டில் எல்லோருக்குமே தமிழ் பெயர்தான். பள்ளி பருவத்திலேயே அப்பாவின் பெயரின் சுருக்கமாக 'பழபாரதி' என பெயரை மாற்றிக்கொண்டேன். ஒருமுறை கவிஞர் அறிவுமதிதான், 'பழனிபாரதி' என உன் பெயரை மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்குமே என சொல்ல, பின்னர் நானும் 8-ம் வகுப்பு படிக்கும்போது 'பழனிபாரதி' என பெயரை மாற்றிக்கொண்டேன்.

என்னுடைய சிறுவயதில் ஒருநாள் அப்பாவுடன் வெளியே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, 'கவிதை எப்படி எழுதணும்'னு அப்பாவிடம் கேட்டேன். சொல்கிறேன் எனச் சொன்னவர், வீட்டுக்கு வந்ததும் பாரதியார், பாரதிதாசன் இருவரின் கவிதை நூல்களை எனக்குக் கொடுத்தார். படித்துப்பார்...புரியாதவைகளை மட்டும் கேள் எனச் சொன்னதோடு, இருவரின் வாழ்க்கை வரலாற்றையும் விரிவாகச் சொன்னார். அப்படி சிறுவயதிலேயே எனக்கும் பாரதியார், பாரதிதாசன் இருவரின் மீது மிகுந்த பற்று ஏற்பட்டது. அதனுடன் அவர்களைப்போல தவறான பாதையில் செல்லாமல், மனநிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.



பாரதி பாஸ்கர்:
மலைமகளைக் குறிக்கும் வகையில் 'ஹேமா' என பெரிய அக்காவிற்கும், அலைமகளைக் குறிக்கும் வகையில் 'மஹாலட்சுமி' என சின்ன அக்காவிற்கு, கலைமகளை குறிக்கும் வகையில் 'பாரதி' என எனக்கும் பெற்றோர் பெயர் வைத்தார்கள். பாரதியார் மீது அதிக பற்றுக்கொண்டிருந்தார், என் அம்மா. அதனாலேயோ அல்லது 'பாரதி' என பெயர் வைத்து மறைமுகமாக கல்வி, கலைகளில் நான் திறமைமிக்கவளாக வளர வேண்டும் என நினைத்தும், மறைமுக கட்டையாகவும் அன்போடும், நம்பிக்கையோடும் பெற்றோர் எனக்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.

வாழ்வின் மிக கொடிய துயரங்களையும், மிகத்தூய்மையான வறுமையையும், சந்தோஷங்களையும் சந்தித்துள்ளார், பாரதியார். ஆனால், எந்த சூழலிலும் அறமற்ற செயல்களுக்கு தன்னை சமரசம் செய்துகொள்ளாமல், அஞ்சாமல், நேர்மையான வழியில், போராளியாகவே வாழ்ந்துள்ளார். குறிப்பாக சகோதரி நிவேதிதாவை சந்தித்த தருணத்தில், 'உங்களில் பெரும்பாலானோர் மனைவிகளை அடிமைகளாக வைத்துக்கொண்டு, நீங்கள் சுதந்திரத்திற்காக போராடினால் என்ன பயன் கிடைக்கப்போகிறது' என அவர் கூறிய வார்த்தைகள்தான் பாரதியின் வாழ்க்கையையே மாற்றிப்போட்டது. அதன் பின்னர்தான் முழுமூச்சாக பெண்களுக்காக நேரடியாகவும், தன் படைப்புகளின் வாயிலாகவும் போராடியதுடன், தன் மனைவி செல்லம்மாவை தலை நிமிர்ந்து நடக்கவும், தைரியமாக வாழவும் ஊக்கம் கொடுத்தார். ஒவ்வொரு நாளும் நான் எழுந்ததும் முதலில்,
'இனி என்னைப் புதிய உயிராக்கி
எனக்கேதுங் கவலையறச் செய்து
மதிதன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!' என்ற பாரதியின் பாடலை வாசித்துவிட்டுதான் அடுத்த செயல்பாட்டைத் தொடங்குவேன்.



பாரதி கிருஷ்ணகுமார்:
பாரதிதான் என் வாழ்வின் ஆதர்ஷம்; ஆசான். என்னுடைய இத்தனை வருட மேடைப் பேச்சுகளில் ஒன்றில்கூட பாரதியின் வரியை, பாரதியின் வாழ்வைக் குறிப்பிடாமல் அந்தப் பேச்சினை முடித்தது இல்லை. இந்த இயலாமையை நான் மகிழ்ச்சியோடு ஏற்கிறேன். 1989 அல்லது 90 என்று நினைக்கிறேன். பாரதி விழாவில் குன்றக்குடி அடிகளார் முன்னிலையில் பாரதியைப் பற்றி பேசினேன். பாரதியின் கவிதை வரிகளுக்கு நான் கூறிய விளக்கங்களைக் கேட்ட அடிகளார், 'இனி பாரதி கிருஷ்ணகுமார் என்றே அழைக்கலாமே' என்றார். என் பேச்சுக்கான அங்கீகாரமாக நான் உணர்ந்தாலும், மிகப் பெரிய ஆளுமையை என் பெயரோடு சேர்த்துக்கொள்வதற்கு தயங்கினேன். ஆனால் எழுத்தாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த கோவில் பட்டி, சாத்தூர் நண்பர்கள், கலை இரவுக்கு பேச அழைக்கும்போது பாரதி கிருஷ்ணகுமார் என்றே அழைப்பிதழில் குறிப்பிட்டனர். அப்போதும் எனக்குள் தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. பிறகு சினிமாவில் பணிபுரியும்போது, ஏற்கனவே கிருஷ்ணகுமார் எனும் பெயரில் இயக்குநர் இருந்ததால் டைட்டிலில், ஏதேனும் புனைப்பெயர் வைக்க, ஆலோசனை தந்தார்கள். ஆனால் பெற்றோர்கள் வைத்த என் பெயரை மாற்ற விருப்பம் இல்லாததால் பாரதி கிருஷ்ணகுமார் என்று வர சம்மதித்தேன். அப்போதும் தயக்கம் விடைபெறவில்லை. கிட்டத்தட்ட ஆறாண்டுக்கால உழைப்பில் பாரதியார் பற்றி 'அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி' என்ற நூலை எழுதிய பிறகே தயக்கம் நீங்கி பெருமிதம் கொண்டேன்.
இதிலுமா போலி?

போலி சான்று, போலி ஆசிரியர், போலி டாக்டர், போலி பல்கலைக்கழகம் வரிசையில் இப்போது போலி வங்கி நடத்தியதாக தர்மபுரியில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே கும்பல், நாமக்கல்லிலும் போலி வங்கி நடத்தி ரூ.50 லட்சத்துக்கு மேல் சுருட்டியுள்ளனர்.நல்லவேளை 6 மாதத்திற்குள் பிடிபட்டதால் ஏமாந்தவர்கள் எண்ணிக்கை குறைவு. பொருளாதார தாராளமயமாக்கலுக்கு பின்னர் பல பெயர்களில் பன்னாட்டு வங்கிகள் வருகை அதிகரித்தது. தற்போது பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் கிளைகள் 50 ஆயிரத்துக்கு மேல் நாடு முழுவதும் செயல்படுகிறது. தடுக்கி விழுந்தால் ஒரு வங்கி என்ற நிலை உருவாகி விட்டது. போதாக்குறைக்கு கடன் கொடுப்பதாக கூறி, வீட்டு வாசலிலேயே வங்கி ஊழியர்கள் தவம் கிடக்கும் நிலையில் சாதாரண மக்களுக்கு போலி, நிஜத்தை கண்டறிவதில் குழப்பம் இருப்பது இயற்கை. ஆனால் போலி வங்கி நடத்திய விவகாரம் அரசு துறையின் அதிகாரிகளுக்கே தெரியாமல் போனது தான் அதிர்ச்சியளிக்கிறது.

பொதுவாக ஒரு முன்னணி வங்கி நிறுவனம் கூடுதலாக ஒரு கிளையை ஏதாவது ஒரு கிராமத்தில் தொடங்குவதாக இருந்தாலும் அதை முறைப்படி ரிசர்வ் வங்கிக்கு தெரியப்படுத்தி அனுமதி பெறவேண்டும். அதோடு உள்ளூரில் மாவட்ட நிர்வாகம், பஞ்சாயத்து அனுமதி போன்றவையும் கட்டாயம். ஆனால் தர்மபுரியில் கலெக்டர் அலுவலகத்தின் அருகிலேயே 6 மாதங்களாக போலி வங்கி செயல்பட்டது. உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் முதல் அருகிலேயே செயல்பட்ட போட்டி வங்கி நிர்வாகத்தை கூட ஏறெடுத்து பார்க்காதது தான் விந்தையிலும் விந்தை. எல்லா சட்டமும் தெரிந்தவர்களுக்கே போலி வங்கி நடத்தப்பட்ட விவகாரம் தெரியாதபோது, அப்பாவி மக்களை நொந்து கொள்வதில் எந்த பலனும் இருக்கப்போவதில்லை.

போலிகள் விஷயத்தில் பொதுமக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது. மோசடியில் ஈடுபடும் கும்பல் எந்த ரூபத்திலும் வரக்கூடும். சமீபகாலங்களில் அடுத்தவர் வங்கி கணக்குகளில் இருந்து இணையங்களை பயன்படுத்தியும், போலி ஏடிஎம் கார்டை பயன்படுத்தியும் திருடும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. அதன் மற்றொரு ரூபம் தான் போலி வங்கி கலாச்சாரம். புற்றீசல் போல் பெருகி வரும் தனியார் வங்கிகள் குறித்த விழிப்புணர்வு அப்பாவி மக்களுக்கு குறைவு என்பது தான் மோசடி கும்பலுக்கு சாதகமான அம்சம். மேலும் அதன் பின்னணி குறித்த விஷயங்களை அறிந்து கொண்டு பணத்தை முதலீடு செய்வது அவசியம். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுவோரும் இருக்கவே செய்வர். ஏமாறாமல் இருப்பது நமக்கு உத்தமம்.
விபரீத காதல்

தமிழகத்தில் ஒருதலைக் காதலால் இளம் பெண்கள் வெட்டிக்கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. நுங்கம்பாக்கம் இன்ஜினியர் சுவாதி பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள ரயில் நிலையத்திலே வெட்டிசாய்க்கப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவம் மக்கள் மனதைவிட்டு அகலாத நிலையில் ஒருதலைக் காதலுக்காக விழுப்புரம் நவீனா, கரூர் சோனாலி, தூத்துக்குடி பிரான்சினா, தற்போது விருத்தாசலம் புஷ்பலதா என கடந்த 3 மாதத்தில் மட்டும் 4 பெண்கள் விலை மதிக்க முடியாத தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.
தான் விரும்பிய பெண் தனக்கு கிடைக்காவிட்டால் ஆசிட் வீசி அவளது முக அழகை கெடுக்கும் கொடூர செயல்களில்தான் கடந்த காலங்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது ஒரு படி மேலே போய் தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் வெட்டி சாய்க்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அரிவாளால் கழுத்தை அறுத்தும், தீவைத்து எரித்தும், கட்டையால் அடித்தும் கொலை செய்யும் கலாசாரம் இளைஞர்களிடையே அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.

காதலுக்காக தாடி வைப்பதும் தற்கொலை செய்துகொண்டதும் பழங்கதையாகிவிட்டது. தற்போது பழி உணர்வுதான் மேலோங்கி வருகிறது. இளைஞர்களின் இந்த கொடூர போக்கிற்கு சினிமா மற்றும் சமூக ஊடகங்களும் ஒரு காரணமாகிவிட்டது. தங்களது காதலை பெண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இளைஞர்கள் இருக்கின்றனர். பெண்களுடைய ஆசாபாசங்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. ஒருதலைக் காதலில் ஈடுபடும் இளைஞர்கள் கண்டிப்பாக மாற வேண்டும். அதுதான் தமிழ் சமூகத்துக்கு பெருமையை தேடித்தரும். இதுவரை நடந்த நான்கு பலி சம்பவங்கள் மூலம் தாழ்ந்து போய்க்ெகாண்டிருக்கும் தமிழ்நாட்டின் பாரம்பரிய பெருமையை மீண்டும் நிலைநிறுத்துவது இளைஞர்களின் கையில்தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தளம் புதிது: அல்ஜீப்ரா விதிகள்


கணித மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையிலான இணையதளங்கள் வரிசையில் வருகிறது ‘அல்ஜீப்ரா ரூல்ஸ்' இணையதளம். அல்ஜீப்ரா பாடத்தில் பயிற்சி பெறுவதற்கு உதவுவதற்கு என்றே பிரத்யேகமாகப் பல‌ தளங்களும் இருக்கின்றன என்றாலும், இந்தத் தளம் மிகவும் விஷேசமானது.

அல்ஜீப்ரா பாடத்துக்குத் தேவையான அடிப்படையான விதிகளை மட்டும் இந்தத் தளம் பட்டியலிடுகிறது. அடிப்படை விதிகள் அவற்றுக்கான உதாரணத்துடன் விளக்கப்பட்டிருப்பதுடன், எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் அவற்றின் தன்மைக்கேற்ப அழகாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு விதியாக சங்கிலித் தொடர் போல எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

அல்ஜீப்ராவில் படிப்ப‌வர்களுக்கு மட்டுமல்ல அல்ஜீப்ரா என்றால் எட்டிக்காயாக நினைப்பவர்களுக்கும்கூட இந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி:http://algebrarules.com/index.php

சிங்குர் தரும் படிப்பினைகள்...


THE HINDU

கடந்த 10 ஆண்டுகளாக இந்த பெயரை அறியாதவர்கள் இருக்க முடியாது. கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு பல படிப்பினைகளை உணர்த்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்குர் பகுதியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆலை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. ரத்தன் டாடாவின் கனவு திட்டமான நானோ கார் (ரூ. 1 லட்சம் விலை) ஆலை அமைக்க மாநில அரசு காட்டிய 6 இடங்களில் டாடா மோட்டார்ஸ் தேர்வு செய்தது சிங்குரைத்தான். அப்போது மேற்கு வங்க முதல்வராயிருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான அரசு டாடா மோட்டார்ஸுக்கு 997 ஏக்கர் நிலத்தை வழங்கியது.

விவசாய நிலமாக இருந்ததை தொழிற்சாலை கட்டுவதற்காக ஒதுக்கியதை அப்போது எதிர்க்கட்சியாய் இருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது.

ஆலைக்கு நிலம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து 26 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார் மம்தா பானர்ஜி.

2008-ம் ஆண்டு சிங்குர் ஆலையிலிருந்து நானோ கார்கள் சந்தைக்கு வரும் என டாடா நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆலைப் பணிகள் ஏறக்குறைய 70 சதவீதம் முடிவடைந்துவிட்ட நிலையிலும் போராட்டத்தின் தீவிரம் குறையவேயில்லை. இதையடுத்து 2008-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி சிங்குர் ஆலைத் திட்டத்தைக் கைவிடுவதாக ரத்தன் டாடா அறிவித்தார். அத்துடன் இந்த ஆலை குஜராத் மாநிலம் சனந்த் நகருக்கு இடமாற்றம் செய்வதாக அக்டோபர் 7-ம் தேதி அறிவித்தார்.

சிங்குரிலிருந்து டாடா நிறுவனம் வெளியேறியபோதிலும் நிலம் டாடா மோட்டார்ஸ் வசமே இருந்தது. நிலத்தை திரும்ப அளிக்க வேண் டும் என மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால் அந்த நிலம் தங்களுக்குத் தேவை என டாடா மோட்டார்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இழுபறியாக நீடித்து வந்த இந்த வழக்கு கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. நிலத்தை திரும்ப அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நிலத்தை 10 வாரங்களுக்குள் அளவிட்டு உரிய விவசாயிகளிடம் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

நிலத்தை அளவிடும் பணியை மாநில அரசு தொடங்கிவிட்டது. தனது அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி இது என்றும், மன நிம்மதியோடு இறப்பேன் என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் இந்த ஆலைக்கென டாடா நிறுவனம் ரூ. 1,400 கோடி வரை முதலீடு செய்துள்ளது. டாடா நானோ உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் 13 நிறுவனங்கள் முழுமையாக தங்களது ஆலையை இங்கு அமைத்திருந்தன. 17 நிறுவனங்களின் ஆலைகள் பல்வேறு கட்ட நிலையில் இருந்தன. அவை அனைத்தும் குஜராத்துக்கு இடம்பெயர்ந்தன. உதிரிபாக தயாரிப்பாளர்கள் மட்டும் ரூ.338 கோடி முதலீடு செய்திருந்தனர். அவை அனைத்தும் அப்படியே பாதியில் முடங்கியது.

நிலத்தை திரும்ப ஒப்படைப்பதால் டாடா நிறுவனத்துக்கு நிலத்துக்கு அளித்த தொகை திரும்பக் கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால் அந்தத் தொகை நிறுவனம் மேற்கொண்ட முதலீட்டுக்கு நிவாரணமாக அமையாது.

இந்தியாவில் பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. சில பல பகுதிகளில் ஆலைகள் அமைக்கவும் நிலங்கள் வாங்கப்பட்டு அவற்றில் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த அளவுக்கு எங்குமே பிரச்சினை ஏற்பட்டது கிடையாது. இது போன்ற எதிர்ப்பும் உருவானது கிடையாது.

விவசாய நிலங்களை அரசு கட்டாயப்படுத்தி வாங்கினால் அதன் விளைவு இப்படித்தான் இருக்கும் என்பதற்கு சிங்குர் வழக்கு ஒரு சிறந்த உதாரணம். அதே சமயத்தில் இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் என வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த தீர்ப்பு அவர்களுக்கு தவறான சமிக்ஞையை தோற்றுவிக்கவும் வாய்ப்புள்ளது.

சிங்குர் வழக்கு அரசியல்வாதி யான மம்தாவுக்கு பெரும் வெற்றியாக இருக்கலாம், தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு பின்னடைவாக இருக்க லாம். ஆனால் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதில் அரசிடம் தெளி வில்லை என்பதையே இது காட்டு கிறது. அதே நேரத்தில் விவசாயத்தை அழித்து தொழிற்சாலை உருவாவதை ஏற்க முடியாது என்பதையும் தீர்ப்பு உணர்த்தியுள்ளது.

Sunday, September 11, 2016


விமானத்தில் தனியே உலகம் சுற்றிய இளைஞர்

உலகிலேயே மிகக் குறைந்த வயதில் 15 நாடுகளுக்குத் தனியாக விமானத்தை ஓட்டிச் சென்றவர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் படைத்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த அந்த 18 வயது இளைஞரின் பெயர், லக்லான் ஸ்மார்ட். இவர், தனியாக விமானத்தை ஓட்டிக்கொண்டு உலகின் பல்வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என விரும்பினார்.

அதன்படி, ஆஸ்திரேலியாவின் மருச்சிடோர் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜூலை 24–ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கினார் ஸ்மார்ட்.

15 நாடுகளைச் சேர்ந்த 24 இடங்களுக்கு தனது சிறிய விமானத்தில் பறந்து சென்ற அவர், சமீபத்தில் தனது தாய்நாடு திரும்பினார். அப்போது ஸ்மார்ட்டுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்மார்ட், 18 வயது, 7 மாதம், 21 நாட்களில் விமானத்தைத் தனியாக ஓட்டி இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த மாத் குத் மில்லர், உலகின் குறைந்த வயதில் தனியாக அதிக நாடுகளுக்கு விமானத்தில் பறந்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரராக இருந்தார். அவரை ஸ்மார்ட் முந்திவிட்டார்.

இவர், 45 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 2 மாதங்களில் கடந்து இச்சாதனையைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி லக்லான் ஸ்மார்ட், தான் சாதனை படைப்பதற்கு உறுதுணையாக இருந்த தமது பெற்றோர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். மேலும், இந்தத் தருணம் தமது வாழ்வில் மிகவும் மறக்க முடியாதது ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

விமானத்தில் பறந்தபோது தனது ‘திரில்லிங்’ அனுபவம் பற்றி ஸ்மார்ட் கூறும்போது, இந்தோனேசியா அருகே சென்று கொண்டிருந்தபோது தொலைத்தொடர்பு தகவல் சரியாகக் கிடைக்காததால் விமானம் மலை மீது மோதவிருந்தது, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன் என்றார்.

சோதனைகளைக் கடந்துதானே சாதனை படைக்கணும்!
ஆக்கிரமிப்புகளுக்கு அதிகாரிகள்தான் பொறுப்பு

DAILY THANTHI

ஆதிகாலத்திலிருந்து தமிழ்நாட்டை மன்னர்கள் ஆண்டபோதும், ஆங்காங்கு ஜமீன்தாரர்கள் நிர்வாகத்திலும் சரி, தொடர்ந்து ஆங்கிலேயர் ஆட்சியிலும், பாசனவசதிக்காகவும், குடிநீர்வசதிக்காகவும், ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊருணிகள் அமைக்கப்பட்டன. நதிவளம் அதிகமில்லாத தமிழ்நாட்டில் பெய்கிற மழைநீரை இத்தகைய நீர்நிலைகளில் சேமித்துவைத்ததால்தான் பேருதவியாக இருந்தது. அந்தகாலத்திலேயே இவ்வளவு நீர்நிலைகள் இருந்தபோது, பெருகிவரும் ஜனத்தொகைக்கேற்ப இந்தகாலத்தில், புதிதுபுதிதாக நீர்நிலைகளை உருவாக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆனால், அவ்வாறு புதிய நீர்நிலைகள் உருவாக்கப்படாமல், தற்போது இருக்கும் நீர்நிலைகளிலேயே ஏராளமான ஆக்கிரமிப்புகள் உருவாகிவிட்டன. நீர்நிலைகளின் ஓரங்களில் முதலில் கட்டிடக்கழிவுகள், குப்பைகளைக்கொட்டி தரையாக்கிவிட்டு, அடுத்தமாதங்களுக்குள்ளேயே பட்டா போட்டுவிற்கும் கொடிய செயல்கள் எல்லா இடங்களிலும் அரங்கேறுகிறது. அவ்வப்போது நீதிமன்ற தீர்ப்புகள், பத்திரிகைகளில் படம்போட்டு காட்டும் காட்சிகள் வழங்கப்பட்டாலும், ஆக்கிரமிப்புகள் மட்டும் குறைந்தபாடில்லை. இந்த நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளில் மட்டும் சாதி, மத வேறுபாடின்றி, அதிலும் மிகவும் முக்கியமாக அரசியல்கட்சிகள் வேறுபாடில்லாமல் ஒற்றுமையாக இருப்பதை பார்க்க முடிகிறது.

சென்னையில், சேலையூரிலுள்ள ராஜகீழ்ப்பாக்கம் ஏரி பாதியாக சுருங்கி, 3 புதிய வார்டுகள், நகராட்சியில் உருவாகும் வகையில் வீடுகள் கட்டப்பட்டுவிட்டன. இந்த வீடுகளுக்கெல்லாம் சாலைவசதி, குடிநீர்வசதி, மின்சாரவசதி, ரேஷன் கார்டு என எல்லாவசதிகளையும் அதிகாரிகள் வேகமாக செய்துதந்துவிட்டனர். ‘‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’’ என மாநிலம் முழுவதிலும் இவ்வாறு அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டாபோட்டு கொடுப்பதும், அனைத்து அடிப்படைவசதிகளை செய்வதும் ஏன்?, அனைத்திற்கும் பின்னணியாக ஊழல்தான் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. சென்ற ஆண்டு சென்னையில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பை பார்வையிட வந்த மத்தியகுழு அதிகாரிகள், சென்னையிலுள்ள நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளைக்கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஆர்.மகாதேவன், சேலம் மாவட்டத்திலுள்ள 105 நீர்நிலைகளில் இவ்வாறு ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டாபோட்டு கொடுத்த அதிகாரிகளை எவ்வாறு பதில் சொல்லவைக்கலாம்? என்ற பொறுப்புகடமையை அவர்கள்மீது சுமத்தவேண்டியது குறித்து தமிழக அரசின் வருவாய்த்துறை தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த நீர்நிலைகளில் எல்லாம் புதிதுபுதிதாக வீடுகள் தோன்றுவதற்கு ஆக்கிரமிப்பு வசதிகளுக்கு அதிகாரிகள் பட்டாபோட்டு கொடுத்திருப்பது நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தவுடன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், சென்னை வெள்ளம் தொடர்பாகவும், சென்னை நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்பதற்காகவும் தொடரப்பட்ட வழக்கில், அடையாறு கரைகளில் 28 குடிசைப்பகுதிகள் ஆக்கிரமிப்பால் தோன்றியதுதான், சென்னை நகருக்குள் பாய்ந்த வெள்ளத்துக்கு காரணம் என்றும், நீர்போக்குவரத்து வழியாக தேசிய நீர்வழி சட்டத்தின்கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டதையும் பட்டவர்த்தனமாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்குகளில் உயர்நீதிமன்றம் இறுதித்தீர்ப்பை வழங்கும்போது, சென்னை, சேலம் மாவட்டத்தோடு நிறுத்திவிடாமல், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்று சமுதாயம் எதிர்பார்க்கிறது. தமிழக அரசும் இதுதொடர்பாக உடனடியாக தீவிரநடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாட்டிலுள்ள கால்வாய்கள், ஏரிகள், வாய்க்கால்கள், குளங்கள், குட்டைகள் எல்லாவற்றையும் சர்வே எடுத்து, எங்கெங்கு ஆக்கிரமிப்பு இருக்கிறதோ?, அங்கு உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்கவேண்டும். இதில் அரசின் கடமை மட்டுமல்ல, அடுத்தமாதம் நடைபெற இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள், அதாவது கிராமப்பஞ்சாயத்து, நகரப்பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து அமைப்புகளிலும் இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதே தங்களின் முதல்கடமையாக எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும். முதல்கட்டமாக தமிழ்நாட்டிலுள்ள 39 ஆயிரத்து 202 ஏரிகளும், அதன் முழுப்பரப்பில் இருக்கிறதா? என்பதை சர்வேசெய்து, எவ்வளவு ஆக்கிரமிப்பு இருக்கிறது? என்பதை தமிழக அரசின் பொதுப்பணித்துறையும் கணக்கிடவேண்டும். மாநிலத்தின் சராசரியான ஆண்டு மழை 911.60 மி.மீ. தண்ணீரை முழுமையாக சேகரித்துவைக்க வேண்டுமெனில், அனைத்து நீர்நிலைகளும் முழுகொள்ளளவும் இருக்கும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும்.

NEWS TODAY 08.06.2026