Wednesday, December 14, 2016

தமிழகத்தை கொடூரமாக தாக்கிய கோரப் புயல்கள் ஒரு பார்வை...!

Published on : 13th December 2016 07:55 PM 

இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு இந்தியா, இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, மியான்மர், மாலத்தீவு, ஓமன் ஆகிய நாடுகள் சுழற்சி முறையில் பெயர் சூட்டி வருகின்றன. புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000-ஆம் ஆண்டில் தொடங்கியது. தில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004-ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன. இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), லெஹர் (அலை). மேக், சாகர், வாயு. இந்த 8 பெயர்களுமே பஞ்ச பூதங்களை குறிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைப் பொறுத்தவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004-ஆம் ஆண்டில்தான் உருவானது. அப்படி இருக்க 1994-ஆம் ஆண்டில் பெயர் வைக்கவில்லையே தவிர தற்போது சென்னையைத் தாக்கிய வர்தா புயல் "அதிதீவிர"ப் புயல் ஒன்று சென்னையைத் தாக்கியது.
1994- அக்டோபர் இறுதியில் வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த அந்தப் புயல், சென்னை - கடலூர் இடையே 115 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது. அப்போது பலத்த காற்றுடன் பெய்த கனமழைக்கு, தமிழகத்தில் 26 பேர் உயிரிழந்தனர். புயல் கரையைக் கடந்த பிறகும், 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.



ஃபானூஸ் புயல்:
அடுத்து தமிழகத்தைத் தாக்கிய பெரும் புயல்களில் ஒன்று ஃபானூஸ் புயல். கடந்த 2005-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் உருவான இந்த புயல், டிசம்பர் 7-ஆம் தேதி, மணிக்கு 101 கிலோமீட்டர் வேகத்தில் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. இந்த புயலால் சுமார் 25 ஆயிரம் பேர் வீட்டை விட்டு வெளியேற நேரிட்டது. அதோடு, வட தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும், விவசாயத்தையும் இப்புயல் கடுமையாக பாதித்தது.


நிஷா புயல் : ஃபானூஸ் புயலை அடுத்து தமிழகத்தைத் தாக்கிய கடும் புயல் நிஷா. கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான இந்த புயல், மறுநாள் மணிக்கு சுமார் 83 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது. இப்புயலால் தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, 189 பேர் உயிரிழந்தனர்.


ஜல் புயல்: கடந்த 2010-ஆம் ஆண்டு தென் சீனக் கடலில் உருவான ஜல் புயல், இந்தியப் பெருங்கடல் நோக்கி நகர்ந்த இந்த புயல், நவம்பர் மாதம் 6-ஆம் தேதி அன்று மணிக்கு சுமார் 111 கிலோமீட்டர் வேகத்தில் சென்னை அருகே கரையை கடந்தது. இந்த புயலால், 70 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த புயல் சீற்றத்தால் 54 பேர் உயிரிழந்தனர். பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லாமல் தப்பித்தது தமிழகம்.


தானே புயல்: கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி இந்திய பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவான தானே புயல், மணிக்கு சுமார் 165 கிலோமீட்டர் வேகத்தில் டிசம்பர் 30-ஆம் தேதி புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடையே கரையைக் கடந்தது. இந்த புயலால், 46 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பலரது வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்துபோனது. எண்ணற்ற வீடுகள் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விவசாய பயிர்கள் நாசமாகின. கடலூர், நாகை. காரைக்கால், புதுச்சேரி, விழுப்புரம் மாவடங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் இப்போது கூட முழுமையாக சீரடையவில்லை.


நீலம் புயல்: 2012-ஆம் ஆண்டு 28-ஆம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையமாக உருவான நீலம் புயல், அக்டோபர் 31-ஆம் தேதி மணிக்கு 83 கி.மீட்டர் வேகத்தில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. இதனால், கடல் நீர் 100 மீட்டர் அளவுக்கு நகருக்குள் புகுந்தது. நீலம் புயல் சீற்றத்தால் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறினர். சுமார் 450 மின் கம்பங்கள் சாய்ந்தன.


மடி புயல்: கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி உருவான மடி புயல், மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி வழியாக கரையை கடந்தது. இதன் பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் வெளியேற்றப்பட்டனர். இதனால், அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.


வர்தா புயல்: 22 ஆண்டுகளுக்குப் பிறகு, தென்கிழக்கு வங்கக்கடலில் 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவான அதிதீவிரப் புயலான “வர்தா” புயல், டிசம்பர் 12-ஆம் தேதி மாலை மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை புறநகர் பகுதியான பழவேற்காடு அருகே 6.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்தது. வர்தா புயலின் கடும் சீற்றத்தால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. சென்னையில் அதிக பாதிப்பை வர்தா புயல் ஏற்படுத்தியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. சென்னை மட்டும் ஏற்பட்டுள்ள சேதங்களின் மதிப்பு ரூ.1000 கோடியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. வர்தா புயலுக்கு இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையை தலைகீழாக புரட்டிப்போட்ட அதிதீவிர புயலுக்கு "வர்தா' என பாகிஸ்தான் பெயரைச் சூட்டியது. உருதுச் செல்லான வர்தாவுக்கு தமிழில் சிவப்பு ரோஜா என்று பொருளாகும். இந்த ரோஜாவின் தாக்கத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

10 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம்: 3 நாள்களுக்குள் மின்விநியோகம் சீராகும்: மின் வாரியம் அறிவிப்பு


By DIN | Published on : 14th December 2016 12:55 AM 

 வர்தா புயலின் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் 10 ஆயிரம் மின்கம்பங்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், 3 தினங்களில் சென்னை புறநகர் பகுதிகளில் மின்விநியோகம் சீராகும் என்றும் தெரிவித்துள்ளது.
வர்தா புயலின் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்டவை சேதமடைந்தும், முழுவதுமாக பெயர்ந்து விழுந்தும் விட்டன. இதற்கான சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், படப்பை அருகே உயர் மின் கோபுரத்தை சீரமைக்கும் பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவரும் மேலாண் இயக்குநருமான எம்.சாய்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து புயலின் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் குறித்தும், சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மின்விநியோகம் தடைபட்டுள்ளது.
10 ஆயிரம் மின்கம்பங்கள்: வர்தா புயலால் இதுவரை 10 ஆயிரம் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், மரங்கள் பெயர்ந்து விழுந்ததாலும், கிளைகள் உடைந்து விழுந்ததாலும், 450 மின்மாற்றிகள் பழுதடைந்துள்ளன. 24 உயர் அழுத்த மின் கோபுரங்கள் சேதமடைந்துள்ளன.
3 ஆயிரம் மட்டுமே இருப்பு: சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றுவதற்கு 3 ஆயிரம் மின்கம்பங்கள் மட்டுமே கையிருப்பில் இருந்தன. எனவே, பிற மாவட்டங்களில் இருந்து மீதம் 7 ஆயிரம் மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தற்போது சீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான மின்கம்பங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்ட அனைத்து தளவாடங்களும் கையிருப்பில் உள்ளன.
பணியில் 9 ஆயிரம் ஊழியர்கள்: வரலாறு காணாத இந்தச் சேதத்தை சீரமைப்பதற்காக சென்னையில் உள்ள 6 ஆயிரம் மின் ஊழியர்கள், அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர பிற மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் 70 அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
மின்உற்பத்தி நிலையங்கள் இயக்கம்: சென்னையில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் இயக்கத்தில் உள்ளன. இதனால் போதுமான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் பேசின் மேம்பாலம் வாயு மின் உற்பத்தி நிலையத்திலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
மின்சாரம் விநியோகம்: சென்னையில் இதுவரை ராஜ்பவன், ஈக்காட்டுத்தாங்கல், மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை, பரங்கிமலை, கோடம்பாக்கம், அசோக் நகர், ராமசாமி சாலை, பி.டி. ராஜன் சாலை, ஜெருகம்பாக்கம், மதாண்டாபுரம், லட்சுமி நகர், அய்யப்பன்தாங்கல், ஸ்ரீ ராமச்ந்திரா மருத்துவமனை, காரப்பாக்கம், குன்றத்தூர் சாலை, மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம், லஸ், ராயப்பேட்டை, அபிராமபுரம், எம்.ஆர்.சி.நகர், மந்தைவெளி, அடையாறு, வேளச்சேரி, கொட்டிவாக்கம், சிறுசேரி, திருவான்மியூர், பெசன்ட் நகர், இந்திரா நகர், அம்பத்தூர், ஆவடி, அண்ணாநகர், முகப்பேர், அரும்பாக்கம், மதுரவாயல், திருவேற்காடு மற்றும் கோயம்பேடு ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சீரமைக்கப்பட்டு, மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
3 நாள்களில் மின்விநியோகம்: சென்னை மாநகராட்சியின் அனைத்துப் பிற பகுதிகளிலும் துரித கதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகரத்தில் செவ்வாய்க்கிழமை இரவுக்குள் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புறநகர் பகுதியில் அடுத்த 3 நாள்களுக்குள் மின்சாரம் விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சசிகலாவுக்கு சமூக வலைதளங்களில்
எதிர்ப்பு : அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிர்ச்சி

அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் சசிகலாவுக்கு எதிராக, சமூக வலைதளங்களில் பரவி வரும் கருத்துக்கள், அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

ஜெயலலிதா மறைவை அடுத்து, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் முதல்வரானார். அவர் ஏற்கனவே இரு முறை, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் என்பதால், கட்சியில் சலசலப்பு ஏற்படவில்லை.
ஆனால், சசிகலா பொதுச் செயலராவார் என்ற தகவல், கட்சியினரிடம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பர் என, தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தங்கள் பதவியை இழக்க விரும்பாத மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், ஏழு நாட்கள் துக்கம் முடியும்முன், 'தலைமை ஏற்க வாருங்கள்' என, சசிகலாவை

சந்தித்து வலியுறுத்தினர்.

நேர் பாதியாக திகழ்ந்தவர் சசிகலா

இது, அ.தி.மு.க., தொண்டர்களிடம் மட்டுமின்றி பொதுமக்களிடமும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவுக்கு எதிராக, சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதற்கு
சசிகலா ஆதரவாளர்களும், பதில் அளித்து வருகின்றனர்.
'ஜெயலலிதா செயல்பாடுகளில், நேர் பாதியாக திகழ்ந்தவர் சசிகலா. அவருக்கு, நல்ல அரசியல் அனுபவம் உள்ளது. தற்போதைய நிர்வாகிகளை காட்டிலும், அதிக தலைமை பண்புடையவர்' என, அவரது புகழை பரப்பி வருகின்றனர். எதிர் தரப்பினரோ, 'சாக்லேட்டுடன் ஒட்டியிருந்த காகிதம் என்பதற்காக, காகிதத்தையும் சேர்த்து உண்ண முடியாது' என, பதில் அளித்துள்ளனர்.

1989 தேர்தலில்

'ஜெயலலிதா முகத்துக்காக, யாரும் ஓட்டளிக்கவில்லை. இரட்டை இலை சின்னத்திற்காகவே மக்கள் ஓட்டளித்தனர்' என, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாக, தகவல் வெளியானது.
அதற்கு,'இரட்டை இலை சின்னம் இல்லாத, 1989 தேர்தலில், ஜானகியை விட, அதிக வாக்காளர்களை கவர்ந்து, வெற்றி பெற்றவர்

ஜெயலலிதா. சரி, சசிகலாவிற்கு ஆதரவு கொடுக்கும், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், ஜெ., பிரசாரத்தால் வெற்றி பெற்றவர்கள். பதவியை, ராஜினாமா செய்து விட்டு, சசிகலாவை பிரசாரம் செய்ய சொல்லி, ஆட்சியை பிடியுங்கள் பார்ப்போம்' என, சவால் விட்டுள்ளனர்.
மேலும் சசிகலாவிற்கு ஆதரவாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறிய கருத்துக்களை வெளியிட்டு, அதன் கீழ், 'எம்.ஜி.ஆர்., படத்துடன், சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்; ஒரு மானம் இல்லை; அதில் ஈனம் இல்லை. அவர் எப்போதும் வால்பிடிப்பார்' என, அவர் படத்தில் வந்த பாடலையே பதிவிட்டுள்ளனர்.
இதுபோல், சசிகலாவுக்கு எதிராக, ஏராளமான கேலி, கிண்டல் செய்யும், 'மீம்ஸ்'களை வெளியிட்டு வருகின்றனர். இது, சசிகலாவை முன்னிறுத்தும், அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. - நமது நிருபர் -
தானே'வை ஞாபகப்படுத்திய வர்தா!
அதே பாதை, அதே அவதாரம்

சென்னையில், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மரங்களை சாய்த்த, 'வர்தா' புயலின் கோர தாண்டவம், ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய, 'தானே' புயலை ஞாபகப்படுத்தி உள்ளது.

வங்க கடலில் பொங்கி எழுந்த, வர்தா புயல், தமிழகத்தில், வட மாவட்டங்களையும், ஆந்திராவின் தென் மாவட்டங்களையும்

சிதைத்து சென்றது. மழை கொட்டித் தீர்த்தது மட்டுமின்றி, மரங்களை கொத்து கொத்தாக வேரோடு பெயர்த்த வர்தாவின் ஆக்ரோஷம், ஐந்தாண்டுகளுக்கு முன், கடலுாரை புரட்டிப் போட்ட,தானே புயலை ஞாபகப்படுத்தியுள்ளது.

கடலுாரும் சீர்குலைந்தது.

வங்க கடலில், 2011ல், அந்தமானுக்கு மேற்கே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக வலுப்பெற்று, டிச., 31ல், கடலுாரில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு, 120 கி.மீ., வேகத்தில்வீசிய காற்றால், 1.5 லட்சம் ஏக்கரில் இருந்த, முந்திரி மற்றும் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன; மொத்த கடலுாரும் சீர்குலைந்தது.அதேபோன்று, தானே உருவான இடத்திற்கு தென் கிழக்கில், வங்க கடலில் உருவான வர்தா

புயல், அதே பாதையில் வந்து, கடலுாருக்கு பதில், சற்று வடக்கே திரும்பி, சென்னையை பதம் பார்த்துள்ளது. கடலுாருக்கு அன்று ஏற்பட்ட பாதிப்பை, சென்னை இன்று உணர்ந்துள்ளது. - நமது நிருபர் -
வர்தா' புயலால் அதிகாரிகள் பாடம் கற்பரா? பசுமை இழந்த சென்னை மாநகரம்

சென்னை அருகே, நேற்று முன்தினம், 'வர்தா' புயல், கரையைக் கடந்தது. இதனால், சென்னை நகரில், 5,000க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.
வேர் பிடிப்பு இல்லாத மரங்களை நட்டதால் தான், சேதம் அதிகமானது என, பசுமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். வங்கக் கடலில் மையம் கொண்ட, 'வர்தா' புயலின் மையம், நேற்று முன்தினம், மாலை, 3:30 மணிக்கு, சென்னை துறைமுகம் அருகே, 100 - 110 கி.மீ., வேகத்தில் கரையை கடந்தது. இதை தொடர்ந்து, புயலின் கிழக்குப் பகுதி, மாலை, 6:30 மணிக்கு கரையை கடந்தது.
புயலின் தாக்கத்தால், சென்னையில், 5,000க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டன. இந்தியாவில், மாநகரங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை, டில்லி, மும்பை, ஐதராபாத் ஆகிய வற்றை விட, சென்னை மிகவும் பின்தங்கி உள்ளது. டில்லி நகரின், மொத்த பரப்பில், 25 சதவீதம் வரை, பசுமைப் போர்வை உள்ளது. ஆனால், சென்னை யில், 9 சதவீதத்திற்கும் குறைவாகவே, மரங்களின் பரப்பு உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், சென்னையில், கட்டுமானப் பணிகளுக்காக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. மத்திய அரசு வெளியிட்ட வனத்துறை கணக்கெடுப்பில், சென்னையில் பசுமை போர்வை வேகமாக குறைந்து வருவது தெரியவந்தது.
இந்நிலையில், 'வர்தா' புயலால், சென்னை மாநகரில், மரங்கள் விழுந்து கிடக்காத சாலைகளே இல்லை. சிறிதும், பெரிதுமாக மரங்கள் வேரோடு விழுந்து கிடந்தன. மரங்கள் விழுந்ததால், போக்கு வரத்து முற்றிலும் பாதித்தது; மேலும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன.மரங்கள் சரிந்து விழுந்ததற்கு, புயல் மட்டும் காரணமல்ல, அரசு அதிகாரிகளும் தான் என, பசுமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: சென்னையில், வெளிநாட்டை சேர்ந்த, வேர்ப்பிடிப்பு இல்லாத, துாங்கு மூஞ்சி மரங்கள் தான் அதிகம் நடப்பட்டுள்ளன. அந்த மரங்கள், சாதாரண காற்றுக்கே தாங்காது; 110 கி.மீ.,க்கும் அதிகமான வேகம் கொண்ட புயலை, எப்படி தாங்கும். சென்னையில், மரங்களை நடுகிறோம் என்ற பெயரில், வேர் பிடிப்பு இல்லாத மரங்களை நடுவதால், பயன் ஏதும் இல்லை. நம் நாட்டு மரங்கள், அதிகளவு கார்பன் - டை - ஆக்ஸைடு வாயு உட்கொண்டு, அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடும். அத்தகைய மரங்களை நடுவதால், மண்ணுக்கும், மக்களுக்கும் பயன் இருக்கும். இத்தகைய மரங்கள், புயல் காற்றில், எளிதில் சாய்ந்து விடாது.அரசு அதிகாரிகள், 'வர்தா' புயலில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இனிமேல், வேர் பிடிப்பு இல்லாத மரங்கள் நடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மரங்களை மீண்டும் நட வேண்டும்
வேருடன் சாய்ந்த மரங்கள், 20 நாட்கள் வரை, உயிருடன் இருக்கும். எனவே, புயலில் சாய்ந்த மரங்களின், கிளைகளை வெட்டி விட்டு, அடிமரத்தை நிமிர்த்தி, வேருடன் அதே இடத்தில் நட்டு வைக்க வேண்டும். அந்த மரம், இரண்டு மாதத்திற்குள், துளிர் விட ஆரம்பித்து விடும். கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட புயலில், சாய்ந்த, அடையாறு ஆலமரம், நிமிர்த்தி நடப்பட்டு, இரண்டு மாதத்தில் துளிர்விட்டது. இதே முறையை, வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் துணையுடன், சென்னை மாநகராட்சி மேற்கொண்டால், சென்னையின் பசுமைப் போர்வையை காப்பாற்ற முடியும்.


- நமது நிருபர் -
'வாழ்ந்து விடு...' மிரட்டிச் சென்ற 'வர்தா'

மத்திய சென்னை. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு. பனியில் தலை குளித்துக் கொண்டிருந்தது, என் வீட்டின் மொட்டை மாடி.'வர்தா புயல் நெருங்கி வந்திருச்சு. சாயங்காலத்துக்கு மேலே மழை வரும்னு சொன்னாங்க... ஒண்ணையும் காணோம்...' பக்கத்து வீட்டுக்காரர், தோள் துண்டால் முதுகு துடைத்தபடி கேட்டார்.

'அவங்க சொல்றது என்னைக்கு சரியா நடந்திருக்கு...' குளிரில் துவண்டிருந்த மூளைக்கு, புதிதாய் எதுவும் தோன்றாததால், மொக்கையாய் இப்படிச் சொல்லி சலித்துக் கொண்டேன்.

எதிர் வீட்டின் முன் இருந்த பெரிய வேப்ப மரம், சாதுவாய் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. கையிலிருந்த அலைபேசி சிணுங்க, எடுத்துப் பார்த்தேன். மணி, 8:00. அழைத்தது, தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் உறவுக்காரர்.

'வர்தா' பற்றி விசாரித்த உறவுக்காரரிடம், 'அப்படில்லாம் இருக்காது. நிலா கூட தெளிவா தெரியுதுன்னா பாரேன்' என்றேன். எதிர் வீட்டில், வேப்ப மரத்தையும் விஞ்சி நின்றிருந்த மொபைல் போன் டவர், என்னை முறைத்துக் கொண்டிருந்தது.

'மழை வர்றதா இருந்தா, குளிர் குறைஞ்சிருக்குமே' அனுபவப் பாடம், குளிரோடு சேர்த்து மனதை சிலிர்க்க வைக்க, அக்குளிரை நிறைத்தது, குருமா வாசம். இரவு உணவாக வீட்டில் தயாராகி கொண்டிருந்த சப்பாத்தி நினைவுக்கு வர, கீழிறங்க, மாடிப்படியை நெருங்கினேன்.

அப்போது, என் தோளில் விழுந்தது ஒரு துளி. அம்மழைத் துளியை, பெரும் அபாயத்திற்கான சிறு எச்சரிக்கையாய் கூட நான் உணரவில்லை.

நள்ளிரவு 12:00 மணி. 'மழை பெய்யுதுன்னு நினைக்கிறேன்' என, மனைவி சொல்ல, ஜன்னல் கதவை திறந்தேன். மழை தான்! குனிந்து வானம் பார்த்தால், நான்கு மணி நேரத்திற்கு முன் பார்த்த வானம் அது இல்லை; சிவந்து கிடந்தது.

'வாட்ஸ் ஆப்'பை உயிர்ப்பித்தேன். 'சென்னைக்கு மிக அருகில் நெருங்கி விட்டது வர்தா; எச்சரிக்கையாக இருங்கள்' நண்பர்கள் அனுப்பியிருந்த தகவல், மனதிற்குள் பீதியை கிளப்பியது. 'மழை அந்தளவுக்கு இல்லையே...' எனக்குள்ளே சமாதானம் சொல்லி, புரண்டு படுத்தேன். மழை வலுக்கத் துவங்கியது. 'எதுவும் நடக்காது' என்ற என் தைரியம், வெளுக்கத் துவங்கியது!

திங்கட்கிழமை கண் விழித்த போது, காலை மணி, 7:00. கும்மிருளில் இருந்தது வீடு. 'கரன்ட் கட் ஆயிருச்சுப்பா!' மகள் சொல்ல, 'டேங்க் நிறைச்சிட்டீங்களா...' பதற்றமாய் கேட்டேன். 'ஹவுஸ் ஓனர், 5:00 மணிக்கே மோட்டார் போட்டுட்டார்' மனைவி சொன்ன பதில், நிம்மதி தந்தது.

'நாலு பாக்கெட் பால் வாங்கிட்டு வந்துட்டேன். இப்போ, கரன்ட் இல்லை. பிரிஜ் இல்லேன்னா பால் கெட்டுப் போயிடுமே...' மனைவியின் புலம்பலில், நெருங்கி வரும், 'வர்தா'வின் வீரியம் புரிந்தது.

என் தைரியம் இன்னும் வெளுக்கத் துவங்கியது. ஆனால், என் மனைவிக்கும், மகளுக்கும், என் அம்மாவுக்கும் தைரியம்; நான் இருக்கிறேன் என்று! எனக்கோ பயம்; அவர்களை பாதுகாக்க வேண்டுமே என்று!

படுக்கையறையின் ஜன்னல் இடுக்கு வழியே, மெலியதாய் ஊளையிடத் துவங்கியது காற்று.

'மாடிக் கதவை அடைச்சிட்டேன். யாரும் மொட்டை மாடிக்கு போகாதீங்க. ஜன்னல் கதவு எதையும் திறக்காதீங்க' சத்தமாய் சொல்லிய படியே, கீழிறங்கிப் போனார் வீட்டின் உரிமையாளர். வீட்டிற்குள் மெழுகுவர்த்தி கரைந்து கொண்டிருந்தது. அதை அணைக்க, வீட்டின் இடுக்குகளின் வழியே போராடிக் கொண்டிருந்தது காற்று.

'சாயங்காலம் கார்த்திகை தீபம் ஏத்த முடியுமாப்பா?' - 70 வயது அம்மாவின் சந்தேகக் கேள்வி, மனதிற்குள் திகிலை கிளப்பியது. '100 கி.மீ., தொலைவில் வர்தா' அலைபேசி வழி, 'வாட்ஸ் ஆப்' செய்தி வந்து விழுந்த வேளையில், 'ஊஊ... ஊஊ...' என, பெரும் ஊளையிடத் துவங்கியிருந்தது, காற்று.

'ச்ச்ச்சடார்...' பின் பக்க வீட்டில் வேயப்பட்டிருந்த, 'ஆஸ்பெஸ்டாஸ்' கூரை, இருந்த இடத்தின் தொடர்பை முறித்துக் கொள்ளத் துவங்கியிருந்தது. 'ஷ்ஷ்ஷ்ஷ்...' சீறியபடி ஏதோ ஒன்று, எங்கள் படுக்கையறையின் கண்ணாடி ஜன்னலை நோக்கி வந்தது. 'அது என்னவாக இருக்கும்' என, உணர்வதற்குள், 'ச்ச்ச்ச்லீர்ர்ர்...' நொறுங்கியது கண்ணாடி. சில கண்ணாடி துண்டுகள் மெத்தையில் தெறிக்க, 'அம்மா...' அலறினாள், என் மகள். 'அய்யய்யோ... இங்கே வந்திருங்க...' மனைவியும், அம்மாவும் கையைப் பிடித்து இழுக்க, மகளும், நானும் அறை கடந்தோம்.

அந்த அறைக்குள் காற்றாகவும், நீராகவும் நுழையத் துவங்கியிருந்தது வர்தா.

கை, கால் நடுங்க, மூச்சிறைக்க, இதயம் குதிரை வேகத்தில் விரைய, வரவேற்பறை சோபாவில் அமர்ந்த படி, நான். சுற்றிலும், என்னை நம்பியிருக்கும் மூன்று ஜீவன்கள். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், அத்தனை பேர் முகத்திலும் மின்னியது பயம். சமையலறையில் உள்ள, 'எக்ஸ்ஹாஸ்ட் பேன்' நிலை கொள்ளாமல் முன்னும், பின்னும் அசுரத்தனமாய் சுற்றிக் கொண்டிருந்தது.

பதற்றம் தணிக்க, அண்ணாந்து நான் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த நொடியில், 'டொம்ம்ம்ம்ம்ம்...' என, பெரும் சத்தம் கேட்டது, வெளியே. மகள், என் கையை இறுகப் பற்றிக் கொண்டாள். மனைவி, தோள்களைப் பற்ற, அம்மா, என் கைகளைப் பிடித்துக் கொண்டார். தண்ணீர் விழுங்கிய நான், இடைவெளியின்றி எச்சில் விழுங்கினேன்.

'எதிர் வீட்டு வேப்ப மரமும், டவரும் சாய்ஞ்சிருச்சு. யாரும் வெளியில வராதீங்க' வீட்டின் உரிமையாளர் கீழிருந்து கத்தினார். என் மடியில் முகம் புதைத்துக் கொண்டாள், மகள். நிலைமை கைமீறி போவதை உணர்ந்தேன். பதற்றம் தணிக்க, 'இன்ட்ரால் 10' மாத்திரை ஒன்றை விழுங்கினேன். மகளையும், அம்மாவையும் வரவேற்பறையில் இருக்கச் சொல்லி விட்டு, அரிசி சாக்குப்பை ஒன்றை எடுத்தபடி படுக்கையறைக்குள் நுழைந்தேன். அறை முழுக்க சாரல்; தரை முழுக்க ஈரம். 'உடைந்த ஜன்னல் பகுதியை நீ எப்படி அடைக்கிறாய், பார்ப்போம்' என, முஷ்டி முறுக்கியது, வர்தா. அதனுடன் மல்லுக்கட்டி, ஒருவழியாக சாக்கை அடைத்து, சாரலை குறைந்து, வரவேற்பறை திரும்புகையில், என் உடலெங்கும் ஈரம்; என் மகள் கண்களிலும்!

அருகருகே அமர்ந்து, ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக் கொண்டிருந்த போது, 'ஆ... அய்யோ...' வர்தாவை மீறி, வெடித்தது பெருங்குரல் ஒன்று! வரவேற்பறை பக்கம் இருந்து வந்த குரல், ஏதோ ஒரு அசம்பாவிதம் என்பதை உறுதிப்படுத்த, ஜன்னல் பக்கமாக சென்று காது கொடுத்தேன். எங்கோ இருந்து பறந்து வந்த பிளாஸ்டிக் தொட்டி, அடுத்த வீட்டின் பாத்ரூம் கூரையை பதம் பார்த்திருந்தது. வீட்டைச் சுற்றி, நாலாபுறமும் கூக்குரல்கள்!

தெருவிளக்குகள் வெடித்து தெறிக்கும் ஓசை, வயது வித்தியாசமின்றி அனைவரையும் அலற வைத்தது. பூஜையறையில் விளக்கேற்றி, முருகனை வழிபடத் துவங்கியிருந்தார், அம்மா. 'வாட்ஸ் ஆப்' படங்கள் மூலம், சென்னை சின்னாபின்னமாவதை உணர்ந்தேன். ஹாலிவுட் படம் ஒன்றில், 'சுனாமி' வரும் போது, மகளையும், மனைவியையும், நெஞ்சோடு சேர்த்து அணைத்து, அழும் கதாபாத்திரம் நினைவுக்கு வந்தது. மணி, 3:00. காற்றிடமிருந்து, மழை கழன்று கொண்டது.
வீட்டிற்கு வெளியே, மாடிப்படிகளில் காலடி சப்தம். 'வேண்டாம்ப்பா... போகாதீங்க...' மகள் தடுத்தும் கேளாமல், மாடிப்படிகள் ஏறினேன். எங்கிருந்தோ பறந்து வந்த பாத்திரங்கள், மரக்கட்டைகள் பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் பச்சை இலைகளால் மொட்டை மாடி நிறைந்திருந்தது. காற்றில் பச்சை வாசம். சுவாசித்துக் கொண்டே, சுவர் அருகில் வந்து, தெருவைப் பார்த்தேன்; போர்க்களம் போல் இருந்தது. முதல் நாள் இரவு நான் உயிரோடு பார்த்த வேப்ப மரம், சடலமாகி கிடந்தது. கம்பீரமாய் நின்ற டவர், கவிழ்ந்து இருந்தது. என் வீட்டில், ஒரு ஜன்னல் கதவு மட்டும் சேதம்; பல வீடுகளில் எல்லா கதவுகளிலுமே சேதம்.'எனக்கு, 60 வயசு ஆகுது... நான் பார்த்த ஆக்ரோஷ புயல் இது தான்' என்றார், வீட்டு உரிமையாளர். பார்வைக்கு தென்பட்டவரையில் அத்தனை மரங்களுமே சாலையில் தான் கிடந்தன. கொஞ்சம், கொஞ்சமாய் தன் வேகத்தை வர்தா குறைத்துக் கொள்ள, எல்லா வீட்டு மாடிகளிலும் மனிதத் தலைகள்.

'உங்க வசதிக்காக, ஒரு பக்கமா கிளைகளை வெட்டி, என்னை இப்படி சாய்ச்சுட்டீங்களேடா...' என, வியந்து பார்க்கும் மனிதர்களிடம் மரங்கள் கதற, விடைபெற்றது வர்தா.
மாடியிலிருந்து இறங்கி வீட்டிற்கு வந்தேன். பாதிப்புகளை அறிய, என் குடும்பத்தையும் மொட்டை மாடிக்கு அனுப்பி வைத்தேன்.

அவர்கள் மீண்டும் வரும் இடைவெளியில், எனக்குள் மீண்டும் ஒலித்தது அந்த குரல்... 'நாம இன்னைக்கு செத்துருவோமாப்பா...' என, சற்று நேரத்திற்கு முன், என் கைகளை இறுக பற்றியபடி, என் மகள் கேட்ட அந்த கேள்வி... ஒவ்வொரு நிமிடமும் முழுமையாய் வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய கேள்வி! நீங்களும் வாழ்ந்து விடுங்கள் நண்பர்களே...!

- துரை கோபால் -

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வர்தாவை சமாளித்தது இப்படித்தான்!


கடந்த 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை என மக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது சென்னையில் பெரும்பாலான தொகுதிகளில் அ.தி.மு.க தோல்வியை தழுவியது. இதற்கு மழையின்போது செயல்படாத அரசின் செயலற்றத் தன்மையே காரணமாக இருந்தது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்... புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள ஓ.பி.எஸ்ஸின் செயல்பாடு சுதந்திரமாகவும், துரிதமாகவும் இருப்பதற்கு... ‘வர்தா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது.

வர்தா புயலை ஒட்டி தமிழக அரசு எடுத்திருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கி, மீட்புப் பணிகள் வரை அனைத்தும் மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன. இதற்காக, தமிழக அரசு சுறுசுறுவென செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த அரசை இயக்கும் ஓ.பி.எஸ்., ‘வர்தா’ முன்னெச்சரிக்கைகளை எப்படி எடுத்தார் என்பதை விவரிக்கும் தொகுப்பு இங்கே...

‘வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் வர்தா புயல் சென்னை அருகே கரையைக் கடக்கக் கூடும்’ என கடந்த 10-ம் தேதி இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வந்தவுடன், தமிழக அரசு சுதாரித்துக்கொண்டது. புயலின் தாக்கம் தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.



இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட நிர்வாகங்கள் புயலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கும்படி தலைமைச் செயலகத்தில் இருந்து உத்தரவுகள் பறந்தன. 11-ம் தேதி மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். புயலின்போது உதவி தேவைப்படுவோரின் வசதிக்காக அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸ்அப் எண்களும் அறிவிக்கப்பட்டன. புயலினால் பாதிக்கப்படும் மக்களுக்கும் உடனடி நிவரணம் கிடைக்க ஏதுவாக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கண்காணிப்பு அலுவலர்களை அரசு நியமித்தது. சென்னை மாநகராட்சிக்கு மட்டும் 16 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் காஞ்சிபுரத்துக்கு 6 அதிகாரிகள், திருவள்ளூருக்கு 6 அதிகாரிகள், விழுப்புரத்துக்கு 1 அதிகாரி உட்பட 29 பேர் நியமிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர்.



11-ம் தேதி மாலை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடந்தது. இதில் வர்தா புயலை எதிர்கொள்ள இதுவரை எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஓ.பி.எஸ் ஆய்வு செய்தார். ராணுவம் மற்றும் மத்தியப் படைகள் தயார் நிலையில் இருக்கும்படி தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 6 குழுக்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், சிவாலிக், காட்மட் என்ற இரண்டு கடற்படை கப்பல்கள் சென்னைக்கு அருகில் கடலில் மீட்புப் பணிக்காக நிறுத்திவைக்கப்பட்டன. 30 படகுகளுடன் கடற்படை வீரர்கள் கொண்ட மீட்புக் குழுவினர் தயாராக நிற்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் கடலோர வட்டங்களில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அல்லது வீட்டிலிருந்தே வேலை பார்க்க அனுமதி அளிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியது. இதற்கான உத்தரவை தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அரசுச் செயலாளர் அமுதா வெளியிட்டிருந்தார். சென்னையில் உள்ள பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பேரிடர் காலத்தில்கூட ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க முன்வராத நிலையில், அரசின் உத்தரவால் தனியார் நிறுவன ஊழியர்கள் நிம்மதியடைந்தனர். அதேபோல அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.



இதனிடையே தாழ்வான பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசித்துவந்தவர்களில் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். 12-ம் தேதி பிற்பகல் புயல், கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில், நேற்று (13-12-16) காலை மீண்டும் ஓர் அவசர கூட்டத்தைக் கூட்டி அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார் முதல்வர். 12-ம் தேதி இரவு எண்ணூர், கத்திவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தற்காலிக நிவாரண முகாம்களுக்குச் சென்ற முதல்வர், மக்களுக்கு வழங்கப்பட்ட உணவுகளை ஆய்வு செய்தார். மேலும், அங்கு செயல்பட்டு வந்த மருத்துவ முகாம்களையும் பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி தனது ஆறுதல்களைக் கூறினார்.

முதல்வரின் செயல்பாடு தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்...

NEWS TODAY 14.06.2026