Wednesday, December 14, 2016

10 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம்: 3 நாள்களுக்குள் மின்விநியோகம் சீராகும்: மின் வாரியம் அறிவிப்பு


By DIN | Published on : 14th December 2016 12:55 AM 

 வர்தா புயலின் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் 10 ஆயிரம் மின்கம்பங்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், 3 தினங்களில் சென்னை புறநகர் பகுதிகளில் மின்விநியோகம் சீராகும் என்றும் தெரிவித்துள்ளது.
வர்தா புயலின் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்டவை சேதமடைந்தும், முழுவதுமாக பெயர்ந்து விழுந்தும் விட்டன. இதற்கான சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், படப்பை அருகே உயர் மின் கோபுரத்தை சீரமைக்கும் பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவரும் மேலாண் இயக்குநருமான எம்.சாய்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து புயலின் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் குறித்தும், சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மின்விநியோகம் தடைபட்டுள்ளது.
10 ஆயிரம் மின்கம்பங்கள்: வர்தா புயலால் இதுவரை 10 ஆயிரம் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், மரங்கள் பெயர்ந்து விழுந்ததாலும், கிளைகள் உடைந்து விழுந்ததாலும், 450 மின்மாற்றிகள் பழுதடைந்துள்ளன. 24 உயர் அழுத்த மின் கோபுரங்கள் சேதமடைந்துள்ளன.
3 ஆயிரம் மட்டுமே இருப்பு: சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றுவதற்கு 3 ஆயிரம் மின்கம்பங்கள் மட்டுமே கையிருப்பில் இருந்தன. எனவே, பிற மாவட்டங்களில் இருந்து மீதம் 7 ஆயிரம் மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தற்போது சீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான மின்கம்பங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்ட அனைத்து தளவாடங்களும் கையிருப்பில் உள்ளன.
பணியில் 9 ஆயிரம் ஊழியர்கள்: வரலாறு காணாத இந்தச் சேதத்தை சீரமைப்பதற்காக சென்னையில் உள்ள 6 ஆயிரம் மின் ஊழியர்கள், அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர பிற மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் 70 அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
மின்உற்பத்தி நிலையங்கள் இயக்கம்: சென்னையில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் இயக்கத்தில் உள்ளன. இதனால் போதுமான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் பேசின் மேம்பாலம் வாயு மின் உற்பத்தி நிலையத்திலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
மின்சாரம் விநியோகம்: சென்னையில் இதுவரை ராஜ்பவன், ஈக்காட்டுத்தாங்கல், மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை, பரங்கிமலை, கோடம்பாக்கம், அசோக் நகர், ராமசாமி சாலை, பி.டி. ராஜன் சாலை, ஜெருகம்பாக்கம், மதாண்டாபுரம், லட்சுமி நகர், அய்யப்பன்தாங்கல், ஸ்ரீ ராமச்ந்திரா மருத்துவமனை, காரப்பாக்கம், குன்றத்தூர் சாலை, மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம், லஸ், ராயப்பேட்டை, அபிராமபுரம், எம்.ஆர்.சி.நகர், மந்தைவெளி, அடையாறு, வேளச்சேரி, கொட்டிவாக்கம், சிறுசேரி, திருவான்மியூர், பெசன்ட் நகர், இந்திரா நகர், அம்பத்தூர், ஆவடி, அண்ணாநகர், முகப்பேர், அரும்பாக்கம், மதுரவாயல், திருவேற்காடு மற்றும் கோயம்பேடு ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சீரமைக்கப்பட்டு, மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
3 நாள்களில் மின்விநியோகம்: சென்னை மாநகராட்சியின் அனைத்துப் பிற பகுதிகளிலும் துரித கதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகரத்தில் செவ்வாய்க்கிழமை இரவுக்குள் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புறநகர் பகுதியில் அடுத்த 3 நாள்களுக்குள் மின்சாரம் விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024