தமிழகத்தை கொடூரமாக தாக்கிய கோரப் புயல்கள் ஒரு பார்வை...!
Published on : 13th December 2016 07:55 PM
இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு இந்தியா, இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, மியான்மர், மாலத்தீவு, ஓமன் ஆகிய நாடுகள் சுழற்சி முறையில் பெயர் சூட்டி வருகின்றன. புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000-ஆம் ஆண்டில் தொடங்கியது. தில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004-ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன. இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), லெஹர் (அலை). மேக், சாகர், வாயு. இந்த 8 பெயர்களுமே பஞ்ச பூதங்களை குறிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைப் பொறுத்தவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004-ஆம் ஆண்டில்தான் உருவானது. அப்படி இருக்க 1994-ஆம் ஆண்டில் பெயர் வைக்கவில்லையே தவிர தற்போது சென்னையைத் தாக்கிய வர்தா புயல் "அதிதீவிர"ப் புயல் ஒன்று சென்னையைத் தாக்கியது.
1994- அக்டோபர் இறுதியில் வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த அந்தப் புயல், சென்னை - கடலூர் இடையே 115 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது. அப்போது பலத்த காற்றுடன் பெய்த கனமழைக்கு, தமிழகத்தில் 26 பேர் உயிரிழந்தனர். புயல் கரையைக் கடந்த பிறகும், 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.
ஃபானூஸ் புயல்:
அடுத்து தமிழகத்தைத் தாக்கிய பெரும் புயல்களில் ஒன்று ஃபானூஸ் புயல். கடந்த 2005-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் உருவான இந்த புயல், டிசம்பர் 7-ஆம் தேதி, மணிக்கு 101 கிலோமீட்டர் வேகத்தில் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. இந்த புயலால் சுமார் 25 ஆயிரம் பேர் வீட்டை விட்டு வெளியேற நேரிட்டது. அதோடு, வட தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும், விவசாயத்தையும் இப்புயல் கடுமையாக பாதித்தது.
நிஷா புயல் : ஃபானூஸ் புயலை அடுத்து தமிழகத்தைத் தாக்கிய கடும் புயல் நிஷா. கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான இந்த புயல், மறுநாள் மணிக்கு சுமார் 83 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது. இப்புயலால் தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, 189 பேர் உயிரிழந்தனர்.
ஜல் புயல்: கடந்த 2010-ஆம் ஆண்டு தென் சீனக் கடலில் உருவான ஜல் புயல், இந்தியப் பெருங்கடல் நோக்கி நகர்ந்த இந்த புயல், நவம்பர் மாதம் 6-ஆம் தேதி அன்று மணிக்கு சுமார் 111 கிலோமீட்டர் வேகத்தில் சென்னை அருகே கரையை கடந்தது. இந்த புயலால், 70 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த புயல் சீற்றத்தால் 54 பேர் உயிரிழந்தனர். பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லாமல் தப்பித்தது தமிழகம்.
தானே புயல்: கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி இந்திய பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவான தானே புயல், மணிக்கு சுமார் 165 கிலோமீட்டர் வேகத்தில் டிசம்பர் 30-ஆம் தேதி புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடையே கரையைக் கடந்தது. இந்த புயலால், 46 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பலரது வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்துபோனது. எண்ணற்ற வீடுகள் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விவசாய பயிர்கள் நாசமாகின. கடலூர், நாகை. காரைக்கால், புதுச்சேரி, விழுப்புரம் மாவடங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் இப்போது கூட முழுமையாக சீரடையவில்லை.
நீலம் புயல்: 2012-ஆம் ஆண்டு 28-ஆம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையமாக உருவான நீலம் புயல், அக்டோபர் 31-ஆம் தேதி மணிக்கு 83 கி.மீட்டர் வேகத்தில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. இதனால், கடல் நீர் 100 மீட்டர் அளவுக்கு நகருக்குள் புகுந்தது. நீலம் புயல் சீற்றத்தால் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறினர். சுமார் 450 மின் கம்பங்கள் சாய்ந்தன.
மடி புயல்: கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி உருவான மடி புயல், மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி வழியாக கரையை கடந்தது. இதன் பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் வெளியேற்றப்பட்டனர். இதனால், அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
வர்தா புயல்: 22 ஆண்டுகளுக்குப் பிறகு, தென்கிழக்கு வங்கக்கடலில் 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவான அதிதீவிரப் புயலான “வர்தா” புயல், டிசம்பர் 12-ஆம் தேதி மாலை மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை புறநகர் பகுதியான பழவேற்காடு அருகே 6.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்தது. வர்தா புயலின் கடும் சீற்றத்தால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. சென்னையில் அதிக பாதிப்பை வர்தா புயல் ஏற்படுத்தியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. சென்னை மட்டும் ஏற்பட்டுள்ள சேதங்களின் மதிப்பு ரூ.1000 கோடியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. வர்தா புயலுக்கு இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையை தலைகீழாக புரட்டிப்போட்ட அதிதீவிர புயலுக்கு "வர்தா' என பாகிஸ்தான் பெயரைச் சூட்டியது. உருதுச் செல்லான வர்தாவுக்கு தமிழில் சிவப்பு ரோஜா என்று பொருளாகும். இந்த ரோஜாவின் தாக்கத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment