Wednesday, December 14, 2016


பிளாட்ஃபாரத்தில் வாழும் மக்களுக்கு 90 வீடுகள் அன்பளிப்பு: மகளுக்கு வித்யாசமான கல்யாணப் பரிசு தந்த பணக்காரத் தந்தை!

By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 14th December 2016 01:22 PM
மகளின் கல்யாணப் பரிசாக, வீடற்றவர்களுக்கு 90 வீடுகளைப் பரிசளித்து ஊராரையும், உறவினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் அவுரங்காபாத்தைச் சேர்த்த தொழிலதிபர் ஒருவர்.
வழக்கமாகத் தங்களது மகன் அல்லது மகள் திருமணத்திற்காக கோடி, கோடியாக பணத்தை வாரி இறைக்கும் கோடீஸ்வர, லட்சாதிபதி தந்தைகளுக்கு நடுவே தனது இத்தகைய பெருந்தன்மையான செயல் மூலம் அஜய் முனாட் மிகவும் வித்யாசமான நபராகத் தோற்றமளிக்கிறார்.
தனது மகளின் திருமணத்திற்காக சுமார் 70 லிருந்து 80 லட்சம் ரூபாய் வரை செலவளிப்பதாக இருந்த அஜய், தனது வசிப்பிடத்தின் அருகே எவ்வித வசதிகளும் இன்றி பிளாட்பாரங்களில் உறங்கும் மக்களைக் கண்டு மனமிரங்கியவறாக, குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து திருமணத்தின் போது செலவிடப்படவிருந்த ஆடம்பரச் செலவுகளுக்கான தொகையை வைத்து வீடற்ற மக்களுக்கு வீடுகளைக் கட்டித் தரலாம் என முடிவு செய்தார். அஜயின் கோரிக்கையை அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் ஏற்றுக் கொண்டனர். அதன் படி மகளின் திருமண நாளன்று வீடற்ற மக்களில் சிலருக்கு சுமார் 90 வீடுகளைக் கட்டி அவற்றில் அவர்களை அஜய் குடியேற்றினார்.
தன்னைப் போன்ற பணம் படைத்தவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு வீண் ஆடம்பரச் செயல்களில் இறங்காமல், இப்படி இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும், அதற்கொரு முன்னுதாரணமாக இருக்கட்டும் என்று தான், தான் தனது மகளின் திருமணச் செலவுகளை குறைத்து இப்படி ஒரு நற்செயலில் ஈடுபட்டதாக அஜய் முனாட் தெரிவித்தார்.
இதைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசுகையில் அஜய் முனாட் ‘இந்த சமூகம் சார்ந்து நமக்கென்று சில பொறுப்புகள் இருக்கின்றன’ நாம் ஒவ்வொருவருக்கும் அவற்றை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. நாம் அனைவருமே நிச்சயமாக அதை உணர்ந்து செயல்பட வேண்டும்.’ என்று தெரிவித்தார்.
அஜய் முனாட்டின் இந்த அதிரடி நல்லெண்ணத்தைப் பற்றி அவரது மகளின் கருத்து என்ன? என்று தெரிந்து கொள்ள முயற்சித்த போது, கல்யாணப் பெண்ணான அஜயின் மகள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ‘எனது திருமணச் செலவுகள் குறித்த எனது தந்தையின் முடிவு, சமூக நல்லெண்ணம் சார்ந்து எனக்கு மிகுந்த மன ஆறுதலை அளிக்கிறது. அதோடு என் வாழ்வில் என்றென்றைக்குமான மிகச்சிறந்த கல்யாணப் பரிசாக நான் கருதிக் கொள்ளத் தக்க வகையிலான பெருமித உணர்வையும் இப்பரிசு எனக்கு அளிக்கிறது. என்றார்.

எல்லாப் பணக்காரத் தந்தைகளும் இம்மாதிரி அதிரடி முடிவெடுத்தால் நாடு சுபிட்சமாகி விடும்.

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...