முதலில் மின்சார சப்ளை செய்யுங்கய்யா: புயல் பாதித்த பகுதிகளில் மக்கள் ஆவேசம்
பதிவு: டிசம்பர் 14, 2016 14:47
சென்னை:
“வார்தா” புயல் வருமுன்னே முன்னேற்பாடுகள் நல்லாத்தான் இருந்தது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பேரிடர் மீட்பு குழு.
மீட்பு படகுகள், மணல் மூட்டைகள், நிவாரண முகாம்கள், சமையல் கூடங்கள்.
அவசர உதவிக்கு ஆம்புலன்சுகள், தகவல் தெரிவிக்க கட்டுப்பாட்டறைகள் என்று எல்லா ஏற்பாடுகளும் குறை ஒன்றும் இல்லை என்று பாராட்ட வைத்தன.
புயல் விடை பெற்று இன்று 3-வது நாள்! நடந்ததும், நடப்பதும் என்ன?
திரும்பும் திசையெல்லாம் விழுந்த மரங்கள் அப்படியே கிடக்கின்றன.
தன் கையே தனக்கு உதவி என்பது போல் பொதுமக்களே கிளைகளை மட்டும் வெட்டி அகற்றி போக்குவரத்துக்கு வழி செய்து விட்டார்கள்.
பஸ் போக்குவரத்தும், ரெயில் போக்குவரத்தும் சீராகி விட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மிக குறைந்த அளவில்தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பஸ் நிறுத்தங்களில் பயணிகள் மணிகணக்கில் காத்து நிற்கிறார்கள்.
கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் அவ்வப்போது ஒரு ரெயில் இயக்கப்படுகிறது. இதே நிலைதான் சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் ஆகிய வழி தடங்களிலும்.
இதனால் எல்லா மின்சார ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.
மாதவரம் பால் பண்ணை பகுதியில் வேலை பார்க்கும் சுமார் 3000 தொழிலாளர்களின் வீடுகள் ஆஸ்பெஸ்டாஸ்சீட் போட்டு அமைக்கப்பட்டிருந்தன. அந்த வீடுகள் மீது மரங்கள் விழுந்ததால் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி பள்ளியில் தஞ்சம் புகுந்தனர்.
இதே போல் தாம்பரம் பகுதியிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில கட்டுமான தொழிலாளர்கள் அவர்கள் தங்கி இருந்த குடிசைகளை இழந்து தவிக்கிறார்கள்.
மூன்று நாட்களாகியும் மின் விநியோகம் இல்லை. மேடவாக்கம் பகுதியில் கோவிலம்பாக்கம், நன்மங்கலம், பல்லாவரம் பகுதியில் கீழ்க்கட்டளை, கணேஷ் நகர், கொடுங்கையூர் பகுதியில் கம்பன் நகர் மற்றும் நங்கநல்லூர், பெருங்குடி உள்பட பல இடங்களில் சாய்ந்த மின் கம்பங்கள் அப்படியே கிடக்கின்றன.
ஒவ்வொரு பகுதியாக சீர் செய்து வருவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
வார்தாவின் தாக்குதல் மிக பயங்கரமாக இருக்கும் என்பது தெரியும். அதற்கு ஏற்ற வகையில் மின் பழுதுகளை உடனடியாக சீரமைக்க தேவையான உபகரணங்களும், பணியாளர்களும் தயார் நிலையில் இருந்திருக்க வேண்டாமா? என்று பொதுமக்கள் ஆவேசப்படுகிறார்கள்.
குப்பை அள்ளும் லாரிகள், மருத்துவ குழுக்கள், தண்ணீர் லாரிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுற்றுகின்றன. அவர்களிடம் “முதலில் மின்சார சப்ளையை கொடுங்கய்யா? மற்றதை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
அகல் விளக்கு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவை கழிக்கிறார்கள். மின்சப்ளை இல்லாததால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
பால் கிடைக்கிறது. ஆனால் பாதுகாக்க வழியில்லை. குளிப்பதற்கும், வீட்டு தேவைகளுக்கும் சொட்டு தண்ணீர் இல்லாமல் திண்டாடுகிறார்கள். கழிவறைக்கு பயன்படுத்தவும் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.
பலர் லாரிகளில் தண்ணீர் வாங்கி நிலத்தடி தொட்டியில் நிரப்பி விட்டனர். மோட்டாரை இயக்கி தண்ணீரை மேலே ஏற்றுவதற்காக ஜெனரேட்டர்களுக்கு அலைகிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு ரூ.300 வாடகை வசூலிக்கிறார்கள். அதற்கும் பலர் முன்பதிவு செய்துள்ளார்கள். முன்னுரிமை அடிப்படையில்தான் ஜெனரேட்டர்களை வாடகைக்கு கொடுக்கிறார்கள்.
நேற்றும், இன்றும் புயல் வீசவில்லை. வெயில்தான் வீசுகிறது. 24 மணி நேரமும் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்திருந்தால் புயல் வந்த சுவடே தெரியாமல் போயிருக்கும் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
எதையும் எதிர்பாராமல் மீட்பு பணிகளில் ஒத்துழைக்க பொதுமக்கள் தயாராக இருக்கிறார்கள். பணிகளை முடக்கி விட்டால் பிரச்சனைகளை விரைவில் தீர்க்க முடியும்.
No comments:
Post a Comment