மின்சாரம் இல்லாமல் பாதிப்பு: புறநகர் பகுதி மக்கள் அவதி
பதிவு: டிசம்பர் 14, 2016 11:05
சென்னை:
வார்தா புயலால் சென்னை புறநகர் பகுதி மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
புறநகர் பகுதிகளில் 3-வது நாளாக மின்சாரம் இல்லாததால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள்.
மின் வினியோகம் இல்லாததால் பாத்ரூம் தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் பாதிப்படைந்தனர். எங்கேயாவது தண்ணீர் கிடைக்காதா என்ற ஆவலில் மக்கள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தனர்.
சமையல், குளியல், குடிநீர் போன்ற அனைத்து தேவைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டனர்.
மேலும் மின்சாரம் இல்லாததால் அனைத்து அத்தியாவசிய பணிகளையும் செய்ய முடியாமல் பெரிதும் இன்னலுக்கு உள்ளானார்கள்.
சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் வினியோகம் செய்யப்பட்டு விட்டது. ஆனால் புறநகர் பகுதிகள் மின்சப்ளை இல்லாமல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
சென்னையில் மின் வயர்கள் பூமிக்கு அடியில் செல்கிறது. புறநகரில் மின் வயர்கள் மேலே செல்கின்றன. வார்தா புயலால் ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சரிந்தன.
என்றாலும் புறநகர் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து போர்கால அடிப்படையில் பணிகளை செய்து இருந்தால் மின் வினியோகம் கிடைத்து இருக்கும். இந்த விஷயத்தில் புறநகர் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக புறநகர் வாசிகள் அதிருப்தியும், வேதனையும் தெரிவித்து உள்ளனர்.
3-வது நாளாக அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாததால் புறநகர் பகுதியை சேர்ந்த மக்கள் இடம் பெயர்ந்து வருகிறார்கள். பலர் தங்களது சொந்த ஊருக்கும், பக்கத்து ஊர்களில் வசிக்கும் உறவினர் வீடுகளுக்கும் சென்ற வண்ணமாய் உள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் விடுமுறை எடுத்து விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். சிலர் ஓட்டல்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.
No comments:
Post a Comment