Wednesday, December 14, 2016

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வர்தாவை சமாளித்தது இப்படித்தான்!


கடந்த 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை என மக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது சென்னையில் பெரும்பாலான தொகுதிகளில் அ.தி.மு.க தோல்வியை தழுவியது. இதற்கு மழையின்போது செயல்படாத அரசின் செயலற்றத் தன்மையே காரணமாக இருந்தது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்... புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள ஓ.பி.எஸ்ஸின் செயல்பாடு சுதந்திரமாகவும், துரிதமாகவும் இருப்பதற்கு... ‘வர்தா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது.

வர்தா புயலை ஒட்டி தமிழக அரசு எடுத்திருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கி, மீட்புப் பணிகள் வரை அனைத்தும் மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன. இதற்காக, தமிழக அரசு சுறுசுறுவென செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த அரசை இயக்கும் ஓ.பி.எஸ்., ‘வர்தா’ முன்னெச்சரிக்கைகளை எப்படி எடுத்தார் என்பதை விவரிக்கும் தொகுப்பு இங்கே...

‘வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் வர்தா புயல் சென்னை அருகே கரையைக் கடக்கக் கூடும்’ என கடந்த 10-ம் தேதி இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வந்தவுடன், தமிழக அரசு சுதாரித்துக்கொண்டது. புயலின் தாக்கம் தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.



இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட நிர்வாகங்கள் புயலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கும்படி தலைமைச் செயலகத்தில் இருந்து உத்தரவுகள் பறந்தன. 11-ம் தேதி மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். புயலின்போது உதவி தேவைப்படுவோரின் வசதிக்காக அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸ்அப் எண்களும் அறிவிக்கப்பட்டன. புயலினால் பாதிக்கப்படும் மக்களுக்கும் உடனடி நிவரணம் கிடைக்க ஏதுவாக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கண்காணிப்பு அலுவலர்களை அரசு நியமித்தது. சென்னை மாநகராட்சிக்கு மட்டும் 16 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் காஞ்சிபுரத்துக்கு 6 அதிகாரிகள், திருவள்ளூருக்கு 6 அதிகாரிகள், விழுப்புரத்துக்கு 1 அதிகாரி உட்பட 29 பேர் நியமிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர்.



11-ம் தேதி மாலை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடந்தது. இதில் வர்தா புயலை எதிர்கொள்ள இதுவரை எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஓ.பி.எஸ் ஆய்வு செய்தார். ராணுவம் மற்றும் மத்தியப் படைகள் தயார் நிலையில் இருக்கும்படி தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 6 குழுக்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், சிவாலிக், காட்மட் என்ற இரண்டு கடற்படை கப்பல்கள் சென்னைக்கு அருகில் கடலில் மீட்புப் பணிக்காக நிறுத்திவைக்கப்பட்டன. 30 படகுகளுடன் கடற்படை வீரர்கள் கொண்ட மீட்புக் குழுவினர் தயாராக நிற்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் கடலோர வட்டங்களில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அல்லது வீட்டிலிருந்தே வேலை பார்க்க அனுமதி அளிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியது. இதற்கான உத்தரவை தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அரசுச் செயலாளர் அமுதா வெளியிட்டிருந்தார். சென்னையில் உள்ள பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பேரிடர் காலத்தில்கூட ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க முன்வராத நிலையில், அரசின் உத்தரவால் தனியார் நிறுவன ஊழியர்கள் நிம்மதியடைந்தனர். அதேபோல அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.



இதனிடையே தாழ்வான பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசித்துவந்தவர்களில் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். 12-ம் தேதி பிற்பகல் புயல், கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில், நேற்று (13-12-16) காலை மீண்டும் ஓர் அவசர கூட்டத்தைக் கூட்டி அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார் முதல்வர். 12-ம் தேதி இரவு எண்ணூர், கத்திவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தற்காலிக நிவாரண முகாம்களுக்குச் சென்ற முதல்வர், மக்களுக்கு வழங்கப்பட்ட உணவுகளை ஆய்வு செய்தார். மேலும், அங்கு செயல்பட்டு வந்த மருத்துவ முகாம்களையும் பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி தனது ஆறுதல்களைக் கூறினார்.

முதல்வரின் செயல்பாடு தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்...

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...