புயல் மழைக்கு உயிரிழந்தோர் 23-ஆக உயர்வு.. 3-வது நாளாகத் தொடரும் மீட்பு பணிகள்
சென்னையில் கோரத் தாண்டவம் ஆடிய வர்தா புயலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.
வங்க கடலில் உருவான வர்தா புயல் கடந்த 12-ம் தேதி மாலை சென்னையில் கரையை கடந்தது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த புயல் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆவேசமாக வீசியது. இந்த புயல் மழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 பேர் என்று முதல் நாள் அறிவிக்கப்பட்டது. நேற்று 16-ஆக உயர்ந்திருந்தது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனும் அஞ்சப்பட்டது. அதேபோல, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.
புயல் மற்றும் கன மழை காரணமாக, ஏராளமான மரங்கள் மற்றும் கட்டடங்கள் சாய்ந்ததில் 27 பெண்கள் உள்பட 172 பேர் படுகாயங்களுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புயல், மழையால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 97 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தபடி, உயிரிழந்த 16 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க, நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
புயல் காற்றில், பழைய கட்டடங்கள், சுமார் 12 ஆயிரம் மரங்கள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டட மின் கம்பங்கள், 450 மின்மாற்றிகள் உள்ளிட்டவை சாய்ந்துவிட்டன. பல்வேறு இடங்களில் மரங்கள், வாகனங்களின் மீது விழுந்து கண்ணாடிகள் உள்ளிட்டவை உடைந்து சேதமடைந்தன.
இதனால், சென்னை நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், ரயில் மற்றும் பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. செல்போன் சேவைகளும் பாதிக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று இரவு இரண்டாவது நாளாக மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதிப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்சாரம் இல்லாததால் வீடுகளில் உள்ள மோட்டார்களை இயக்க முடியாமல் தண்ணீர் இன்றி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
புயல், மழை காரணமாக கடைகள், வணிக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் அவை திறக்கப்படாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
வரதா புயல் தாக்கத்தில் சிக்கித் தவித்த சென்னை மாநகரம், தற்போது அதிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறது. சாலைகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்து போக்குவரத்து, மின்சாரம் தடைப்பட்டிருந்த நிலையில், சென்னையில் 3-வது அவை சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதனால், பேருந்துகள் இன்று பெரும்பாலான வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் சென்னை மக்கள் தங்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் ஓரிரு நாட்களும் ஆகக்கூடும். இதை அதிகாரிகள் விரைவு படுத்தி வருகின்றனர்.
- ரா.வளன்
No comments:
Post a Comment