Wednesday, January 31, 2018

சிங்கப்பூருக்கு இன்ப சுற்றுலா : ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சி

Added : ஜன 30, 2018 21:30

புதுடில்லி: ரயில்வேயில் பணியாற்றும், 'கேங்மேன், டிராக்மேன், உள்ளிட்ட, ஊழியர்களை, சிங்கப்பூர், மலேஷியாவுக்கு இன்ப சுற்றுலா அனுப்பி உள்ளது.

இதுகுறித்து, தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக, கீழ் நிலையில் பணியாற்றி வரும், கேங்மேன், டிராக் மேன் மற்றும் அரசிதழில் இடம்பெறாத ஊழியர்கள், 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவுக்கு, ஆறு நாட்களுக்கு இன்பச் சுற்றுலா அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இந்த பயணத்துக்கான, 25 சதவீத செலவை ஊழியர்கள் ஏற்பர். மீத செலவை, ரயில்வே ஏற்றுக் கொள்ளும். பணி ஓய்வு அடைய உள்ளோருக்கு, இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'டிமிக்கி' அதிகாரிகளுக்கு சம்பளத்தை பிடிக்க முடிவு

Added : ஜன 30, 2018 22:03 |



லக்னோ: பணிக்கு தாமதமாக வந்த மற்றும் வராமல் ஏமாற்றிய அதிகாரிகளுக்கு, ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய, உத்தர பிரதேச வேளாண் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது.

மாநில வேளாண் துறை அமைச்சர், சூரிய பிரதாப் சாஹி, வேளாண் துறை அலுவலகத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பல ஊழியர்கள், அதிகாரிகள் தாமதமாக வந்தனர். சிலர் விடுமுறை தெரிவிக்காமல், வேலைக்கு வராமல் இருந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அவர்களுக்கு ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
அரசு ஊழியர்களின் பணி கலாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்த, அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டு நான் அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது, ஏராளமான ஊழியர்கள், பணிக்கு தாமதமாக வந்தனர்.

இப்போது, நிலைமை சீராகியிருக்கும் என நினைத்தேன். ஓரளவுக்கு மேம்பட்டிருந்தாலும், முழுமையாக மாறவில்லை. அதனால், பணிக்கு தாமதமாக வந்த, வராமல் ஏமாற்றியவர்களின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
துணைவேந்தர் பதவி : விண்ணப்பிக்க நாளை கடைசி

Added : ஜன 31, 2018 01:06 | 

  சென்னை : அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, விண்ணப்பங்கள் அனுப்ப, நாளை கடைசி நாள்.அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவி காலியாகி, ஒன்றரை ஆண்டுகளாகிறது.இரண்டு முறை தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டும், துணைவேந்தர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

மூன்றாவது தேடல் குழு, டிசம்பரில் அமைக்கப்பட்டது.இந்தக் குழுவினர், ஒரு மாதத்திற்கு முன், விண்ணப்ப அறிவிப்பை வெளியிட்டனர்.அதன்படி, விண்ணப்பங்களை அனுப்ப, நாளை கடைசி நாள். இதுவரை, 60க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. கடைசி நாளில், பலர் விண்ணப்பம் அளிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சித்தா படிப்புக்கும் 'நீட்'

Added : ஜன 31, 2018 02:49 |



  சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் இந்தாண்டு முதல் 'நீட்' நுழைவு தேர்வு அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.

நாடு முழுவதும்,எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற, அலோபதி மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது.இந்நிலையில் சித்தா, யோகா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 2018 - 19ம் கல்வியாண்டு முதல், நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறும் என, மத்திய அரசு, 2017ல், அறிவித்தது.

ஆனால் தமிழக அரசு, இதுபற்றி எந்த அறிவிப்பும் வெளியிடாததால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் உருவாகி உள்ளது.இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது:உலகம் முழுவதும் சித்தா உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவசிகிச்சைக்கான தேவை அதிகரித்து வருகிறது; சிறந்த டாக்டர்களை உருவாக்கும் வகையில் இதில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு அடிப்படையில் நடக்கிறது. இளநிலை படிப்பையும், நீட் தேர்வுஅடிப்படையில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

எனவே நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் தான், சித்தா உள்ளிட்ட படிப்புகளுக்கும், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தனி நீட் நுழைவு தேர்வு கிடையாது. பொதுவான நீட் தேர்வே இதற்கும் பொருந்தும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
150 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அபூர்வ சந்திரகிரகணத்தை பொதுமக்கள் இன்று பார்க்கலாம்



  வானில் 150 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அபூர்வ சந்திரகிரகணத்தை பொதுமக்கள் பார்க்க பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. #lunareclipse

ஜனவரி 31, 2018, 05:30 AM

சென்னை,

வானில் அவ்வப்போது ஏற்படும் அபூர்வ நிகழ்வுகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் (பிர்லா கோளரங்கம்) தொலைநோக்கி கருவிகள் அமைக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று (புதன்கிழமை) மாலை வானில் அபூர்வ சந்திரகிரகணம் ஏற்படுகிறது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் இவை 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதை சந்திரகிரகணம் என்கின்றனர். இதனை பார்வையிடுவதற்காக, பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

5 தொலைநோக்கிகள்

இதுகுறித்து பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறியதாவது:-

வானில் அபூர்வ நிகழ்வாக வரும் சந்திரகிரகணத்தை மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ள பொதுமக்கள் பார்வையிடுவதற்காக பிர்லா கோளரங்கத்தில் 5 தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு சந்திரகிரகணம் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். இதனை வெறும் கண்ணாலும் பார்க்கலாம்.

இதற்கு முன்பு 1866-ம் ஆண்டு ஏற்பட்டதற்கு பிறகு தற்போது 150 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சந்திரகிரகணம் ஏற்படுகிறது. ‘சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படும் இந்த சந்திரகிரகணத்தை அபூர்வ நிகழ்வாக கருதுகிறோம்.

இந்த நிகழ்வு மாலை 5.48 மணிக்கு தொடங்கினாலும் சந்திரன் உதிப்பது மாலை 6.04 மணி என்பதால் அதற்கு பிறகு தான் முழுமையாக தெரியும். இரவு 8.20 மணி வரை வானில் தோன்றுகிறது. இது போன்ற அபூர்வ சந்திரகிரகணம் அடுத்து 2028-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, January 30, 2018

நாளை பூரண சந்திர கிரகணம்..! என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?


எஸ்.கதிரேசன்


நாளை பூரண சந்திர கிரகணம்...! எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்!

சந்திர கிரகணம்

இந்த வருடம் ஜனவரி மாதம் 31-ம் தேதி (நாளை) சந்திரகிரகணம் நிகழ இருக்கிறது. 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் 'பூர்ண சந்திரகிரகணம்' இது.

இந்தியாவில் மாலை 5.17 மணிக்கு ஆரம்பித்து, இரவு 8.41 மணிக்கு முடிகிறது. இந்தக் காலக்கட்டத்தில் என்னசெய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பது பற்றி ஜோதிட வல்லுநர்களிடமும், சிவாசார்யரிடமும் கேட்டோம்.



'ஆஸ்ட்ரோ' கிருஷ்ணன் ஜோதிடப் பேராசிரியர்:

சூரிய கிரகணம் அமாவாசையின் முடிவிலும் சந்திர கிரகணம் பௌர்ணமி முடிவிலும் தோன்றுவது இயல்பு. பொதுவாக, தினந்தோறும் சமுத்திரத்தில் ஸ்நானம் செய்யக் கூடாது. ஆனால் கிரகண காலத்தில் 'சமுத்திர ஸ்நானம்' செய்வது மிகவும் விசேஷம்.

நிலா உதிக்கும் நேரத்திலேயே, முழு சந்திர கிரகணம் தோன்றுவதுதான் இதன் சிறப்பு. அதாவது, கீழ்வானத்தில் நிலா தோன்றும்போதே, கிரகணம் தொடங்கி, மாலை 6.25 முழுமையாக மறைந்துவிடும். இரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும். அதன்பிறகு, பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, 8.41 மணிக்கு நிலா இயல்பு நிலையை அடையும்.



இந்த சந்திர கிரகணத்தின்போது, சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது. ஆனால், காற்று மண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி, நிலாவின்மீது படும். குறைந்த அலை நீளமுள்ள ஒளிக்கதிர்கள், காற்று மண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதனால், நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும்.

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்:

அந்த நேரத்தில், கடலிலும், ஆறுகளிலும் அலைகள் சற்று அதிக உயரத்துக்கு எழும்பும். இருப்பினும், பயப்படும் அளவுக்கு ஒன்றும் இருக்காது . சந்திர கிரகணம், பூசம் நான்காம் பாதத்தில் தொடங்கி ஆயில்யம் ஒன்றாம் பாதத்தில் முடிகிறது. புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், அனுஷம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிரகண சாந்தி செய்து கொள்வது நல்லது.

பொதுவாகவே சந்திரன் உடலோடும் மனதோடும் சம்பந்தப்படுகிற கிரகம். சந்திரன் ஜாதகத்தில் பலவீனமானால் மனதையும் வருத்தி உடலையும் வருத்துவார். செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி ஆகியோரின் காரகத்துவங்களுக்கு ஏற்ப உண்டாகும் உடல் உபாதைகளின்போது, சந்திரனும் பலவீனமாக இருந்தால், நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்துவிடுவதுடன், நோயின் கடுமையைத் தாங்கும் சக்தியையும் மனரீதியாகக் குறைத்துவிடுகிறார்.



நீர்ச்சத்துக் குறைவு மற்றும் மறதி, மனச்சஞ்சலம் இருந்தால், சிறிதளவு தர்ப்பைப் புல், இந்துப்பு ஆகியவற்றை குளிக்கும் நீரில் இட்டு, குளித்தால் நல்லது.

பரிகாரங்கள்:

கிரகண நேரத்தில் சந்திர காயத்ரி, அம்பாள் ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து விட்டு, கிரகணம் விட்டவுடன் கீழே காணும் பரிகாரங்களைச் செய்யலாம்.

வெள்ளிப் பாத்திரத்தில் புனித நீர் நிரப்பி, அதில் மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்வது சிறப்பு. அம்பாளுக்கு சந்தன காப்பு சாத்தி வழிபாடு செய்வதும் நல்லது. அபிராமி அந்தாதி , மகாலட்சுமி அஷ்டோத்ரம் சொல்வது கூடுதல் சிறப்பு.

புண்ணிய நதிகளில் நீராடுவது, நோயின் தாக்கத்திலிருந்து நம்மைக் காப்பாற்றும்; மன உறுதியையும் தரும்.

ஜாதக ரீதியாக சந்திரன் பலவீனமானவர்கள், சந்திர கிரகண நேரத்தில் உணவு எதுவும் உட்கொள்ளாமல் இருந்து மேற்கண்ட பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.



'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி:

வரும் தைப்பூச பவுர்ணமி கிரகண நிலையாக அமைகிறது. இந்தக் கிரகணம் கடக ராசியில், பூச நட்சத்திரம் நான்காம் பாதத்தில் தொடங்கி ஆயில்யம் ஒன்றாம் பாதத்தில் முடிவடையும். பூமிக்கு நன்மைகளைத் தரும் முழு நிலவின் ஒளி, ராகு எனும் இருளாகிய நிழலால் மறைக்கப்படும்போது, சனி மற்றும் புதனின் நட்சத்திரங்களான பூசம், ஆயில்ய நட்சத்திரங்களின் பின்னாலும், குருவின் நட்சத்திரமான புனர்பூசத்தின் அருகிலும் சந்திரன் இருப்பார். எனவே கிரகண நேரத்தில் மேற்படி நட்சத்திரங்களினால் பூமிக்குக் கிடைக்கும் ஒளி மறைக்கப்பட்டு பாதிப்பு ஏற்படும்.

கிரகணம் நிறைவடைந்த ஒருமணி நேரத்துக்குப் பின்னர் இரவு மணி 9.40 க்கு வீட்டை சுத்தம் செய்து குளித்து பூஜை செய்த பின் உணவருந்துவது நல்லது.

மிக முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள் இந்த கிரகண நேரத்தில் வெளியே வருவதைத் தவிர்க்கலாம். பிறந்த ஜாதகப்படி சந்திர தசை, சந்திர புக்தி நடந்து கொண்டிருப்பவர்களும் மேற்கண்ட கிரகண நேரத்தில் முக்கியமான பணிகள் செய்வதைத் தவிர்க்கவும்.

குமார சிவாசார்யார் (கோயில் குருக்கள்)

சந்திர கிரகணம் ஏற்படுவதை ஆன்மிக ரீதியாகப் பார்த்தால், அப்போது சந்திரனுடைய ஈர்ப்புத் தன்மை மிகவும் குறைவாக இருக்கும். எனவே, அந்த நேரத்தில் நாம் முக்கியமான வேலைகள் எதையும் செய்யக்கூடாது.

ஜாதகக் கட்டத்தில் ராசியைக் குறிப்பது சந்திரனே. ராசியை வைத்துத்தான் பலன் சொல்லுவார்கள். சந்திர கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இதனால் சந்திரனின் ஒளி, மனித உடலிலும் மனதிலும் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடியது. கர்ப்பிணிப் பெண்கள், நிச்சயம் வெளியே வரக்கூடாது.

கிரகணம் ஆரம்பிக்கும் நேரத்தில் தானம், ஜபம் செய்வது நல்லது. நாம் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள், நீர், தயிர், ஊறுகாய் போன்றவற்றில் தர்ப்பைப்புல்லை போட்டு வைப்பது நல்லது. கிரகணத்துக்கு முன்பாக சமைத்த உணவுகளைச் சாப்பிடக்கூடாது.

 இரவு கிரகணம் விட்ட பிறகு, குளித்துவிட்டு இறைவழிபாட்டில் ஈடுபடுவது நல்லது. ஆலயங்களில் கிரகண பரிகாரம் செய்வார்கள். பூசம் நட்சத்திரம் முதல் ஆயில்யம் முதல் பாதம் வரை உள்ள நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்சத்திரப் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.
தாத்தாக்களும், பாட்டிகளும் செய்தது சரிதானாம்.. ஆய்வு முடிவுகளே உறுதி செய்தன

By ENS | Published on : 29th January 2018 03:48 PM

ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி என்பதை வெறும் பழமொழியில் மட்டுமல்லாமல், வழக்கத்திலும் கொண்டிருந்த நமது தாத்தாக்களும், பாட்டிகளும் செய்தது சரியே என்று ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இந்த மருத்துவமனை சார்பில் வௌயிடப்பட்டிருக்கும் நீரிழிவு ஆராய்ச்சி மற்றும் மருத்துவ சோதனை முடிவுகள் தொடர்பான அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் 30 வயதை தாண்டியவர்களாக இருந்தால் உங்கள் தாத்தாவும் பாட்டியும், பல் தேய்க்க வேப்ப மரக் குச்சிகளைப் பயன்படுத்தியது நிச்சயம் தெரிய வந்திருக்கும்.

அவரை எல்லாம் கேலி செய்த, அடுத்த தலைமுறையினர், ஸ்டைலாக டூத் பிரெஷ்ஷை கையில் எடுத்தனர். அதன்பிறகு தான் விதவிதமான பற்பசைகளும், விதவிதமான டூத் பிரெஷ்களும் நமது பற்களை அலங்கரித்தன.

ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் ஆய்வறிக்கைக் கூறுவது என்னவென்றால், பற்களை பாக்டீரியாக்கள் இல்லாம் தூய்மையாக வைத்துக் கொள்ள வேப்பங்குச்சிகளே சிறந்த முறை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, இரண்டாம் பிரிவு நீரிழிவு நோய் பாதித்தவர்களின் ஈறுகளில் ஏற்படும் தொற்று நோய்களுக்கும் வேப்பங்குச்சிகள் பயனளிக்கின்றன என்றும் தெரிய வந்துள்ளது.

டைப் 2 நீரிழிவு பாதித்தவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், வேப்பங்குச்சியின் நுனியை தினமும் காலை 10 நிமிடம் மெல்லுமாறு கூறப்பட்டது. அதற்கு முன்பு அவர்களது எச்சிலில் இருந்த பாக்டீரியாக்களின் அளவு, வேப்பங்குச்சியை மென்ற பிறகு பல மடங்குக் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது.

இதன் மூலம், நம் மூதாதையர்கள் பின்பற்றிய பல நல்ல பழக்க வழக்கங்களை தொலைத்துவிட்டு வெறும் விளம்பரத்தைப் பார்த்து வெளிநாட்டு பொருட்களுக்கு அடிமையாகியிருக்கும் நமக்கு பல் இருந்தால் என்ன சொத்தையானால்தான் என்ன? என்றே நினைக்கத் தோன்றுகிறது.

NEWS TODAY 14.06.2026