Wednesday, January 31, 2018

ஒரு கையால் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து..! பதறிய பயணிகள்
 
விகடன்
 


சேலத்திலிருந்து சென்னை சென்ற அரசுப் பேருந்தை, பேருந்து ஒட்டுநர் ஒரு கையால் மட்டுமே ஒட்டிவந்துள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்திலிருந்து நேற்று இரவு அரசுப் பேருந்து ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. அந்தப் பேருந்து ஒட்டுநரின் வலது கையில் பெரிய அளவில் மாவுக்கட்டு போடப்பட்டிருந்தது. அதனால், அவர் ஒரு கையிலேயே பேருந்தை இயக்கியுள்ளார். அதனால், அச்சமடைந்த பயணிகள் பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேருந்திலிருந்த பயணி ஒருவர், நமது போட்டோகிராபரைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து, அந்தப் பேருந்து விழுப்புரம் பேருந்து நிலையம் வந்தபோது, நமது போட்டோகிராபர் அந்த ஒட்டுநரை படம் எடுத்துள்ளார். இதுகுறித்து, பேருந்து ஓட்டுநரிடம் விசாரித்தபோது, அவர் வேலை போய்விடும் என்ற அச்சத்தில் தகவல் ஏதும் கொடுக்க மறுத்துவிட்டார். அந்தப் பேருந்து ஓட்டுநர் காயம் காரணமாக ஒரு மாதம்வரை ஓய்வில் இருந்துள்ளார். மேலும் அவருக்கு விடுமுறை அளிக்கப்படாததால், அவர் பணிக்கு செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று தெரிகிறது. இருப்பினும், நெடுஞ்சாலையில் செல்லும் பேருந்தைக் காயமடைந்த ஓட்டுநரை பணி செய்ய பணித்தது பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கையிருப்பு ரூ.1,520... இந்தியாவில் இப்படியும் ஒரு முதல்வர்!
  விகடன் 
 


சொத்து மதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்லும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் சொத்து மதிப்பு குறைந்துகொண்டுபோகும் அரசியல்வாதி ஒருவரும் இந்தியாவில் உள்ளார் என்கிற ஆச்சர்யத் தகவல் நேற்று கிடைத்துள்ளது. அந்த அரசியல்வாதியின் பெயர் மாணிக் சர்க்கார். திரிபுரா மாநில முதல்வராக 5 முறை இருந்துள்ளார். தற்போது, 6 வது முறையாக மாணிக் சர்க்கார், தான்பூர் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தபோதுதான், சொத்து மதிப்பு குறைந்தது என்ற அபூர்வத் தகவலும் வெளிவந்தது.

1998-ம் ஆண்டு முதல் திரிபுரா முதலமைச்சராக உள்ள மாணிக் சர்க்காருக்கு 2013-ம் ஆண்டு வங்கிக் கணக்கில் ரூ.9,720 இருந்துள்ளது. இந்தத் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட அஃப்டவிட்டில் வங்கிக் கணப்பில் ரூ.2,410 இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அகர்தாலாவில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் மாணிக் சர்க்காருக்கு கணக்கு உள்ளது. கையிருப்பாக வெறும் ரூ.1,520 மட்டுமே வைத்திருக்கிறார். மாணிக் சர்க்காருக்கு என்று சொந்தமாக மொபைல்போன்கூட இல்லையென்றே அவரின் அஃப்டவிட் சொல்கிறது.

மாணிக் சர்க்காரின் மனைவி பஞ்சாலி பட்டாச்சர்ஜி ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் 20,140 கையில் இருப்பாகவும் ஃபிக்ஸட் டெபாசிட்களில் ரூ.12 லட்சம் சேமிப்பாக வைத்துள்ளார். 20 கிராம் தங்க நகை சொந்தமாக உள்ளது. அகர்தலாவில் அரசு வழங்கியுள்ள சிறிய வீட்டில் கணவனும் மனைவியும் வசிக்கின்றனர். முதல்வரின் மனைவியாக இருந்தாலும் பஞ்சாலி சைக்கிள் ரிக்ஷாவில்தான் பயணம் செய்கிறார். மாணிக் சர்க்காருக்கு சகோதரர்களுடன் சேர்ந்து சிறிய நிலம் பரம்பரை சொத்தாக உள்ளது.

முதல்வருக்கு வழங்கப்படும் சம்பளத் தொகையை மாணிக் சர்க்கார் கட்சிக்கு வழங்கிவிடுகிறார். மார்க்சிஸ்ட் கட்சி பதிலுக்கு ரூ.10,000 வழங்குகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் பிப்.1 முதல் இலவச அழைப்புகளை நிறுத்துகிறது!

By DIN | Published on : 30th January 2018 10:53 AM




கொல்கத்தா: பிஎஸ்என்எல் ஞாயிற்றுக்கிழமைகளில் அளித்து வந்த இலவச அழைப்புகள் சலுகையை வரும் பிப்ரவரி 1 முதல் முடிவுக்கு கொண்டுவருகிறது.

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் (பிஎஸ்என்எல்) கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரவு 9 மணிக்கு மேலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இலவச அழைப்புகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த மாத மத்தியில் இரவு நேர இலவச அழைப்புகளுக்கான நேரம் 9 மணியில் இருந்து 10.30 மணியாக மாற்றப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைக்கான இலவச அழைப்புகளை திரும்பப் பெற பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது. புதிய திட்டம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

புதிய திட்டங்கள் பிஎஸ்என்எல் தலைமையகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. விரைவில் நல்ல திட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறோம். நாடு முழுவதும் புதிய மாறுதல்கள் பொருந்தும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், இதனால் தங்கள் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாத வகையில் புதிய திட்டங்களை ஆலோசித்து வருவதாக கொல்கத்தா பிஎஸ்என்எல் தலைவர் பொது மேலாளர் எஸ்.பி. திரிபாதி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் தற்போது 6 லட்சம் நிலையான லேண்ட்லைன் இணைப்புகளுடன் சுமார் 12 மில்லியன் இணைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேட்டில் குற்றம் நிரூபணம்: நீதிபதி சுக்லா பதவி விலக உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

By DIN | Published on : 31st January 2018 04:43 AM |

தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றின் மாணவர் சேர்க்கைக்கு விதிகளுக்குப் புறம்பாக அனுமதியளித்த விவகாரத்தில் அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா மீதான குற்றச்சாட்டுகளை விசாரணைக் குழு உறுதி செய்துள்ளது.
நீதித் துறை மாண்புக்கே அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சுக்லா செயல்பட்டிருப்பதாக அக்குழு, தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து பதவியை ராஜிநாமா செய்யுமாறு அவருக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
ஆனால், அதனை ஒப்புக் கொள்ள நீதிபதி சுக்லா மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக அவரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் தீபக் மிஸ்ரா கடிதம் எழுத வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

சர்ச்சைக்குரிய தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றின் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலும், உச்ச நீதிமன்றமும் தடை விதித்திருந்த நிலையில், அதனை மீறி அக்கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் எஸ்.என்.சுக்லா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதுதொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் அடங்கிய குழுவை அமைத்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்திய அக்குழு, அதுதொடர்பாக தனது அறிக்கையை தீபக் மிஸ்ரா முன்பு சமர்ப்பித்தது. தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு முறைகேடாக சுக்லா அனுமதியளித்ததாகவும் இத்தகைய நடவடிக்கைகளால் நீதித் துறைக்கே சுக்லா களங்கம் விளைவித்து விட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், நீதிபதி சுக்லா தாமாக முன்வந்து பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் அல்லது விருப்ப ஓய்வில் செல்ல வேண்டும் என்று தீபக் மிஸ்ரா அறிவுறுத்தினார்.
விடுமுறையில் செல்கிறார்: இதனிடையே, நீதிபதி எஸ்.என்.சுக்லா விடுமுறை கோரி விண்ணப்பித்ததாகத் தெரிகிறது. அதற்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அனுமதி அளித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதவி பறிக்கப்படுமா?

பொதுவாக உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமானால் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் வேண்டும். அதற்காக இரு அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதில் சம்பந்தப்பட்ட நீதிபதியை நீக்க மூன்றில் இரு பங்கு ஆதரவு இருப்பதும் அவசியம். அதன் பின்னர், அதுதொடர்பான பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு அதன்பேரில் அவர் உத்தரவிட வேண்டும். அப்போதுதான் அந்த நீதிபதியின் பதவியை பறிக்க இயலும். அதன் அடிப்படையில் பார்க்கும்போது சுக்லா விவகாரத்திலும் அத்தகைய நடைமுறை பின்பற்றப்படலாம் எனத் தெரிகிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அறிவுறுத்தலை அவர் ஏற்க மறுத்ததாகத் தகவல்கள் வெளியானதால், அடுத்தகட்டமாக குடியரசுத் தலைவரிடமும், பிரதமரிடமும் முறையிட அதிக வாய்ப்புள்ளது.
மருத்துவக் கல்வி இயக்குனர் நியமனம் தாமதம் : அரசிடம் விளக்கம் கோருகிறது ஐகோர்ட்

Added : ஜன 30, 2018 23:28

மதுரை: மருத்துவக் கல்வி இயக்குனர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை செயலருக்கு எதிராக தாக்கலான அவமதிப்பு வழக்கில், தமிழக அரசுத் தரப்பில் விபரங்கள் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக இருந்த, எட்வின் ஜோவை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்து, 2017 ஏப்., 25ல் தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் ரேவதி உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்தார்.
தனி நீதிபதி, 'எட்வின் ஜோவை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்த அரசாணையை ரத்து செய்கிறேன். மனுதாரருக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் எட்வின் ஜோ சார்பில்
மேல்முறையீடு செய்யப்பட்டது. 2017 டிச.,12ல் நீதிபதிகள், 'எட்வின் ஜோவை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்த அரசாணையை ரத்து செய்கிறோம். ரேவதிக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவையும்
ரத்து செய்கிறோம்.எட்வின் ஜோ, ரேவதி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் மீனாட்சி சுந்தரத்தின் தகுதி, திறமை, பணிமூப்பு அடிப்படையில் சட்டத்திற்குட்பட்டு மறு பரிசீலனை செய்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலர், ஆறு வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றனர்.
ரேவதி, 'நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை. சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் மீது, நீதிமன்ற அவமதிப்பின் கீழ், நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, மனு செய்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.தாரணி அமர்வு, 'அரசுத் தரப்பில் விபரங்கள் பெற்று இன்று அரசு வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.
சந்திர கிரகண காலத்தில் தியாகராஜருக்கு அபிேஷகம்

Added : ஜன 31, 2018 00:43

திருவாரூர்: சந்திர கிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு, திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இன்று சிறப்பு அபிேஷகம் நடைபெறுகிறது.குறிப்பிட்ட காலத்தில் சூரியன் அல்லது சந்திரன் மீது, நிழல் விழும்போது,சில மணி நேரம் அந்த நிழல்,ஒரு உபகிரகமாக தோன்றும்.அப்போது, அந்த கிரகத்தின் நிறம் மாறும்.இதுவே, கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. பவுர்ணமியான இன்று, மாலை 6:32மணிக்கு, சந்திரன் மீது, நிழல் விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது; இரவு, 8:45 மணிவரை இது தொடரும்.கிரகண காலத்தில்,தமிழகத்தில் உள்ள கோவில்களின் நடை சாத்தப்படும்.ஆனால்,ஒரு சில கோயில்கள் மட்டுமே திறந்து இருக்கும்.குறிப்பாக, திருவாரூர் தியாகராஜர் கோவிலில்,சந்திர கிரகணமான இன்று, தியாகராஜருக்கு, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், கரும்புசாறு, எலுமிச்சை அபிேஷகம் நடக்கின்றன.அத்துடன், சங்கு, ஸ்தபன அபிேஷகளும் நடக்கின்றன.கிரகணம் முடிந்தவுடன்,தியாகராஜருக்கு சிறப்பு அலங்காரம்,சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. கிரகணம் நடுராத்திரியில் வந்தாலும்,மதிய நேரத்தில் சூரிய கிரகணம் வந்தாலும்,நடைகள் திறந்து தியாகராஜருக்கு பூஜைகள் நடப்பதே,இக்கோயிலின் சிறப்பு
அம்சம்.
'இ - சேவை' மையங்களாக மாறும் தனியார் பிரவுசிங் சென்டர்கள்

தமிழகத்தின் மூலை, முடுக்குகளில் வசிப்போரும் பயன்பெறும் வகையில், தனியார், 'பிரவுசிங் சென்டர்'களில், ஆயிரம், 'இ - சேவை' மையங்கள் அமைக்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.



கோரிக்கை

தமிழகத்தில், அரசு துறைகளில் வழங்கப்படும் சேவைகள் மற்றும் செயல்படுத்தும் திட்டங்களை, இ - சேவை மையங்கள் வாயிலாக, மக்கள் எளிதில் பெற்று வருகின்றனர். தற்போது, மாநிலம் முழுவதும், 10 ஆயிரம் இ - சேவை மையங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் வசிப்போரும் பயன்பெறும் வகையில், புதிய திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.

ஒரு ஆண்டுக்கு உரிமம்

இது குறித்து, அரசு கேபிள், 'டிவி' அதிகாரிகள் கூறியதாவது:'இ - சேவை' மையங்களில், அதிவேக இன்டர்நெட் உதவியுடன், 1.26 கோடி பேர் பயன்அடைந்துள்ளனர். அம்மையங்களை, மேலும், பல இடங்களில் துவக்க, பல்வேறு அரசு துறையினரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனால், இன்டர்நெட் தொழிலில் ஈடுபட்டுள்ள, தகுதியான, தனியார், 'பிரவுசிங் சென்டர்'களை, இ - சேவை மையங்களாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், பிரவுசிங் சென்டர் நடத்தி வருவோரிடம் இருந்து, விண்ணப்பம் கோரப்படுகிறது. அவர்களுக்கான, தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. அவர்கள் ஆரம்பத்தில், 81விதமான சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை அளிக்கும் வகையில், வசதி செய்து தரப்படும். தேவைப்பட்டால், மேலும், பல சேவைகள் அதில், சேர்க்கப்படும். இதற்கான உரிமம், ஒரு ஆண்டுக்கு மட்டும் வழங்கப்படும். விருப்பம் உடையவர்கள், 10

ஆயிரம் ரூபாய்க்கான வரைவோலை மற்றும் இதர விபரங்களுடன், சென்னை, எழும்பூர் மார்ஷல் சாலையில் உள்ள, அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

கிராமப்பகுதி

இதுவரை இதற்கு, 100 பேர் விண்ணப்பித்துள்ளனர். நாங்கள், ஆயிரம் பேருக்கு, இந்த அனுமதியை வழங்க உள்ளோம். இத்திட்டம், பின் கிராமப்பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும். மேலும், விபரங்களை, அரசு கேபிள் இணையதளத்தில் பார்க்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

NEWS TODAY 14.06.2026