Friday, April 20, 2018

டாக்டர்களுக்கு சலுகை மார்க் அரசாணை ரத்து மேல் முறையீடு செய்ய முடிவு

Added : ஏப் 20, 2018 00:21

முதுநிலை மருத்துவ படிப்பில், அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கும் அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., என, முதுநிலை மருத்துவ படிப்பில், 1,641 இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, 50 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள, 50 சதவீத இடங்கள், மாநில ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும்.இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., விதிப்படி, மலைப்பகுதி மற்றும் கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு, 'நீட்' தேர்வு மதிப்பெண்ணுடன், அவர்கள் பணியாற்றிய காலத்திற்கேற்ப, 10 முதல், 30 சதவீதம், சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டு வந்தது. இதற்கான அரசாணையை, தமிழக அரசு, 2017ல், வெளியிட்டது.சலுகை மதிப்பெண் வரையறையில், விதிமீறல் நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், சலுகை மதிப்பெண் வழங்கும் அரசாணையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால், மாநில ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கான கவுன்சிலிங், காலதாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:முதுநிலை மருத்துவ படிப்பில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள, 821 இடங்களுக்கு, 9,848 பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது, சலுகை மதிப்பெண் தொடர்பான அரசாணையை, உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், அரசு டாக்டர்கள் பாதிக்கப்படுவர். எனவே, தமிழக அரசு, விரைவில் மேல்முறையீடு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -
முதியோரை நள்ளிரவில் கைது செய்த போலீசாருக்கு ரூ.5 லட்சம் அபராதம்

Added : ஏப் 19, 2018 22:58

சென்னை, வயதானவர்களை நள்ளிரவில் கைது செய்து, துன்புறுத்திய வழக்கில், டி.எஸ்.பி., உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் வசந்தா, 65. இவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், தாக்கல் செய்த மனு:என் மூதாதையரின் பூர்விக சொத்து, சேலம் மாவட்டம், கொண்டையம்பள்ளியில் உள்ளது. இந்த சொத்து தொடர்பாக, எனக்கும், உறவினர்களுக்கும் இடையே பிரச்னை உள்ளது. இந்நிலையில், 2012ல், கொண்டையம்பள்ளியில் உள்ள, பூர்விக வீட்டில், நானும், என் தங்கையின் கணவர், தர்மலிங்கமும், 85, தங்கியிருந்தோம். நள்ளிரவு, 1:30 மணியளவில், சேலம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார், எங்கள் வீட்டுக்கு வந்தனர்.விசாரணைக்கு வரும்படி அழைத்தனர். காலையில் வருவதாக கூறியதை ஏற்காமல், எங்களை அடித்து துன்புறுத்தி, வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றினர். பின், எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். எங்களுக்கு எதிராக, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட, நில அபகரிப்பு போலீஸ்காரர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:உச்சநீதிமன்றமும், தேசிய மனித உரிமைகள் ஆணையயும், குற்ற வழக்கில் ஒருவரை கைது செய்யும் போது, பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தெளிவுபடுத்தியுள்ளது. போலீஸ் அதிகாரி மோகன்குமார் உள்ளிட்டோர், வழிமுறைகளுக்கு மாறாக, மனுதாரர் மற்றும் அவரது உறவினரின் வயதை கருதாமல், நள்ளிரவில் கைது செய்து துன்புறுத்தியுள்ளனர்.எனவே, மனுதாரருக்கு, ஐந்து லட்சம் ரூபாயை, தமிழக அரசு, நான்கு வாரத்திற்குள் அளிக்க வேண்டும். அந்த தொகையை, டி.எஸ்.பி., மோகன்குமார், இன்ஸ்பெக்டர் ராஜிடமிருந்து, தலா, இரண்டு லட்சம் ரூபாய்; எஸ்.ஐ., தங்கராஜ், பாக்கியலட்சுமி ஆகியோரிடம் இருந்து, தலா, 50 ஆயிரம் ரூபாய் என, வசூலித்துக் கொள்ளலாம். நான்கு போலீஸ் அதிகாரிகள் மீதும், குற்ற நடவடிக்கையும், துறை ரீதியான நடவடிக்கையையும், தமிழக எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உடலில் தொங்கும் 18 கிலோ கட்டிகள்; 34 ஆண்டுகளாக தவிக்கும் மலைவாசி

Updated : ஏப் 20, 2018 00:57 | Added : ஏப் 19, 2018 23:10



  தர்மபுரி : உடலில் தொங்கும், 18 கிலோ கட்டிகளுடன், மலைக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், 34 ஆண்டுகளாக அவதிப்படுகிறார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, மலை கிராமமான போடாரங்காட்டைச் சேர்ந்தவர் பழனிசாமி, 46.இவருக்கு, 12 வயதில் இருந்து, தாடை, கழுத்தின் பின் பகுதி, கைகளின் மணிக்கட்டு அருகே என, எட்டு கட்டிகள் வளர துவங்கின. அதிர்ச்சியடைந்த பெற்றோர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். மருந்து, மாத்திரைகளை டாக்டர்கள் கொடுத்தனர்.

குணமாகாமல், கட்டிகள் வளர்ந்த நிலையில், பழனிசாமிக்கு பேச்சுத்திறன் பாதிக்கப்பட்டது. உடலில் கட்டிகளுடன் பயணிக்க முடியாததால், மருத்துவ சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார். எந்த பணிக்கும் செல்லாத நிலையில், உதவித்தொகை கேட்டு, பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம், மனு கொடுத்தும், பலனில்லை. இந்த பிரச்னையால், பழனிசாமிக்கு திருமணமும் ஆகவில்லை. சகோதரர்கள் தயவில் வாழ்ந்து வருகிறார்.

பழனிசாமி கூறுகையில், ''மாவட்ட நிர்வாகம், உதவித்தொகை வழங்கா விட்டாலும் பரவாயில்லை; உடலில் உள்ள கட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்தால், என் சொந்தக் காலிலேயே நின்று, பிழைத்துக் கொள்வேன்,'' என்றார்.
மோசடியாக திருமண பதிவு சார் பதிவாளர் 'சஸ்பெண்ட்'

Added : ஏப் 19, 2018 23:01

சென்னையில், விதிகளை மீறி, 2,000 திருமணங்களை பதிவு செய்த புகாரில், பம்மல் சார் பதிவாளர், வசந்தகுமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.தமிழகம் முழுவதும், திருமணங்களை பதிவு செய்வதில், சார் பதிவாளர்கள் பல்வேறு விதிமீறல்களில், ஈடுபடுவதாக புகார் கூறப்படுகிறது. இது தொடர்பாக, உயர் நீதிமன்றம் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. இருப்பினும், சில சார் பதிவாளர் அலுவலகங்களில் தொடர்ந்து, மோசடி திருமண பதிவு நடப்பதாக புகார்கள் வந்தன.இது தொடர்பாக நடந்த விசாரணையில், பம்மல், மாதவரம் சார் பதிவாளர் அலுவலகங்களில், குறிப்பிட்ட கால வரையறையில், 2,000 திருமணங்கள் பதிவானது தெரிய வந்தது. இலங்கையை சேர்ந்த நபர்களின் திருமண பதிவுக்கு, காவல் துறையின் தடையின்மை சான்று இல்லாமல், சார் பதிவாளர், தன்னிச்சையாக விதிகளை மீறி, திருமணங்களை பதிவு செய்தது கண்டறியப்பட்டது.இதையடுத்து, பம்மல் சார் பதிவாளர், வசந்தகுமாரை, 'சஸ்பெண்ட்' செய்து, பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல, மாநிலம் முழுவதும் மோசடி திருமண பதிவுகளை மேற்கொண்ட, சார் பதிவாளர்கள் மீது நடவடிக்கை பாயும் என, கூறப்படுகிறது. - நமது நிருபர் -
வயதிற்கேற்ப ஓய்வூதியம் உயர்த்த விதிகளில் திருத்தம்

Added : ஏப் 19, 2018 22:40

சென்னை, ஓய்வூதியம் பெறுவோரின் வயதுக்கேற்ப, ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க, விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி, 80 முதல், 84 வயதிற்கு உட்பட்டோருக்கு, அடிப்படை ஓய்வூதியத்தில், 20 சதவீதம்; 85 முதல், 89 வயது வரை உள்ளோருக்கு, 30 சதவீதம்; 90 முதல், 94 வயது வரை உள்ளோருக்கு, 40 சதவீதம் உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதே போல், 95 முதல், 99 வயது வரை உள்ளவர்களுக்கு, 50 சதவீதம்; 100 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, 100 சதவீதம், உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதேபோல், அரசு பணியிலிருக்கும் போது இறந்தவர்களுக்கு வழங்கப்படும், பணிக்கொடை பலன் விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி, பணியில் சேர்ந்த ஓராண்டுக்குள் இறந்தால், இரண்டு மடங்கு மாத சம்பளம்; ஓராண்டுக்கு மேல், ஐந்தாண்டுக்குள் இறந்தால், ஆறு மடங்கு மாத சம்பளம் வழங்க வேண்டும் என, திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.அதே போல், ஐந்தாண்டு முதல், 11 ஆண்டுக்குள் இறந்தால், 15 மடங்கு மாத சம்பளம்; 20 ஆண்டுக்கு மேல் இறந்தால், அதிகபட்சமாக, 33 மடங்கு மாத சம்பளம் வழங்க வேண்டும் என, திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
'யானை கருணை கொலை கூடாது'

Added : ஏப் 19, 2018 22:38

சேலம், சேலம், சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரி, 42, உடல்நலம் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வருகிறது.இது தொடர்பான வழக்கில், யானையை கருணைக் கொலை செய்வதற்காக, அதன் உடல்நிலை குறித்த அறிக்கையை அனுப்ப, உயர் நீதிமன்றம்அறிவுறுத்தியது.சேலம், கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர் லோகநாதன் தலைமையில், மருத்துவக் குழுவினர், 12 மணி நேரம் ஆலோசித்து, நேற்று முன்தினம் அறிக்கை தயாரித்தனர். அது, நேற்று காலை, உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது.கால்நடை அதிகாரிகள் கூறியதாவது:யானைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நாளிலிருந்த உடல் எடை, தற்போதைய உடல் எடை சேகரிக்கப்பட்டது.தற்போது, அதன் உடல் நலனில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதால், தொடர் சிகிச்சை அளிக்கிறோம்.அதனால், தற்போதைக்கு கருணைக் கொலை செய்யவேண்டாமென அறிக்கையில் தெரிவித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
சித்ரா பவுர்ணமி - தி.மலையில் விரைவாக சுவாமி தரிசனம்

Added : ஏப் 19, 2018 22:35

திருவண்ணாமலை,''சித்ரா பவுர்ணமியன்று, அருணாசலேஸ்வரர் கோயிலில், பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் கந்தசாமி கூறினார்.சித்ரா பவுர்ணமிக்கு, திருவண்ணாமலை வரும் பக்தர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து, கலெக்டர் கந்தசாமி, அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:திருவண்ணாமலையில் வரும், 29 காலை, 6:58 முதல் மறுநாள் காலை, 6:52 வரை, சித்ரா பவுர்ணமி கிரிவலம் நேரம் உள்ளது.சித்ரா பவுர்ணமி கிரிவலத்தில், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரலாம், என எதிர்பார்க்கப்படுகிறது. குடிநீர் வசதி, 12 மருத்துவ முகாம்களின் மூலம் மருத்துவ வசதி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்காக, மூன்று பேட்டரி கார் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.கோயிலினுள், பக்தர்கள் வரிசையில் நிற்கும் பாதை அகலப்படுத்தி, விரைவாக சுவாமி தரிசனம் செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.மாவட்டம் முழுவதும், 2,900 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒன்பது தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து, கிரிவலம் பாதைக்கு செல்ல, 40 இலவச பஸ்கள் இயக்கப்படுகின்றன. மலையேறவும், மலையை சுற்றிலும், கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.பவுர்ணமி தினத்தில், 14 ரயில்கள், திருவண்ணாமலை வழியாக செல்கிறது. இந்த ரயில்களின், காலநேரம் குறித்து, முன்கூட்டியே அறிவிக்கப்படும். 45 இடங்களில், விவசாய நிலங்களில் குளிக்கும் வசதியுடன் கூடிய, தற்காலிக இலவச பாத்ரூம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

NEWS TODAY 28.06.2026