Sunday, April 22, 2018

ஆர்.டி.ஓ., ஆபீசில் கட்டணம் செலுத்த... காத்திருக்க வேண்டாம்!அடுத்த மாதம், 'ஆன்லைன்' அமலாகிறது

Added : ஏப் 22, 2018 00:11

பொள்ளாச்சி;வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், 'ஆன்லைன்' முறையில் கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால், கட்டணம் செலுத்த மணிக்கணக்கில் காத்திருப்பது தவிர்க்கப்படும்.

வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு, புதிதாக 'லைசென்ஸ்' பெறுதல், எல்.எல்.ஆர்., லைசென்ஸ் புதுப்பித்தல், வரி செலுத்துதல், வாகனங்களுக்கு பதிவு எண் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வாகன ஓட்டுனர்கள் வந்து செல்கின்றனர்.தினமும், 200க்கும் மேற்பட்டோர் பல்வேறு பணிக்காக கட்டணம் மற்றும் வரி செலுத்த காத்திருக்கின்றனர். இதனால், அதிகாரிகளின் வேலைப்பளு அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலக பணிகளுக்கு, 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பித்தல் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும், சாலை வரியும், 'ஆன்லைன்' முறையில் செலுத்தலாம்.அடுத்த கட்டமாக, லைசென்ஸ் புதுப்பிப்பு உள்ளிட்ட அனைத்தும், 'விண்ணப்ப படிவம் 2' மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்தனியாக விண்ணப்பங்கள் கொடுக்கும் நடைமுறைக்கு பதிலாக புதிய நடைமுறை கொண்டு வந்ததால், மக்கள் எளிதாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
வரிசையில் நின்று கட்டணம் செலுத்துவதற்கு பதிலாக, 'ஆன்லைன்' முறையில் கட்டணம் செலுத்தலாம். இதற்கான ஆயத்தப்பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'அலுவலகங்களில் கட்டணம் செலுத்தும் நடைமுறைக்கு மாற்றாக, 'ஆன்லைன்' முறையில் கட்டணம் செலுத்தும் நடைமுறை கொண்டு வரப்படுகிறது.விண்ணப்ப கட்டணத்தை, 'ஆன்லைனில்' செலுத்திய பின், பணிகளை மேற்கொள்ளலாம். அடுத்த மாதம் முதல், ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் நடைமுறை செயல்படுத்தப்படும்,' என்றனர்.
நான்கு அலுவலகத்தில் திட்டம் ஆய்வு!

வெளியூர்களில் உள்ள வாகன ஓட்டுனர்கள், தங்களது சொந்த ஊரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சென்று ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். இதனை தவிர்க்க, தமிழகம் முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும், லைசென்ஸ் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தலாம்.

முதற்கட்டமாக, திருச்செங்கோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட, நான்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், சோதனை முறையில் இத்திட்டம் ஆய்வு செய்யப்படுகிறது. இதனை அடிப்படையாக கொண்டு மற்ற பகுதிகளிலும் அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஆண் உடலுக்குள் தவிக்கும் பெண் மனம்!'3 ஜி' மூன்றாம் பாலினம் குறித்த முக்கிய பதிவு

Added : ஏப் 21, 2018 22:56

திருநங்கைகள் மீதான இந்த சமூகத்தின் பார்வை, கேலியும், கிண்டலும் நிறைந்தது. பெற்றோர்களாலும், உடன் பிறந்தவர்களாலும் புறக்கணிப்பட்ட இவர்களை, இந்த சமூகமும் சேர்ந்து அவமதிக்கிறது. மனிதர்களாக பிறந்தும், இனத்தோடு இனம் சேர்ந்து வாழமுடியாத நிலையில், திருநங்கைகள் தனிமைப்படுத்தப்படுவது தொடர்கிறது. உடலால் ஆணாகவும், மனதால் பெண்ணாகவும் இரண்டு நிலைக்கும் இடையில் இருந்து அவர்களின் மனம் தவிக்கிறது.

எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகு, திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரம் சட்ட ரீதியாக கிடைத்திருக்கிறது. இந்த அங்கீகாரம் அவர்களின் இருண்ட வாழ்க்கைக்குள் ஒரு நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது. திருநங்கைகளுக்கு இருக்கும் சமூக பிரச்னைகளை சித்தரிக்கும் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் பல எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானது, '3 ஜி' அதாவது தேர்டு ஜெண்டர்.அர்ஜூன் படேல் இயக்கியுள்ள இந்த குறும்படம், திருநங்கைகளின் மீதான நம் சிந்தனைகளை உடைத்து எறிகிறது. ஆண், பெண் என்ற தகுதியுடன் இருப்பவர்களிடம் இல்லாத பல நல்ல குணங்கள், அன்பும், கருணையும் திருநங்கைகளிடம் இருப்பதை இந்த குறும்படம், எளிமையாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தியுள்ளது.

கேரளா, கோவா மற்றும் தமிழகத்தில் நடந்த பல்வேறு குறும்பட போட்டிகளில் திரையிடப்பட்டு, சிறந்த குறும்படத்துக்கான விருதுகளை இப்படம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த குறும்பட விழாவிலும் சிறந்த படத்துக்கான சூரி அவார்டை பெற்றுள்ளது. தமிழ் புத்தாண்டு அன்று நடிகர் பாபி சிம்ஹா, 'யு டியூப்' பில் இந்த படத்தை வெளியிட்டார்.

கோவையை சேர்ந்த நடிகர் சாய் கார்த்திக், தோற்றம், பேச்சு மற்றும் உடல் மொழி அனைத்தையும் அப்படியே உள்வாங்கி, ஒரு திருநங்கையாகவே உருமாறி நடித்திருக்கிறார். நமது பாராட்டுக்களை வாங்கிக் கொண்டு, நம்மோடு பேசினார்...இந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக திருநங்கைகளோடு கொஞ்ச நாள் தங்கி இருந்தேன். அவர்களுடன் பேசிப் பழகி, அவர்களின் சுபாவம், பழக்க வழக்கம், அவர்களுக்குள்ள பிரச்னை என்ன என்பதை கற்றுக்கொண்டேன். திருநங்கைகள், அளவு கடந்த இரக்க குணம் உடையவர்கள்; தாய்மை உள்ளம், அவர்களுக்குள் புதைந்து கிடக்கிறது. இத்தனை அன்பும், பாசமும் உள்ள இவர்களை பெற்றோரும், உடன்பிறந்தோரும் ஒதுக்குவது, வேதனை தரும் புதிர்.திருநங்கையரின் துாய்மையான அன்பையும், கருணையையும் சுருக்கமாகச் சொல்கிறது, 3 ஜி. இந்த வேடத்தில் நடித்த பிறகு தான் எனக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்.சந்தோஷமாகச் சொல்கிறார் சாய் கார்த்திக்.-நமது நிருபர்-
சான்று பதிவேற்றம் புதிய நடைமுறை

Added : ஏப் 21, 2018 20:59

கோவை:அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கும், கலந்தாய்வுக்கும், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்துக்கு நேரடியாகச் செல்ல வேண்டியுள்ளது.
இந்நடைமுறையால் தேர்வர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து செலவினம், கால விரயம் உள்ளிட்ட அசவுகரியங்களை கருத்தில் கொண்டு, அசல் சான்றுகளை சரிபார்க்கும் பணியை எளிமைப்படுத்தும் வகையில், புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.தேர்வர்கள், தங்களது விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள கல்வித்தகுதிக்கான அனைத்து அசல் சான்றுகளையும், அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்களில், பக்கத்துக்கு ரூ.5 வீதம் கட்டணம் செலுத்தி, 'ஸ்கேன்' செய்து, பதிவேற்றம் செய்து, ஒப்புகை சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.கோவை மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சேவை மையத்தில், இச்சேவையை பெறலாம், என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிசியோதெரபி சேர்க்கை; யோகா படித்தால் முன்னுரிமை

Added : ஏப் 21, 2018 20:33

கோவை:யோகா பாடத்தில், குறைந்தபட்சம் ஓராண்டு பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு, பிசியோதெரபி பட்டப்படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும் என, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) அறிவித்துள்ளது.

யு.ஜி.சி., சார்பில், யோகா படித்தவர்களுக்கு பிசியோதெரபி பட்டப்படிப்பில் முன்னுரிமை வழங்குவது குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க சிறப்புக் குழு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, புதிய அறிவிப்பு யு.ஜி.சி., இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

குறைந்தபட்சம் ஓராண்டு யோகா பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு, பிசியோதெரபி பட்டப்படிப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள், தகுதிகள் உள்ளிட்டவை சக மாணவர்கள் போலவே கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.எதிர்வரும் மாணவர்கள் சேர்க்கை செயல்பாடுகளில் இவ்வழிகாட்டுதல்களை செயல்படுத்தவும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளுக்கு இதுகுறித்து தெளிவுபடுத்தவும், பல்கலைகளுக்கு யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

Added : ஏப் 22, 2018 05:05

மூணாறு: கேரளா, மூணாறில் கோடைசுற்றுலா சீசன் துவங்கியபோதும் பயணிகளின் வரத்து மிகவும் குறைவாக உள்ளது.முக்கிய சுற்றுலாப்பகுதியான மூணாறுக்கு ஆண்டு முழுவதும் பயணிகள் வந்து செல்கின்றனர். ஏப்ரல், மே மாதங்களில் கூட்டம் அலைமோதும்.ஆனால் இந்தாண்டு பயணிகளின் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. மாட்டுபட்டியில், படகு சவாரி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை பார்க்க ஒரு நாளைக்கு சராசரியாக 2,500 முதல் 3,000 பயணிகள் வந்து செல்வர். ஆனால் நேற்று முன்தினம் 928 பேர் மட்டும் வந்தனர். ஜூலையில் குறிஞ்சி பூக்கள் பூக்கும் நேரத்தில் கேரள பயணிகள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தொடர் போராட்டம் நடப்பதால் பயணிகள் வருகை குறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மணிக்கு 2 ரூபாய் வாடகை சைக்கிள் திட்டம்

Added : ஏப் 21, 2018 19:40

லக்னோ:லக்னோவில், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், உடல் நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஒரு மணி நேரத்துக்கு, இரண்டு ரூபாய் கட்டணத்தில், வாடகை சைக்கிள் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நேற்று முன்தினம், லக்னோவில், ஒரு மணி நேரத்துக்கு, இரண்டு ரூபாய் கட்டணத்தில், வாடகை சைக்கிள் திட்டத்தை, மேயர் சம்யுக்தா துவக்கி வைத்தார்.

இது குறித்து, சுற்றுச்சூழல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:வாடகை சைக்கிள் வசதியை பயன்படுத்த விரும்புவோர், தங்கள், 'ஸ்மார்ட்' போனில், 'ஜூம்கார்' என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்; அதில், உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து, வாடகை சைக்கிள் வசதியை பெறலாம்.

ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய இந்த சைக்கிள்களின் பூட்டை, ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி திறக்கலாம். கட்டணத்தை, 'பே - டிஎம்' மூலம் செலுத்த வேண்டும். முதல் கட்டமாக, 12 இடங்களில், வாடகை சைக்கிள் வசதி கிடைக்கும்.

சைக்கிளை எடுத்துச் செல்வோர், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே, திரும்ப ஒப்படைக்க வேண்டும். விரைவில் அனைத்து இடங்களிலும் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த வசதி, 24 மணி நேரமும் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
கழிப்பறை கட்டாத அரசு ஊழியருக்கு சம்பளம், 'கட்'

Added : ஏப் 22, 2018 01:17 |



ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில், வீடுகளில் கழிப்பறை கட்டாத, 600 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாநிலமாக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
லடாக்கின் லே மற்றும் கார்கில் மாவட்டங்கள், காஷ்மீரின் தென் பகுதியில் உள்ள ஷோபியான் மற்றும் ஸ்ரீநகர் ஆகியவை திறந்தவெளி கழிப்பறை இல்லா மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள், அனந்தநாக் மற்றும் புல்வாமா மாவட்டங்களில், கழிப்பறை கட்டும் பணி, 100 சதவீதம் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிஷ்த்வார் மாவட்டத்தில், கழிப்பறை கட்டும் பணி, 57 சதவீதத்தை எட்டியுள்ளது. இங்கு பணிபுரியும் அரசு ஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்யப்பட்டது; அப்போது, 616 ஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை கட்டப்படாதது தெரியவந்தது. இதையடுத்து, கழிப்பறை கட்டும் வரை, அந்த ஊழியர்களின் மாத சம்பளத்தை நிறுத்தும்படி, மாவட்ட அபிவிருத்தி ஆணையர், அங்கிரேஸ் சிங் ராணா உத்தரவிட்டார்.


NEWS TODAY 29.06.2026