Sunday, April 22, 2018

ஆர்.டி.ஓ., ஆபீசில் கட்டணம் செலுத்த... காத்திருக்க வேண்டாம்!அடுத்த மாதம், 'ஆன்லைன்' அமலாகிறது

Added : ஏப் 22, 2018 00:11

பொள்ளாச்சி;வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், 'ஆன்லைன்' முறையில் கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால், கட்டணம் செலுத்த மணிக்கணக்கில் காத்திருப்பது தவிர்க்கப்படும்.

வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு, புதிதாக 'லைசென்ஸ்' பெறுதல், எல்.எல்.ஆர்., லைசென்ஸ் புதுப்பித்தல், வரி செலுத்துதல், வாகனங்களுக்கு பதிவு எண் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வாகன ஓட்டுனர்கள் வந்து செல்கின்றனர்.தினமும், 200க்கும் மேற்பட்டோர் பல்வேறு பணிக்காக கட்டணம் மற்றும் வரி செலுத்த காத்திருக்கின்றனர். இதனால், அதிகாரிகளின் வேலைப்பளு அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலக பணிகளுக்கு, 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பித்தல் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும், சாலை வரியும், 'ஆன்லைன்' முறையில் செலுத்தலாம்.அடுத்த கட்டமாக, லைசென்ஸ் புதுப்பிப்பு உள்ளிட்ட அனைத்தும், 'விண்ணப்ப படிவம் 2' மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்தனியாக விண்ணப்பங்கள் கொடுக்கும் நடைமுறைக்கு பதிலாக புதிய நடைமுறை கொண்டு வந்ததால், மக்கள் எளிதாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
வரிசையில் நின்று கட்டணம் செலுத்துவதற்கு பதிலாக, 'ஆன்லைன்' முறையில் கட்டணம் செலுத்தலாம். இதற்கான ஆயத்தப்பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'அலுவலகங்களில் கட்டணம் செலுத்தும் நடைமுறைக்கு மாற்றாக, 'ஆன்லைன்' முறையில் கட்டணம் செலுத்தும் நடைமுறை கொண்டு வரப்படுகிறது.விண்ணப்ப கட்டணத்தை, 'ஆன்லைனில்' செலுத்திய பின், பணிகளை மேற்கொள்ளலாம். அடுத்த மாதம் முதல், ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் நடைமுறை செயல்படுத்தப்படும்,' என்றனர்.
நான்கு அலுவலகத்தில் திட்டம் ஆய்வு!

வெளியூர்களில் உள்ள வாகன ஓட்டுனர்கள், தங்களது சொந்த ஊரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சென்று ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். இதனை தவிர்க்க, தமிழகம் முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும், லைசென்ஸ் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தலாம்.

முதற்கட்டமாக, திருச்செங்கோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட, நான்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், சோதனை முறையில் இத்திட்டம் ஆய்வு செய்யப்படுகிறது. இதனை அடிப்படையாக கொண்டு மற்ற பகுதிகளிலும் அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024