Sunday, April 22, 2018

ஆண் உடலுக்குள் தவிக்கும் பெண் மனம்!'3 ஜி' மூன்றாம் பாலினம் குறித்த முக்கிய பதிவு

Added : ஏப் 21, 2018 22:56

திருநங்கைகள் மீதான இந்த சமூகத்தின் பார்வை, கேலியும், கிண்டலும் நிறைந்தது. பெற்றோர்களாலும், உடன் பிறந்தவர்களாலும் புறக்கணிப்பட்ட இவர்களை, இந்த சமூகமும் சேர்ந்து அவமதிக்கிறது. மனிதர்களாக பிறந்தும், இனத்தோடு இனம் சேர்ந்து வாழமுடியாத நிலையில், திருநங்கைகள் தனிமைப்படுத்தப்படுவது தொடர்கிறது. உடலால் ஆணாகவும், மனதால் பெண்ணாகவும் இரண்டு நிலைக்கும் இடையில் இருந்து அவர்களின் மனம் தவிக்கிறது.

எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகு, திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரம் சட்ட ரீதியாக கிடைத்திருக்கிறது. இந்த அங்கீகாரம் அவர்களின் இருண்ட வாழ்க்கைக்குள் ஒரு நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது. திருநங்கைகளுக்கு இருக்கும் சமூக பிரச்னைகளை சித்தரிக்கும் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் பல எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானது, '3 ஜி' அதாவது தேர்டு ஜெண்டர்.அர்ஜூன் படேல் இயக்கியுள்ள இந்த குறும்படம், திருநங்கைகளின் மீதான நம் சிந்தனைகளை உடைத்து எறிகிறது. ஆண், பெண் என்ற தகுதியுடன் இருப்பவர்களிடம் இல்லாத பல நல்ல குணங்கள், அன்பும், கருணையும் திருநங்கைகளிடம் இருப்பதை இந்த குறும்படம், எளிமையாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தியுள்ளது.

கேரளா, கோவா மற்றும் தமிழகத்தில் நடந்த பல்வேறு குறும்பட போட்டிகளில் திரையிடப்பட்டு, சிறந்த குறும்படத்துக்கான விருதுகளை இப்படம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த குறும்பட விழாவிலும் சிறந்த படத்துக்கான சூரி அவார்டை பெற்றுள்ளது. தமிழ் புத்தாண்டு அன்று நடிகர் பாபி சிம்ஹா, 'யு டியூப்' பில் இந்த படத்தை வெளியிட்டார்.

கோவையை சேர்ந்த நடிகர் சாய் கார்த்திக், தோற்றம், பேச்சு மற்றும் உடல் மொழி அனைத்தையும் அப்படியே உள்வாங்கி, ஒரு திருநங்கையாகவே உருமாறி நடித்திருக்கிறார். நமது பாராட்டுக்களை வாங்கிக் கொண்டு, நம்மோடு பேசினார்...இந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக திருநங்கைகளோடு கொஞ்ச நாள் தங்கி இருந்தேன். அவர்களுடன் பேசிப் பழகி, அவர்களின் சுபாவம், பழக்க வழக்கம், அவர்களுக்குள்ள பிரச்னை என்ன என்பதை கற்றுக்கொண்டேன். திருநங்கைகள், அளவு கடந்த இரக்க குணம் உடையவர்கள்; தாய்மை உள்ளம், அவர்களுக்குள் புதைந்து கிடக்கிறது. இத்தனை அன்பும், பாசமும் உள்ள இவர்களை பெற்றோரும், உடன்பிறந்தோரும் ஒதுக்குவது, வேதனை தரும் புதிர்.திருநங்கையரின் துாய்மையான அன்பையும், கருணையையும் சுருக்கமாகச் சொல்கிறது, 3 ஜி. இந்த வேடத்தில் நடித்த பிறகு தான் எனக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்.சந்தோஷமாகச் சொல்கிறார் சாய் கார்த்திக்.-நமது நிருபர்-

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024