Wednesday, May 30, 2018

``மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை..! - இந்த ஆசை சரிதானா? 

க.சுபகுணம்  vikatan 30.05.2018

கோடைக்காலம் தொடங்கியவுடன் கையில் நைலான் நரம்புகளால் செய்த தூண்டில்களை எடுத்துக்கொண்டு குளம் குளமாகத் தேடிச்சென்று மீன்பிடித்த நினைவுகள் பலரது மனதில் குளத்தோரச் சிற்றலைகளைப் போல் அலைமோதிக் கொண்டிருக்கும். அன்றெல்லாம் தேடித் தேடிச் சென்று கலங்கிய குளங்கள் தெளியும் வரை பொறுமை காத்திருந்தத் தருணங்களும், பொறி, அரிசிச் சோறு போன்றவற்றைத் தூவிவிட்டு அதைச் சாப்பிட மீன்கள் மேலே வரும்வரை நீரில் சிறு அலைகூடத் தளும்பவிடாமலும், தேவையான அளவு மீன்கள் மேலே வரும்வரை சிறு ஓசைகூடச் செய்யாமல் அமைதிகாத்த நிமிடங்களும் நெஞ்சிலிருந்து என்றும் நீங்காத நினைவுக் குமிழிகள்.



அந்த நினைவுக் குமிழிகளுக்குள் நாம் தேடிப் பிடித்த அனைத்து மீன் வகைகளும் இன்றும் உயிர்வாழ்ந்துகொண்டுதானிருக்கின்றன. நமது ஆழ்மனதில் தேங்கிக்கிடக்கும் நினைவகக் குளங்களில். தூண்டிலில் கட்டுவதற்காக மண்ணைத் தோண்டித் தோண்டிச் சேகரிக்கும் மண்புழு இரைகளில் தொடங்குகிறது அன்றைய சிறுவர்களின் மீன் பற்றிய அறிவு. மண்புழுவைத் தூண்டிலில் கட்டிவிடுவதன் மூலம் அனைத்து மீன்களையும் பிடித்துவிட முடியாது. சூரை, கெண்டை, வவ்வால் போன்ற மீன்களை மட்டுமே அப்படிப் பிடிக்க முடியும். கொரத்தி, ஜிலேபி போன்ற சில மீன்களை நீரில் உணவைத் தூவி வலை போட்டுத்தான் பிடிக்க முடியும்.

கல் இடுக்குகளில் ஒளிந்துகொள்ளும் கல்லுளிமங்கன் முதல் சாப்பிடுவதற்கு ஆகாததால் கண்ணில் பட்டாலும் அவசியமின்றிக் கொல்லக்கூடாது என்று அப்படியே விட்டுவிட்ட ஓலை மீன் வரை எதையும் எப்போதும் தேவையின்றிப் பிடித்ததில்லை. பொழுதுபோக்காகவே இருந்தாலும் குழுவில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு முன்னமே திட்டமிட்ட மீன்களைத் தவிர வேறு எதையும் பிடித்ததில்லை.



அன்று சிறுவர்களாய் நாம் குளங்கள் தேடி ஓடினோம். அதையே ஸ்போர்ட் ஃபிஷிங் (Sport Fishing) என்ற பெயரில் வியாபாரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். சிறு வித்தியாசம், நாம் சில மீன்களைப் பிடித்துச் சாப்பிட்டோம். இவர்கள் வேறொரு வழியைப் பின்பற்றுகிறார்கள். அதாவது நாம் போகலாம், மீன் பிடிக்கலாம். எவ்வளவு மீன்களை வேண்டுமானாலும் பிடிக்கலாம். ஆனால், ஒரு விதியுண்டு. நாம் பிடிக்கும் மீன்களை மீண்டும் கடலிலேயே விட்டுவிட வேண்டும்.
இந்த வகைப் பொழுதுபோக்கு மீன்பிடித்தலில் எழுதப்படாத ஒரு விதியுண்டு. ஒருமுறை பிடிக்கப்பட்ட மீன் மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் பிடிக்கப்படலாம். ஆனால், பிடித்தவுடன் கடலில் விட்டுவிட வேண்டும். அதற்கு ஏற்படும் காயங்களைப் பற்றியோ, அவற்றின் உடலில் சேரும் செயற்கை இரைகளைப் பற்றியோ எந்தவிதக் கவலையும் இல்லை. அது வெறும் மீன் தானே.



செயற்கை இரைகளைப் பயன்படுத்தி பிடிக்கும் இவர்கள் பிடிக்கப்படும் மீன்கள் கடலிலேயே மீண்டும் விடப்படுவதால் வளம் குறையாது என்று வாதிடுகிறார்கள். ஆனால், அந்தச் செயற்கை இரைகள் பிடித்த பிறகு விடப்படும் மீனின் வயிற்றுக்குள் தான் இருக்கும் என்பதையும் அந்த பிளாஸ்டிக் இரை அதை எப்படியும் கொன்றுவிடும் என்பதையும் ஏன் மறந்து விடுகிறார்கள்?

உணவுக்காக வேட்டையாடலாம் என்பது இயற்கை விதி. ஆனால், அதற்காகக் கூட எந்த உயிரையும் துன்புறுத்தக்கூடாது. 95% மீன்கள் இந்தக் கடும் சோதனைகளைக் கடந்தும் உயிர் வாழ்கின்றனதான். ஆனால், இங்கே கொல்லப்படுவதல்ல பிரச்னை. மீன்களை ஒவ்வொருவராகப் பிடித்து அதற்கு 1%, 3%, 5% என்ற அளவுகளில் காயங்களைத் தந்துவிட்டு இரக்க குணத்தோடு அதை மீண்டும் வாழவிடுவது எவ்வளவு பெரிய கபட நாடகம்?

உணவுக்காக மீன் பிடிப்பவர்கள் மீண்டும் அவற்றின் வம்சம் வளர்வதற்காகக் கொஞ்சம் விட்டுவைப்பார்கள். ஆனால், இத்தகைய பொழுதுபோக்கு மீனவர்கள் தங்கள் சுய திருப்திக்காக மற்ற உயிர்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைத் தான் கொல்லவில்லையே! மீண்டும் உயிருடன் விட்டு விடுகிறார்களே! என்றும் சிலர் வாதிடுகிறார்கள். மீன்களுக்கு இயற்கையாகவே தப்பித்து வாழக்கூடிய திறன் உண்டு. ஆனால், நமது மனநிம்மதிக்காக அவற்றைப் பிடித்துத் துன்புறுத்துவது எந்த வகையில் நியாயம்?

இந்தப் புகார் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றலாம். இது கவனிக்கப்பட வேண்டிய விபரீத பிரச்னை. லாப நோக்கோடு உளவியல் ரீதியாக இந்த வகை ஆசைகளை வளர்த்தெடுக்கும் ஊக்குவிக்கும் நிறுவனங்கள், ஆசைகளைத் தோற்றுவிப்பதன் மூலம் இயற்கையின் அடிப்படை அறங்களை மக்கள் மத்தியில் மறக்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.



``ஓர் உயிரினத்துக்குக் காயம் உண்டாக்கும் வகையில் செய்யும் செயல்கள், கொடுக்கும் தண்டனைகள், வற்புறுத்திச் செய்யவைக்கும் செயல்கள் அது தண்டனையாகவோ அல்லது கொடுப்பவரின் மன நிம்மதிக்காகவோ எதுவாக இருப்பினும் அது சித்ரவதை தான்."

இது நமது சட்டத்தில் சித்ரவதை குறித்து எழுதப்பட்டிருக்கும் விளக்கம். இதில் எந்த உயிருக்கும் என்ற வரையறையில் மீன்களும் உள்ளடங்கும். இதற்கும் பலர் அறிவியல் ரீதியாக விளக்கம் தர முயற்சிக்கிறார்கள். மீன்களுக்கு வலிகளை உணரும் நரம்பு மண்டலங்கள் இல்லாததால் இந்தச் செயல்களால் அவை எதையும் உணராது என்கிறார்கள். நம்மை சில நிமிடங்கள் சுவாசிக்க வழியற்ற வகையில் விட்டுவிடுவோம். மீண்டும் சுவாசிக்க அனுமதிக்கலாம். மீண்டும் அவ்வாறே சுவாசிக்க வழியின்றிச் செய்யலாம். மீண்டும் அனுமதிப்போம். இவ்வாறாகத் தொடர்ச்சியாக இம்சித்துக்கொண்டே இருந்தால், அப்போது புரியும் மீன்கள் பிடிக்கப்பட்டு மீண்டும் விடும்வரை மூச்சுத்திணறி அவை படும்பாடு.

என்றோ ஒரு பாட்டி சொன்ன வரிகள், ``தினமொரு பொழுதுபோக்கு இருந்தால், சூரியனைக் கண்ட பனிபோல் கவலைகள் கரையும்".

உண்மைதான். அது அடுத்த உயிர்களின் கவலைகளை அடித்தளமாகக் கொண்ட பொழுதுபோக்குகளாக இல்லாத வரையிலும்.
இரண்டாக உடைந்த ரயில் சக்கரம் - பெரும் விபத்து தவிர்ப்பு! 

பிரேம் குமார் எஸ்.கே.

ஓடும் ரயிலின் சக்கரம் ஒன்று இரண்டாக உடைந்ததால், அதிவிரைவு ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.



ரயில்வே துறையில் நடக்கும் பெரும்பாலான விபத்துக்களுக்கு, தண்டவாளத்தில் ஏற்படும் விரிசல் போன்ற பிரச்னைகள்தான் காரணமாக இருக்கும். ஆனால், நேற்று காலை அதிவிரைவு ரயிலின் சக்கரம் ஒன்று இரண்டாக உடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோரக்பூர் - யஷ்வந்த்பூர் அதிவிரைவு ரயிலின் சக்கரம், ரயில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்போது இரண்டாக உடைந்துள்ளது.

ஓடும் ரயிலில் இருந்து விநோத சத்தம் கேட்டுள்ளது. இதனால், உடனடியாக ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்திச் சோதித்துள்ளார். அப்போது ஒரு பெட்டியில், ஒரு சக்கரம் இரண்டாக உடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பின்னர், அந்தப் பெட்டியில் இருந்த பயணிகள் மற்ற பெட்டிகளில் ஏற்றப்பட்டு, ரயில் மீண்டும் புறப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரயில்வே உயர் அதிகாரிகள், ”இதுபோன்று இது வரை நாங்கள் பார்த்தது இல்லை. ரயில் சக்கரத்தில் பிரச்னை வருவது என்பது இதுவரை நடக்காத ஒன்று. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். சக்கரம் அதிக முறை பயன்படுத்தப்பட்டதா அல்லது தயாரிப்பில் நடந்த குளறுபடியா என விசாரணை நடைபெறும்” என்றனர்.

  இதுபோன்று ஒரு சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க, இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களிலும் சக்கரத்தின் நிலைகுறித்து ஆய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரும் பிள்ளைகளும்

By ம. அஹமது நவ்ரோஸ் பேகம் | Published on : 28th May 2018 02:12 AM

அறிவியலின்படி உலகின் அனைத்து உயிரினங்களும் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று, தாவர இனங்கள், மற்றொன்று விலங்கினங்கள். அறிவியலில், மனிதன் விலங்கினமாகவே கருதப்படுகிறான். விலங்கினத்திலேயே அளப்பரிய ஆற்றல் உடைய மூளையைக் கொண்டிருப்பதாலும், மற்ற திறமைகளாலும், பரிணாம வளர்ச்சியை விளக்கும் பரிணாம மரத்தின் உச்சாணிக்கொம்பில் மனிதன் அமர்ந்திருப்பது போல் காட்டப்பட்டிருக்கும்.

உயிரினங்களே தோன்றியிராத காலத்தில், உயிரணுக்களாகத் தொடங்கி, ஒரு செல் உயிரி, பலசெல் உயிரிகளாக உருவெடுத்து, முதுகெலும்பு கொண்ட உயிரிகளாகப் பெருக்கம் அடைந்து, இறுதியில் மனிதர்களைப் போன்ற குரங்குகளில் இருந்து ஆதி மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்பதாகப் பரிணாம வளர்ச்சி பற்றிய வரலாறு விரிகிறது. இன்னும் ஆண்டுகள் செல்லச் செல்ல படிப்படியாக ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக உருவெடுக்கிறது என்பதே அதன் தத்துவமாகும். அதன்படி கடைசி உயிரினமான மனிதன் இன்னும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு புதிய உயிரினமாக (!) மாறுவான் என்பதை அறுதியிட்டுக் கூறுகிறது. இறை நம்பிக்கை உடையவர்களோ, வெவ்வேறு மதங்களைப் பின்பற்றினாலும், எல்லா உயிர்களும் இறைவனால் படைக்கப்பட்டவையே என்று உறுதியாக நம்புகிறார்கள். உண்மையான இறை நம்பிக்கையும், அதனால் ஏற்பட்ட இறையச்சமும் மக்களை தவறுகள் செய்வதில் இருந்து தடுக்கிறது. நல்லொழுக்கத்தைப் பேணும் இறை நம்பிக்கை அற்றவர்கள் கூட தவறு செய்வதற்குத் துணிய மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களின் நற்பண்புகளால், மனிதர்களும், விலங்குகளும் ஒன்றல்ல என்று தங்களை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்கிறார்கள் .

தலைமுறை தலைமுறையாகக் கட்டிக்காக்கப்பட்டு வந்த பழக்க வழக்கங்களும், கலாச்சாரங்களும், ஒழுக்க விழுமியங்களும் காற்றில் கற்பூரம் கரைவதைப் போல் காணாமல் போய் விட்டதற்கு தாய், தந்தை இருவரும் வேலைக்குச் செல்வது, பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழிக்காமல் இருப்பது, குழந்தைகளைப் பராமரிக்க வீட்டில் பெரியோர் இல்லாமல் இருப்பது, தடையின்றிக் கிடைக்கும் இணையம், கைப்பேசி வசதிகள் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். சிறுவர்கள், தொலைக்காட்சியில் சில காட்சிகளைப் பார்க்கும்போது தணிக்கை அதிகாரிகள் போன்று பெற்றோர் அங்கே வந்தால், காட்சிகள் மாற்றப் பட்டு விடும். அவர்கள் பார்க்கக் கூடாதவை என்று பெற்றோர், பெரியோர் எதையெல்லாம் அவர்களிடம் இருந்து மறைத்தார்களோ, அவை எல்லாம் தற்பொழுது மிக எளிதாக கணினியிலும், கைப்பேசியிலும் கிடைக்கிறது.
அவர்களின் வயதுக்கு மீறிய, இலைமறை காயாக இருக்க வேண்டியவை எல்லாம் அவர்களின் கண்களுக்கு அருகில் தங்கு தடையின்றித் தணிக்கை செய்யப்படாமலேயே கிடைக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிள்ளைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளர்வது எப்படி சாத்தியமாகும்?

ஒழுக்கமான பெற்றோர், கண்டிப்பு, நல்ல வீட்டுச்சூழல் என்று எல்லாம் இருந்தும் பிள்ளைகள் வழி தவறுவதற்கு கெட்ட நண்பர்களின் சகவாசம் முக்கியக் காரணமாகும். சுதந்திரமான கணினி, கைப்பேசி பயன்பாட்டுடன் குடிப் பழக்கமும் சேர்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம். மதுவின் தீமையைப் பற்றி நாம் கேள்விப்பட்ட ஒரு குறுங்கதை, எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் முன் மது, மாது, குழந்தை மூன்றும் காட்டப்படுகிறது. மது குடிக்க வேண்டும், அல்லது பெண்ணை மான பங்கப்படுத்த வேண்டும், அல்லது குழந்தையைக் கொல்ல வேண்டும், இந்த மூன்றில் ஒன்றை அவன் எப்படியாவது செய்ய வேண்டும் என்று கட்டளை இடப்படுகிறது
.
பெண்ணை மானபங்கப்படுத்துவதும், குழந்தையைக் கொலை செய்வதும் கொடூரமான குற்றங்களாக அவனுக்குத் தோன்றவே மதுவைக் குடிக்கிறான். குடி போதையில் குழந்தையைக் கொன்று விட்டு, பெண்ணையும் மான பங்கப்படுத்துகிறான் என்று, மதுவின் தீமையை விளக்குவதாகக் கதை முடிகிறது. மதுப் பழக்கத்தாலும், கூடா நட்பினாலும், பிறன் மனை விழைதலாலும், தாயோ, தந்தையோ பெற்ற குழந்தைகளைக் கொலை செய்கிறார்கள். இன்னும் கணவன், மனைவியை அல்லது மனைவி கணவனைக் கொலை செய்ததாகப் பத்திரிகைகளில் வரும் சில செய்திகளைப் படிக்கும்போது மிருகப் பண்புகள் மரபணுக்கள் வழியாக மனிதர்களிடம் படிமம் போல் படிந்து மக்களை, மாக்களாக்கி விட்டதோ என்றும், "தாயிற் சிறந்த கோயிலுமில்லை,' தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை', "தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது' என்பதெல்லாம் இத்தைகையோருக்கு எள்ளளவும் பொருந்தாது என்றும் எண்ணத் தோன்றுகிறது.

குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம் என்பதாக மனிதர்களின் வாழ்நாட்களை மூன்று பருவங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். குழந்தைப்பருவம் எதுவும் எழுதப்படாத, சுத்தமான கரும்பலகைக்குச் சமம். நாம் அவர்களை எப்படி வளர்க்கிறோமோ, எந்த சூழலில் வளர்கிறார்களோ அப்படியே கரும்பலகை நிரப்பப்படுகிறது. நாற்பது நாட்களுக்கு நாய் கூட பிள்ளை வளர்க்கும் என்று பெரியோர் அடிக்கடி கூறுவார்கள். பிள்ளைகள் வளர வளர பிரச்னைகள் வரும் சமயம் எல்லாம் அவர்களின் கூற்று, நினைவில் வரும். இந்தக் கடினமான கடமையை, பெற்றோர் நல்ல விதமாகப் பூர்த்தி செய்து விட்டால் இளமைப்பருவம் அழகாக மலரும். இப்பருவத்தில் அவர்கள் பெறும் அனுபவங்கள் அவர்களை நல்ல மனிதர்களாக மாற்றும்.
ஆபத்தான அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லாத காலத்தில் பெற்றோருக்கு இவ்வளவு சவால்கள் இருந்திருக்காது. கைக்கெட்டும் தூரத்தில் அவை நிறைந்திருக்கும் இந்தக் காலத்தில், பிள்ளைகளை, புதையலைக் காக்கும் பூதம் போல் காக்கும் பணி நிச்சயமாக சவால் நிறைந்ததுதான். அவற்றை சமாளித்து வெற்றி பெற்று விட்டோமானால் நாம் கனவு காணும் புதிய சமுதாயத்தில் நன்மக்களைப் பெற்ற பெற்றோர் என்று அனைவரும் கொண்டாடுவர்; நாமும் பெருமிதம் கொள்ளலாம். வலிகள் இல்லாத வெற்றிகள் கிடையாது. "மாக்கள் அல்ல நாம், மக்கள்' என்பதை என்றும் நினைவில் கொண்டு நம் குழந்தைகளை நன்மக்களாக வளர்ப்பதில் மிகுந்த அக்கறையும், முயற்சியும் எடுப்போம்.












கவலை வேண்டாம்… ரயில் டிக்கெட் முன்பதிவு ‘வெயிட்டிங் லிஸ்டா?’- ஐஆர்சிடிசி புதிய வசதி அறிமுகம்

Published : 29 May 2018 14:59 IST

பிடிஐ புதுடெல்லி

 


கோப்புப்படம்

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்காக ரயில்வேயின் ஐஆர்சிடிசி புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய வசதியின்படி, காத்திருப்போர் பட்டியலில் ஒருவர் இருந்தால்,அவருக்கு டிக்கெட் உறுதி செய்யப்படுமா அல்லது ஆர்ஏசி நிலைக்கு வருமா என்பதை ரயில்வே அறிமுகம் செய்துள்ள கணித்துச் செல்லும்சேவை, அவர்களுக்குத் தகவல் அளிக்கும்.
 
இதன்மூலம் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்குப் பயணத்துக்கான டிக்கெட் உறுதியாகுமா என்பது முன்கூட்டியே தெரிந்துவிடும்.இதன் மூலம் பயணிகளின் கடைசி நேர பரபரப்பு தவிர்க்கப்படும்.

ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த கணித்துக்கூறும் சேவையை, மத்திய ரயில்வே தகவல் முறை உருவாக்கியுள்ளது.

இது குறித்து ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், எப்போது இருக்கை, அல்லது படுக்கை வசதி உறுதியாகும் என எதிர்பார்த்திருக்க இனி தேவையில்லை. ரயில்வே துறை டிக்கெட் முன்பதிவு குறித்த கணித்துச் சொல்லும் சேவையை அறிமுகப்படுத்துகிறது.

இதன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர் காத்திருப்போர் பட்டியலி்ல இருந்தால், அவருக்குப் பயணத்துக்கான டிக்கெட் உறுதி செய்யப்படுமா அல்லது ஆர்ஏசியில் வருமா என்பதை அந்த கணித்துக்கூறும் சேவை கூறிவிடும். இதன் மூலம் பயணிகள் முன்கூட்டியே ரயில் டிக்கெட் நிலவரத்தை தெரிந்து கொண்டு மாற்று ஏற்பாடுகள் செய்யலாம்'' எனத் தெரிவித்தார்.

இந்த கணித்துக்கூறும் சேவையை அறிமுகம் செய்ய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்தான் காரணமாக இருந்தவர். கடந்த 13 ஆண்டு புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கணித்துக்கூறும் சேவையை உருவாக்கக் கோரி ரயில்வே தகவல் மையத்துக்கு அறிவுறுத்தி, அதை ஒரு ஆண்டுக்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக நாள்தோறும் 13 லட்சம் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவது கவனிக்கத்தக்கது.
பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி செல்கிறார்

Published : 30 May 2018 07:33 IST

சென்னை




தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு தல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை தூத்துக்குடி செல்ல உள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி நடந்த முற்றுகைப் போராட் டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து போலீஸார் நடத் திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை தூத்துக்குடி செல்ல இருக்கிறார். சென்னையில் இருந்து காலை 8 மணிக்கு தூத்துக்குடி புறப்படும் விமானத்தில் அவர் செல்கிறார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
13 உயிர்கள் பலி; ஸ்டெர்லைட்டுக்கு மூடுவிழா: கற்ற பாடம் என்ன? குற்றம் யார் பக்கம்?

Published : 30 May 2018 07:34 IST


எம்.சண்முகம்

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் நடந்த பேரணியின்போது வன்முறை ஏற்பட்டது. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். - (கோப்புப் படம்)

விலை மதிக்க முடியாத 13 உயிர்கள் பலியான பின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடுவிழா கண்டு வருகிறது. இந்த ஆலையை மூடும் அவசியம் குறித்து பேசும் நிலையில், இந்த ஆலை தேவையா என்ற கருத்தையும் நாம் விவாதிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

உலகில் தங்கம், கச்சா எண்ணெய் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பொருளாக காப்பர் அமைந்துள்ளது. வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு மனிதருக்கும் சராசரியாக 140 முதல் 300 கிராம் காப்பர் தேவைப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் 1.5 கிலோ காப்பர் இடம்பெற்றுள்ளது. வீடுகளில் சராசரியாக 100 கிராம் காப்பர் பயன்பாடு உள்ளது. காற்றாலைகளில் 5 டன் காப்பர் பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 1.2 கோடி டன் காப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. காப்பர் தயாரிப்பு, தோண்டி எடுத்தல் மற்றும் வேதியியல், இயற்பியல் ஆய்வக முறைப்படி நடைபெறுகிறது. இதில் இரண்டாவது முறையையே ஸ்டெர்லைட் மேற்கொள்கிறது. ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமம் 8 சதவீத காப்பர் தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறது. நம் நாட்டின் தேவையில் பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை உள்ளது.

‘கழிவுகளை வெளியேற்றுவதில்லை’

இந்நிலையில், ‘நாங்கள் ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ என்ற நிலையை கடைப்பிடிக்கிறோம். எங்கள் ஆலையில் இருந்து எந்தக் கழிவும் வெளியேறுவதில்லை. தன்னிச்சையான நிபுணர் குழு மூலம் சோதனை நடத்தினால், அதற்கு உடன்பட தயார்’ என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘வெளிநாடுகளில் இருந்து காப்பர் இறக்குமதி செய்யும் நாடாகவே இந்தியா இருக்க வேண்டும் என்று அந்நிய சக்திகள் விரும்புகின்றன. அவர்கள் உள்ளூர் அமைப்புகள் உதவியுடன் போராட்டத்தை தூண்டி விடுகின்றனர். உண்மையை பொய் பிரச்சாரம் வென்றுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே ஸ்டெர்லைட் நிறுவனம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியதா, போராட்டக்காரர்கள் உள்நோக்கத்துடன் செயல்பட்டு மூட வைத்துள்ளார்களா போன்ற கேள்விகள் சாதாரண மக்கள் மத்தியில் எழுகிறது.

முன்பெல்லாம் சாதாரண மக்கள் தங்கள் பகுதிக்கு சாலை வேண்டும், தொழிற்சாலை வேண்டும் என்று போராடிய நிலை மாறி, தற்போது நான்கு வழிச் சாலை வேண்டாம், தொழிற்சாலை வேண்டாம் என்று போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்று விரிவாக ஆராய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நலனைத் துச்சமாக புறந்தள்ளிவிட்டு திட்டங்களை செயல்படுத்தும் போக்கே இந்த மாற்றத்துக்கு வித்திட்டுள்ளது. ‘இந்த ஆலை தேவைதான், சுற்றுச்சூழலுக்கு கேடு வராமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று உறுதியளிக்க வேண்டியவர்கள் அனுமதியளிக்கும் ஆட்சியாளர்கள், கண்காணிக்கும் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பம் அறிந்த நிபுணர்கள். இவர்கள் பல காரணங்களால் தொழில்நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து விடுகின்றனர் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பரவியுள்ளது.

இந்த நம்பகத்தன்மை குறைவுதான் போராட்டக்காரர்களை உருவாக்குகின்றன. அவர்களுக்குள் சமூக விரோதிகள் ஊடுருவவும் காரணமாகி விடுகிறது. வன்முறைகளைத் தூண்டும் சித்தாந்தவாதிகள் இந்த நிலைமையை பயன்படுத்தி சுயலாபம் அடைகின்றனர். அவர்களது பேச்சை சாதாரண மக்கள் நம்பி களத்தில் பலியாகும் நிலை ஏற்படுகிறது. ஆட்சியாளர்கள், மாசுக்கட்டுப்பாட்டு அமைப்பு, நீதிமன்றம், பத்திரிகைகள் அனைத்தும் மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக மாறுவதே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.
ரயில்வே நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

Added : மே 30, 2018 01:01

சென்னை: உரிய சேவை வழங்காத, ரயில் டிக்கெட் பரிசோதகர் மற்றும் தெற்கு ரயில்வே நிர்வாகம், பயணிக்கு, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை, அமைந்தகரை, அய்யாவு காலனியை சேர்ந்த, சேரன், 56. இவர், சென்னை வடக்கு, நுகர்வோர் நீதிமன்றத்தில், அளித்த மனு:நானும், என் மனைவியும், சென்னையில் இருந்து, கர்நாடகா மாநிலம், மங்களூருக்கு, வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், 2011ம் ஆண்டு, முதல் வகுப்பு, 'கூபே' பெட்டியில் பயணம் செய்தோம்.இந்த பெட்டியில், டிக்கெட் இல்லாத பயணி ஒருவர் வந்து அமர்ந்ததால், பிரச்னை ஏற்பட்டது. ரயில் டிக்கெட் பரிசோதகரும், கண்காணிப்பாளரும் கண்டுகொள்ளவில்லை. மன உளைச்சலுக்கு ஆளானோம். 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கு விசாரணையில், 'அதிகாரிகளை அவதுாறாக சித்தரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்தது. இந்த வழக்கில், நீதிபதி ஜெயபாலன், நீதித்துறை உறுப்பினர் உயிரொலி கண்ணன் பிறப்பித்த உத்தரவு:பயணியர் அதிகம் கட்டணம் செலுத்தி, உயர் வகுப்புகளில் பயணம் செய்வது, மற்றவர்களால் தொந்தரவின்றி அமைதியாக பயணம் செய்வதற்கு தான்.ஆனால், பெட்டியில் அனுமதி இல்லாதவர் வந்து செல்வதால், சம்பந்தப்பட்ட பயணியர், சங்கடத்திற்கு ஆளாக நேரிடுகிறது. கவனக்குறைவாக செயல்பட்ட, ரயில் டிக்கெட் பரிசோதகர், கண்காணிப்பாளர் மற்றும்தெற்கு ரயில்வே நிர்வாகம், பயணிக்கு, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், 5,000 ரூபாய் வழக்கு செலவும் வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.

NEWS TODAY 27.07.2026