Tuesday, August 7, 2018

நிஜத்திடம் டிக்கெட் கேட்ட போலி ரயிலில் சிக்கினார் சென்னை வாலிபர்

Added : ஆக 07, 2018 01:13

வடமதுரை; முத்துநகர் ரயிலில், பரிசோதகரிடமே டிக்கெட் கேட்ட, 'போலி' பரிசோதகர் சிக்கினார். துாத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில், திண்டுக்கல் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, ஒரு பெட்டியில் ரயில் டிக்கெட் பரிசோதகர் தோற்றத்தில் ஏறிய ஒரு வாலிபர், அங்கிருந்த, டி.டி.இ.,யிடம் டிக்கெட்டை காட்டும்படி கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், 'நானும் ஒரு டிக்கெட் பரிசோதகர்' எனக்கூறி, அந்த வாலிபரிடம் அடையாள அட்டையை காட்டும்படி கேட்டார். வாலிபரும் ஒரு அடையாள அட்டையை காட்டியுள்ளார். மேலும் துறை சார்ந்த சில கேள்விகளை கேட்கவே வாலிபர் உளறிக்கொட்டினார். அந்த வாலிபரை பிடித்து, ரயிலில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில், போலி, டி.டி.இ.,யாக நடித்தவர் சென்னை சூளைமேட்டை சேர்ந்த ரமேஷ், 31, என்பதும், டிராவல்ஸ் நிறுவனத்தில் டிக்கெட் புக்கிங் பணி செய்வதும் தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 விமானிகள் நீக்கம் : டி.ஜி.சி.ஏ., அதிரடி

Added : ஆக 07, 2018 00:36


மும்பை: சவுதி அரேபியாவின், ரியாத் நகர விமான நிலையத்தில், 'டாக்சிவே' எனப்படும் இணைப்பு பாதையில் இருந்து விமானத்தை ஓட்ட முயன்ற, 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்தின் இரண்டு பைலட்டுகளின் உரிமத்தை, டி.ஜி.சி.ஏ., 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. கடந்த வாரம், மேற்காசிய நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம், 148 பயணியருடன் புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஓடு பாதைகளுக்கு இடையே உள்ள, டாக்சிவே எனப்படும் இணைப்பு பாதையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த விமானத்தை, அங்கிருந்தபடியே மேலே செலுத்த, விமானிகள் முயன்றதால் பரபரப்பு நிலவியது. ஓடுபாதையில் நுழைந்த அந்த விமானம், நிலை தடுமாறி, பயங்கர சத்தத்துடன் அப்படியே நின்றது. இதையடுத்து, அந்த விமானத்தில் இருந்த பயணியர், உடனடியாக பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம், பயணியர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த விமானத்தை இயக்கிய இரு விமானிகளின் உரிமங்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக, டி.ஜி.சி.ஏ., எனப்படும், விமான போக்குவரத்து பொது இயக்குனரகம், நேற்று அறிவித்துள்ளது.
சித்தா படிப்பு, 'அட்மிஷன்' அடுத்த வாரம் விண்ணப்பம்

Added : ஆக 06, 2018 23:33

சென்னை: 'சித்தா மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், அடுத்த வாரம் முதல், அரசு சித்தா மருத்துவ கல்லுாரிகளில் வினியோகிக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில், ஆறு அரசு சித்தா மருத்துவ கல்லுாரிகளில், 390 இடங்கள் உள்ளன. அதேபோல, தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,350 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான கவுன்சிலிங், 'நீட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடைபெறுவதாக இருந்தது. பின், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.கடந்த, 2017ல் மாணவர் சேர்க்கைக்கு ஆக., 2ல், விண்ணப்பம் வினியோகம் துவங்கியது. நடப்பாண்டில், இதுவரை, விண்ணப்பம் வினியோகிக்கப்படவில்லை. சித்தா மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், பிளஸ் 2 அடிப்படையில் நடைபெறுவதால், 'அலோபதி' மருத்துவ படிப்பில், இடம் கிடைக்காத மாணவர்கள், சித்தா படிப்பிற்கு விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பம் வினியோகம், எப்போது துவங்கும் என, மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறுகையில், 'சித்தா மருத்துவ படிப்புகளுக்கான, தகவல் குறிப்பேடு மற்றும் விண்ணப்பம் வினியோகம் அச்சிடும் பணிகள் முடிந்துள்ளன. அடுத்த வாரம் துவக்கத்தில், சித்தா மருத்துவ கல்லுாரிகளில், விண்ணப்பம் வினியோகம் துவங்கும்' என்றனர்.***

மாநில செய்திகள்

கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம்: ‘முன்னேற்றம் ஏற்படுமா என்பது 24 மணிநேரத்துக்கு பிறகே தெரியும்’





சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை நேற்று திடீரென்று கவலைக்கிடமானது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா என்பது 24 மணி நேரத்துக்கு பிறகே தெரியும் என்று கூறப்பட்டு உள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 07, 2018 06:00 AM
சென்னை,

வயது முதிர்வு காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்த தி.மு.க. தலைவர் கருணா நிதிக்கு, கடந்த மாதம் (ஜூலை) 27-ந் தேதி நள்ளிரவு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.

இதனால் இரவோடு இரவாக அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

ஏற்கனவே துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதியை நேரில் பார்த்த புகைப்படங்கள் வெளியான நிலையில், நேற்று முன்தினம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வந்து நேரில் பார்த்த படம் மட்டும் வெளியாகவில்லை.

இதனால், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இருக்குமோ? என்று தொண்டர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இதற்கிடையே, கடந்த 2 நாட்களாக கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.

ஏற்கனவே, அவரது கல்லீரலின் செயல்பாடு குறைந்த நிலையில், மஞ்சள்காமாலை நோயின் அறிகுறியும் தென்பட்டது. ரத்த தட்டணுக்களின் (பிளேட்லெட்ஸ்) எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வந்துள்ளது. இதனால், அவரது உடலில் செலுத்தப்படும் மருந்துகளும் மெதுவாகவே வேலை செய்தது. நாடித்துடிப்பும் படிப்படியாக குறைந்து வந்துள்ளது.

இதனால், கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை உரிய பலன் அளிக்காததால் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது.

இந்த நிலையில், நேற்று மாலை 6.30 மணி அளவில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி ஆஸ்பத்திரியின் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

அவரது வயது மூப்பின் மூலம் வரும் பிரச்சினைகளை கணக்கிடும் போது, முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை பராமரிப்பதில் சவாலான நிலையே தொடர்கிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவ சிகிச்சையை அடுத்த 24 மணி நேரத்தில், அவரது உடல் எவ்வாறு ஏற்கிறது என்பதை வைத்துத்தான் நோயில் இருந்து அவர் மீள்வதை தீர்மானிக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக காவேரி ஆஸ்பத்திரியில் இருந்து மருத்துவ அறிக்கை வெளியான நிலையில், நேற்று இரவு 7 மணி முதல் தி.மு.க. தொண்டர்களின் வருகை அதிகரித்தது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள். அதேபோல், கூட்டணி கட்சி தலைவர்களும் அங்கு வந்தனர்.

தே.மு.தி.க. துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். நேரம் செல்லச் செல்ல நிர்வாகிகளின் வருகையும், தொண்டர்களின் வருகையும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. பல தொண்டர்கள் கதறி அழுதபடி நின்றனர்.

கூட்டம் அதிகமானதை தொடர்ந்து, காவேரி ஆஸ்பத்திரி முன்புறம் உள்ள இருவழிச்சாலை ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அதிக அளவில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து பதற்றமான நிலையே அங்கு இருந்தது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, கவிஞர் கனிமொழி எம்.பி., மு.க.தமிழரசு, கருணாநிதியின் துணைவி யார் ராஜாத்தியம்மாள், கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் உள்ளிட்டோர் நேற்று காலையில் இருந்தே ஆஸ்பத்திரியில் இருந்தனர்.

கருணாநிதியை பார்ப்பதற்காக மதியம் 1.45 மணி அளவில் அவரது மனைவி தயாளு அம்மாள் ஆஸ்பத்திரிக்கு வந்தார். வழக்கமாக கருணாநிதி பயன்படுத்தும் காரிலேயே அவர் அழைத்து வரப்பட்டார். ஆஸ்பத்திரியின் பின்புற வாயில் வழியாக சக்கர நாற்காலியில் அமரவைத்தபடி தயாளு அம்மாள் உள்ளே அழைத்து செல்லப்பட்டார். சுமார் 20 நிமிடங்கள் அங்கு இருந்த அவர், பின்னர் அதே காரில் கோபாலபுரம் இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்தார். சற்று நேரத்தில் வெளியே வந்த அவர், “தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைய அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்” என்று கூறிச் சென்றார்.

ஆனால், முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, “கருணாநிதி நலமாக இருக்கிறார்” என்று கூறினார்.

மத்திய மந்திரி நிதின் கட்காரி நேற்று இரவு ஆஸ்பத்திரிக்கு வந்து, கருணாநிதியின் உடல்நிலை பற்றி மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார். அவருடன் தமிழக பாரதீய ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும் வந்திருந்தார்.








 





Monday, August 6, 2018

Posted Date : 23:30 (04/08/2018)Last updated : 23:30 (04/08/2018)

கடனை திருப்பி செலுத்தாததால் கே.சி.பழனிச்சாமி சொத்துகளை ஜப்தி செய்ய எஸ்.பி.ஐ வங்கி முடிவு!

துரை.வேம்பையன்

கரூர் மாவட்ட தி.மு.க முக்கியப் புள்ளியான கே.சி.பி என்கிற கே.சி.பழனிச்சாமி ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால்,அவரது சொத்துகளை ஜப்தி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது எஸ்.பி.ஐ வங்கி.



கரூர் மாவட்ட தி.மு.கவில் முக்கியப் புள்ளியாக இருப்பவர் கே.சி.பி. கரூர் தொகுதி எம்.பியாகவும், அரவக்குறிசி எம்.எல்.ஏ வாகவும் இவர் இருந்திருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதி தேர்தலில் இப்போதைய அமமுக கட்சி எம்.எல்.ஏவான செந்தில்பாலாஜியிடம் தோல்வியை தழுவினார். சாதாரண நிலையில் இருந்த இவர், காவிரியில் மணல் அள்ளியும் அதன்மூலம் பொருளாதார நிலையில் உயர்ந்தார். சிமெண்ட் ஆலைகளுக்கு சாக்கு தயாரிக்கும் தொழிற்சாலைகள், மில்கள் என்று இவரது தொழில்கள் பெருகின. செந்தில்பாலாஜியே இவரை எதிர்த்து போராட்டம் நடத்திதான் ஜெயலலிதா கவனத்திற்கு போய், அரசியலில் உயரம் பெற்றார். அப்படிப்பட்ட கே.சி.பிக்கு ஒரு வருடமாக தொழில்களில் பலத்த அடி. நஷ்டம். கோயில் கும்பாபிஷேகத்திற்கு யார் கேட்டாலும் லட்சம் லட்சமாக அள்ளிக் கொடுத்த அவர், கடந்த ஒருவருடமாக பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தார். இந்நிலையில்தான்,அவர் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் சில வங்கிகளில் கடனாக இவர் பெற்ற எழுபத்து மூன்று கோடியே நாற்பத்து ஒரு லட்சத்து பதிமூன்றாயிரத்து ஐநூற்று எழுபத்து ஒரு(ரூ 173,41,13,571) ரூபாயை திருப்பி செலுத்தவில்லை என்று அவரது பத்துக்கும் மேற்பட்ட அசையா சொத்துகளை ஜப்தி செய்வதாக தினசரிகளில் பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரபூர்வமான அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது கே.சி.பி குடும்ப வட்டாரம் மற்றும் கரூர் மாவட்ட தி.மு.கவினர் மத்தியில் பலத்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுச்சேரியில் இயங்கி வரும் கரூர் கே.சி.பி பேக்கேஜிங்ஸ் லிட் கம்பெனிக்காக தனது பெயர், தனது மனைவி தம்பி, மற்றும் தம்பி மனைவி ஷ்யூரிட்டியில் இந்த தொகையை வாங்கியுள்ளதாக தெரிகிறது. மேற்படி கடன் தொகையை 60 நாள்களுக்குள் கட்டும்படி கடந்த 17.05.2018 அன்று வங்கி சார்பில் இவர்களுக்கு டிமாண்ட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், 60 நாள்கள் கடந்தும் கே.சி.பி தரப்பில் கடனை திருப்பிச் செலுத்த எந்த முயற்சியும் செய்யாததால் கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஐடிபிஐ வங்கிக் லிட் இணைந்து பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் கூட்டாக ஜப்தி கையகப்படுத்துதல் அறிவிப்பை வெளியிட்டு கே.சி.பி தரப்பை அதிர வைத்திருக்கிறார்கள்.

இதுபற்றி, இதன் உள்விவரங்களை அறிந்தவர்களிடம் பேசினோம்."கே.சி.பி மணல் அள்ளிதான் முன்னேறினார். அதை வைத்து தொழில்களை பெருக்கினார். ஆனால்,அதை சரிவர நிர்வகிக்க தவறிட்டார். கட்சிக்கு ஏகப்பட்ட பணத்தை செலவு செய்தார். வரிசையாக கடன்களை வாங்கி தொழில்களை விருத்தி செய்தார். அகலக்கால் வைத்துவிட்டார்ன்னுதான் சொல்லனும். ஒரு வருஷத்துக்கு முன்னாடியே இவரது தொழில்கள் தள்ளாட்டத்தில் இருக்கிறதுங்கிறதை புரிஞ்சுகிட்டு அவரது மகன், இவரை தள்ளி வைத்துவிட்டு நிர்வாகத்தை கையில் எடுத்தார். ஆனால், இழப்புகளை சரிசெய்ய முடியவில்லை. அதனால்,அவரது சொத்துகளை ஜப்தி செய்வதற்கான அறிவிப்பை கடன் கொடுத்த வங்கிகள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு. இதில் இருந்து மீண்டு வருவது அவருக்கு சிரமம்தான்" என்றார்கள்.
வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கியதில் பல கோடி ஊழல் -லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி!

ஜி.சதாசிவம்

எஸ்.தேவராஜன்


சிதம்பரம் நகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள், பணி செய்த ஒப்பந்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.



சிதம்பரம் நகராட்சியில் ஆயிரக்கணக்கானமக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியில் கடந்த 2012 -ம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகத் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்குப் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டது. ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் பொது மக்கள் இது குறித்து பல்வேறு புகார் மனுக்களை கடலூர்

லஞ்ச ஒழிப்பு துறைக்கும் அனுப்பியுள்ளனர். இதனையடுத்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த சில மாதங்களாக இது குறித்து ரகசிய விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 5 ஆண்டுகளில் வீடுகளுக்குக் குடிநீர் வடிகால் வாரியத்தில் ரூபாய் 7 கோடியே 18 லட்சம் மதிப்பில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 5 ஆண்டுகளில் குடிநீர் வடிகால் வாரியத்தில் பொறியாளர்களாக பணியாற்றியும், தற்பொழுதும் பணியாற்றி வரும் பொறியாளர்கள் விஜயகுமார், பாண்டியன், அசோகன், விஜயலெட்சுமி, காசிநாதன் ஆகிய 5 பேர் மீது கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசரர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்தப் பணிகளை செய்த சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த விவிவி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



இவர்கள் மீது தரமில்லாத பொருட்களைப் பயன்படுத்தியது, போலியான ஆவணம் மற்றும் ரசீதுகளை வைத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்பட்டுள்ள சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என் இருபதாண்டு கால நண்பர்: கருணாநிதியை வாழ்த்தும் எம்.ஜி. ஆர்

vikatan 


தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் எனக்கும் இருபதாண்டுகளாகத் தொடர்புண்டு. அப்போது நான் கோவையிலே இருந்தேன். ஊருக்குள் பிளேக் என்ற நோய் பரவிக்கொண்டிருந்த காரணத்தால் குடும்பத்தை ஊருக்கு அனுப்பிவிட்டுக் கலைஞர் என் வீட்டில் வந்து தங்கினார். என் வீடு என்றால் அப்போது 12 ரூபாய் வாடகை வீடுதான். இரண்டு பேரும் ஒன்றாக இருந்தோம். ஆனால் அவர் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராகவும், நான் காங்கிரஸ்காரனாகவும் இருந்தேன்.

அப்போதெல்லாம் அவரை என் பக்கம் இழுக்க முயற்சித்தேன். ஆனால் நிலைமை எப்படி ஆயிற்று? நான் அவர் பக்கம் தான் ஈர்க்கப்பட்டேன். இன்று அவர் கழகத் தலைவராகவும், நான் கழகத்தின் பொருளாளராகவும் இருக்கும் நிலைமைக்கு அந்த ஈர்ப்பு நடைபெற்றுள்ளது.

கலைஞர் அவர்கள் இன்று முதல்வராக இருக்கிறார் என்பதால்தான் அவருக்குப் பெருமையும் புகழும் என்று யாராவது நினைத்தால் அது மாபெரும் தவறாகும். இந்தப் பதவிகளெல்லாம் அவரைத் தேடி வந்து அமைவதற்கு முன்பே பேருக்கும் புகழுக்கும் உரியவராக இருப்பவர் கலைஞர்.

கோவையில் இருந்தபோது பல்லாண்டுகளுக்கு முன்பு ராஜகுமாரி, அபிமன்யு என்ற படங்களுக்கெல்லாம் கலைஞர் உரையாடல்களை எழுதினார். அந்தப் படங்களில் அவருடைய பெயர் வெளியிடப்படவில்லை. இப்படி பிரபலப்படுத்தப்படவில்லையே என்பதற்காக அவர் தம்முடைய உழைப்பை திறமையை காட்டாமல் இருந்ததில்லை. சலியாது உழைத்தார். தன் பெயர் வரவில்லை என்றாலும் தன் கருத்து வந்திருக்கிறது என்கிற திருப்தியில் உழைத்தார்.

அதுவும் கொள்கைப் பிடிப்புள்ள தம் கருத்துக்களை படத்தில் அவர் நுழைக்கத் தவறியதே இல்லை. தனக்கென ஒரு கொள்கை தனக்கென ஒரு தலைவன் என்று வகுத்துக்கொண்டு பற்றோடும், பிடிப்போடும் அயராது உழைத்து வந்தவர் கலைஞர்.



கொள்கைப் பிடிப்புக் காரணமாகச் சமயம் வரும்போது அண்ணாவுடனும் சரி, என்னுடனும் சரி, கலைஞர் வாதிடுவதற்கு ஒருபோதுமே தயங்கியதில்லை. அதேபோல கழகத்துக்கு ஒரு கேடு வருகிறது என்றால் தன் உயிரைக்கூட மதிக்காமல் முனைந்து பாடுபடுவதில் அவருக்கு இணையான செயலாற்றல் யாருக்கும் இருந்திருக்க முடியாது.

ஒருதடவை பாண்டிச்சேரியில் அவர் சுயமரியாதை இயக்கத்தில் பிரச்சாரத்திற்காகச் சென்றிருந்தபோது அவரை தெருவில் தள்ளி அடித்து சாக்கடையில் வீசிவிட்டுப் போனார்கள். ரத்தம் சொட்டச் சொட்ட எழுந்து போய் ஒரு வீட்டுக்குள் நுழைந்தபோது அந்த வீட்டுக்குள் சீட்டாடிக் கொண்டிருந்தவர்கள் யார் தெரியுமா?

அவரை அடிப்பதற்கு யார் ஆட்களை அனுப்பினார்களோ அவர்களே உள்ளே இருந்தார்கள். அங்கிருந்து தப்புவதற்கு அவர் எப்பாடு பட்டிருப்பார் என்பதை விளக்க வேண்டியதில்லை.



இப்படியெல்லாம் அடிபட்டுத் தொல்லைகள் மிகத் தாங்கியவர் கலைஞர். கல்லக்குடி போராட்டத்தில் உயிரை வெல்லமாக நினைக்காமல் தண்டவாளத்தில் முதலில் படுத்தவர் கலைஞர்.

இந்தத் தியாகம் மிகுந்த அனுபவங்களை எல்லாம் பெறும்போது அவர் இப்படி ஒருநாள் தமிழகத்தின் முதல்வராக ஆகப் போகிறோம் என்று அப்படியெல்லாம் தொல்லைப்பட்டவரல்ல.

தமிழ் காக்க வேண்டும்; தமிழ்மானம் காக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் பல்லாண்டு காலம் ஓயாது உழைத்துச் செய்த தியாகத்தின் பலனாக இன்று அவரைத்தேடிப் பதவி கிடைத்திருக்கிறது.

சிலருக்குப் பதவி கிடைத்தால் நாடு குட்டிச்சுவராகிவிடுகிறது. ஆனால் நமது கலைஞருக்கு பதவி கிடைத்ததால் நாடு வாழ்கிறது. ஏழை எளியவரின் நம்பிக்கை எல்லாம் அவரது விழிகளை நோக்கி உயர்கின்றன.



கலைஞர் பெற்றுள்ள நல்ல அனுபவம், திறமை, செயலாற்றல், அறிவுணர்வுகள் எல்லாம் இந்தத் தமிழ் மண் நலம் பெறும்படி பரிமளிக்கின்றன.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழகத்தின் முதலமைச்சர் ஆகிய இந்த இரண்டு பெரிய பொறுப்புகளையும் வகித்து வரும் கலைஞர் அவர்கள் எத்துறையில் திரும்பினாலும் அத்துறை சிறப்படைகிறது. எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்குகிறார் அவர்.

கட்சியின் ஒவ்வொரு தொண்டனையும் தலைவனையும் நன்றாகப் புரிந்து வைத்துக்கொண்டு அவர் கழகத்தைச் சீராக நடத்திச் செல்கிறார்.



தமிழகத்தின் முதல்வர் என்னும் முறையில் நல்ல நிர்வாகத் திறமையோடு கட்சிப் பாகுபாடு இல்லாமல் அரசாங்கத்தை நடத்திச் செல்கிறார் கலைஞர். எல்லாத் தரப்பினருக்கும் தேவையான நன்மைகளை உரிய நேரத்தில் செய்து வரும் ஒரே முதல்வர் கலைஞர் அவர்கள்தான்.

எந்தக்கட்சியிலும் காணக் கிடைக்காத அருங்குணங்களைப் பெற்ற முதல்வர் கலைஞர் அவர்கள் அவரது அறிவாற்றலுக்கும் நல்ல பண்பாட்டுக்கும் அவருக்கு இப்போதுள்ள முதல்வர் பதவி மட்டும் போதாது. இன்னும் உயரிய பதவிகள் எல்லாம் அவரைத் தேடி வரும் காலம் விரைவில் வந்தே தீரும்.

- எம்.ஜி.ஆர் 

(1971 ஆம் ஆண்டு பரங்கிமலைத்தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியது)

NEWS TODAY 27.06.2026