Monday, August 6, 2018

என் இருபதாண்டு கால நண்பர்: கருணாநிதியை வாழ்த்தும் எம்.ஜி. ஆர்

vikatan 


தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் எனக்கும் இருபதாண்டுகளாகத் தொடர்புண்டு. அப்போது நான் கோவையிலே இருந்தேன். ஊருக்குள் பிளேக் என்ற நோய் பரவிக்கொண்டிருந்த காரணத்தால் குடும்பத்தை ஊருக்கு அனுப்பிவிட்டுக் கலைஞர் என் வீட்டில் வந்து தங்கினார். என் வீடு என்றால் அப்போது 12 ரூபாய் வாடகை வீடுதான். இரண்டு பேரும் ஒன்றாக இருந்தோம். ஆனால் அவர் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராகவும், நான் காங்கிரஸ்காரனாகவும் இருந்தேன்.

அப்போதெல்லாம் அவரை என் பக்கம் இழுக்க முயற்சித்தேன். ஆனால் நிலைமை எப்படி ஆயிற்று? நான் அவர் பக்கம் தான் ஈர்க்கப்பட்டேன். இன்று அவர் கழகத் தலைவராகவும், நான் கழகத்தின் பொருளாளராகவும் இருக்கும் நிலைமைக்கு அந்த ஈர்ப்பு நடைபெற்றுள்ளது.

கலைஞர் அவர்கள் இன்று முதல்வராக இருக்கிறார் என்பதால்தான் அவருக்குப் பெருமையும் புகழும் என்று யாராவது நினைத்தால் அது மாபெரும் தவறாகும். இந்தப் பதவிகளெல்லாம் அவரைத் தேடி வந்து அமைவதற்கு முன்பே பேருக்கும் புகழுக்கும் உரியவராக இருப்பவர் கலைஞர்.

கோவையில் இருந்தபோது பல்லாண்டுகளுக்கு முன்பு ராஜகுமாரி, அபிமன்யு என்ற படங்களுக்கெல்லாம் கலைஞர் உரையாடல்களை எழுதினார். அந்தப் படங்களில் அவருடைய பெயர் வெளியிடப்படவில்லை. இப்படி பிரபலப்படுத்தப்படவில்லையே என்பதற்காக அவர் தம்முடைய உழைப்பை திறமையை காட்டாமல் இருந்ததில்லை. சலியாது உழைத்தார். தன் பெயர் வரவில்லை என்றாலும் தன் கருத்து வந்திருக்கிறது என்கிற திருப்தியில் உழைத்தார்.

அதுவும் கொள்கைப் பிடிப்புள்ள தம் கருத்துக்களை படத்தில் அவர் நுழைக்கத் தவறியதே இல்லை. தனக்கென ஒரு கொள்கை தனக்கென ஒரு தலைவன் என்று வகுத்துக்கொண்டு பற்றோடும், பிடிப்போடும் அயராது உழைத்து வந்தவர் கலைஞர்.



கொள்கைப் பிடிப்புக் காரணமாகச் சமயம் வரும்போது அண்ணாவுடனும் சரி, என்னுடனும் சரி, கலைஞர் வாதிடுவதற்கு ஒருபோதுமே தயங்கியதில்லை. அதேபோல கழகத்துக்கு ஒரு கேடு வருகிறது என்றால் தன் உயிரைக்கூட மதிக்காமல் முனைந்து பாடுபடுவதில் அவருக்கு இணையான செயலாற்றல் யாருக்கும் இருந்திருக்க முடியாது.

ஒருதடவை பாண்டிச்சேரியில் அவர் சுயமரியாதை இயக்கத்தில் பிரச்சாரத்திற்காகச் சென்றிருந்தபோது அவரை தெருவில் தள்ளி அடித்து சாக்கடையில் வீசிவிட்டுப் போனார்கள். ரத்தம் சொட்டச் சொட்ட எழுந்து போய் ஒரு வீட்டுக்குள் நுழைந்தபோது அந்த வீட்டுக்குள் சீட்டாடிக் கொண்டிருந்தவர்கள் யார் தெரியுமா?

அவரை அடிப்பதற்கு யார் ஆட்களை அனுப்பினார்களோ அவர்களே உள்ளே இருந்தார்கள். அங்கிருந்து தப்புவதற்கு அவர் எப்பாடு பட்டிருப்பார் என்பதை விளக்க வேண்டியதில்லை.



இப்படியெல்லாம் அடிபட்டுத் தொல்லைகள் மிகத் தாங்கியவர் கலைஞர். கல்லக்குடி போராட்டத்தில் உயிரை வெல்லமாக நினைக்காமல் தண்டவாளத்தில் முதலில் படுத்தவர் கலைஞர்.

இந்தத் தியாகம் மிகுந்த அனுபவங்களை எல்லாம் பெறும்போது அவர் இப்படி ஒருநாள் தமிழகத்தின் முதல்வராக ஆகப் போகிறோம் என்று அப்படியெல்லாம் தொல்லைப்பட்டவரல்ல.

தமிழ் காக்க வேண்டும்; தமிழ்மானம் காக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் பல்லாண்டு காலம் ஓயாது உழைத்துச் செய்த தியாகத்தின் பலனாக இன்று அவரைத்தேடிப் பதவி கிடைத்திருக்கிறது.

சிலருக்குப் பதவி கிடைத்தால் நாடு குட்டிச்சுவராகிவிடுகிறது. ஆனால் நமது கலைஞருக்கு பதவி கிடைத்ததால் நாடு வாழ்கிறது. ஏழை எளியவரின் நம்பிக்கை எல்லாம் அவரது விழிகளை நோக்கி உயர்கின்றன.



கலைஞர் பெற்றுள்ள நல்ல அனுபவம், திறமை, செயலாற்றல், அறிவுணர்வுகள் எல்லாம் இந்தத் தமிழ் மண் நலம் பெறும்படி பரிமளிக்கின்றன.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழகத்தின் முதலமைச்சர் ஆகிய இந்த இரண்டு பெரிய பொறுப்புகளையும் வகித்து வரும் கலைஞர் அவர்கள் எத்துறையில் திரும்பினாலும் அத்துறை சிறப்படைகிறது. எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்குகிறார் அவர்.

கட்சியின் ஒவ்வொரு தொண்டனையும் தலைவனையும் நன்றாகப் புரிந்து வைத்துக்கொண்டு அவர் கழகத்தைச் சீராக நடத்திச் செல்கிறார்.



தமிழகத்தின் முதல்வர் என்னும் முறையில் நல்ல நிர்வாகத் திறமையோடு கட்சிப் பாகுபாடு இல்லாமல் அரசாங்கத்தை நடத்திச் செல்கிறார் கலைஞர். எல்லாத் தரப்பினருக்கும் தேவையான நன்மைகளை உரிய நேரத்தில் செய்து வரும் ஒரே முதல்வர் கலைஞர் அவர்கள்தான்.

எந்தக்கட்சியிலும் காணக் கிடைக்காத அருங்குணங்களைப் பெற்ற முதல்வர் கலைஞர் அவர்கள் அவரது அறிவாற்றலுக்கும் நல்ல பண்பாட்டுக்கும் அவருக்கு இப்போதுள்ள முதல்வர் பதவி மட்டும் போதாது. இன்னும் உயரிய பதவிகள் எல்லாம் அவரைத் தேடி வரும் காலம் விரைவில் வந்தே தீரும்.

- எம்.ஜி.ஆர் 

(1971 ஆம் ஆண்டு பரங்கிமலைத்தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியது)

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024