Friday, March 27, 2020


அஞ்சலி: வசனங்களால் வாழ்கிறார்! - இயக்குநர் விசு




ரிஷி

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மோதிரக் கையால் நடிகர்கள்தாம் குட்டுப்பட வேண்டுமென்பதில்லை, இயக்குநர்களும் குட்டுப்பட்டிருக்கின்றனர். அவர்களில் முதன்மையானவர் விசு. மீனாட்சிசுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவரை, ரசிகர்கள் விசு என்ற பெயராலேயே அறிந்துவைத்திருக்கிறார்கள்.

விசுவின் முந்தைய தலைமுறை இயக்குநர் ஸ்ரீதர் போல், இவரும் முதலில் எழுத்தாளராக அறிமுகமாகி பின்னர் இயக்குநரானவர். தனது ஒரு படம்போல் இன்னொரு படம் இருந்துவிடக் கூடாது என்று இயங்கியது ஸ்ரீதரது சிறப்பு என்றால், பெரும்பாலான படங்களை ஒரே விதமாக உருவாக்கி வெற்றிகளைக் கொடுத்தவர் விசு.

திரையில் மட்டுமே!

திரைப்படங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்துடன் இயக்குநர் மிஷ்கின் விடாப்பிடியாகத் திரைப்படங்களை உருவாக்குவதுபோல் இயக்குநர் விசுவும் அதே கருத்துடன் ஆனால், மிஷ்கினுக்கு எதிரான துருவத்தில் நின்றுகொண்டு படங்களை உருவாக்கியவர். கணியன் பூங்குன்றன் போன்ற ரோபாட் தன்மை கொண்ட துப்பறிவாளனையோ அம்மையப்ப முதலியார் போன்று வீட்டுக்கு நடுவில் அட்சர சுத்தமாகக் கோடு போடும் தந்தையையோ உலகத்தில் காண முடியாது. அவர்களைத் திரையில்தான் பார்க்க முடியும்.

நாடகம் தொடர்பான மேன்மை யான எண்ணம் கொண்டிருந்த காரணத்தாலேயே, தனது படங்கள் நாடகம்போல் உள்ளன என்னும் விமர்சனத்தை விசனப்படாமல் பெருமிதத்துடன் எதிர்கொண்டவர் விசு. அதுதான் அவரது வெற்றி. தொடக்க காலத்தில் இவர் கதை, வசனம் எழுதிய படங்களை இயக்கியவர்களும் உயிர்த்துடிப்பான வசனங்களை எழுதி, அதனால் பெயர் பெற்றவர்களே. முதலில் எழுதிய ‘பட்டினப்பிரவேசம்’ படத்தை இயக்கியவர் கே. பாலசந்தர். தொடர்ந்து எழுதிய ‘அவன் அவள் அது’, ‘கீழ்வானம் சிவக்கும்’ போன்ற படங்களை முக்தா வி.சீனிவாசன் இயக்கினார்.

இரும்புக் கயிறு

எஸ்பி. முத்துராமன் இயக்கிய ‘குடும்பம் ஒரு கதம்பம்’ ஒரு நடிகராக விசுவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. என்றபோதும் அவர் இயக்குநராகத் தடம்பதித்தது அடுத்து வெளியான ‘கண்மணி பூங்கா’வில் தான். தணிக்கைத் துறையினரால் வயது வந்தவர்களுக்கான படமாக ‘ஏ சான்றிதழ்' வழங்கப்பட்ட இந்தப் படம், பெரிதாகப் பேசப்படாவிட்டாலும் அதன் பின்னர் விசு சிறந்த குடும்பப் பட இயக்குநராக முத்திரை பெற அச்சாரம் போட்டது.

விசுவை வெற்றிகரமான இயக்குநராக வெகுமக்கள்திரளிடம் கொண்டு சேர்த்த படம், ‘மோடி மஸ்தான்' என்னும் மேடை நாடகத்தின் அடிப்படையில் உருவான ‘மணல் கயிறு’தான். விசுவின் திரைப்பட வரலாற்றில் அசைக்க முடியாத இரும்புக் கயிறான அந்தப் படத்தில், காது கேளாத மாமாவைப் போன்று அவர் உருவாக்கிய எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு சேது விநாயகம், கமலா காமேஷ், கிஷ்மூ, மனோரமா, பூபதி போன்ற நடிகர்கள் உயிர் தந்தனர் .இப்படி திறமைமிக்க நிலையக் கலைஞர்களைத் தொடர்ந்து அவர் பயன்படுத்திய தன்மை, நாடக மேடையில் ஏற்பட்ட பழக்கமாக இருந்திருக்கலாம். நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த பாக்யராஜிடமும் இந்த அம்சத்தைக் காண முடியும்.

மின்சார விருது

1986-ல் வெளியான ‘சம்சாரம் அது மின்சாரம்’ விசு இயக்கிய திரைப்படங்களில் மாபெரும் வெற்றிபெற்றது. சிறந்த பொழுதுபோக்குச் சித்திரம் என்பதற்காக தங்கப்பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப்படம் இது. இது பின்னர், சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ‘குடும்ப புராணம்’ என்னும் பெயரில் மலையாளத்தில் மறுஆக்கம் செய்யப்பட்டது. இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கும் இப்படம் சென்றது. இதன் இரண்டாம் பாகத்தை எழுதி முடித்து அதைத் திரைப்படமாக்கும் கனவோடு இருந்தவர் அந்தக் கனவு நிறைவேறாமலே நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

கமலுடனும்

‘தில்லுமுல்லு’, ‘நெற்றிக்கண்’, ‘புதுக்கவிதை’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘மிஸ்டர் பாரத்’, ‘மன்னன்’ என நடிகர் ரஜினிகாந்தின் பல படங்களில் இவருடைய பங்களிப்பு இருந்திருக்கிறது. ‘பசி’ படத்தின் மூலம் நினைவுகூரப்படும் இயக்குநர் துரையின் இயக்கத்தில் உருவான படம் ‘சதுரங்கம்’. இந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதியதன் மூலம் ரஜினிகாந்துடனான இவரது பயணம் 1978-ல் தொடங்கியது. கிட்டத்தட்ட இதே கதையைத்தான் ‘திருமதி ஒரு வெகுமதி’ என்னும் பெயரில் பின்னர் விசு படமாக்கினார். நடிகர் எஸ்.வி.சேகர் இந்தப் படத்தில் நடித்த வெகுளித்தனமான கணவன் வேடத்தில்தான், ரஜினிகாந்த் முந்தைய படத்தில் நடித்திருந்தார்.

கமல்ஹாசனை விசு இயக்கியதில்லை. ஆனால் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் கமல் நடித்திருந்த ‘சிம்லா ஸ்பெஷல்’ படத்துக்கு விசு கதை, வசனம் எழுதியிருந்தார். ரஜினியை இயக்க ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால், எந்தச் சூழலிலும் படைப்புரீதியான சமரசம் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த விசு, ரஜினியை இயக்கக் கிடைத்த அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். அந்தப் படம் ‘அண்ணாமலை’. பின்னர், அந்தப் படத்துக்கு வஸந்த் இயக்குநர் என நாளிதழ்களில் விளம்பரம்கூட வந்தது. ஆனால், இறுதியில் இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. பின்னர், சுரேஷ் கிருஷ்ணாவுக்கு ‘பாட்ஷா' கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

விசு வசனம்

நடிகர் சிவாஜி கணேசனுடன் அவர் இணைந்து நடித்த படம் ‘ஆனந்தக் கண்ணீர்’. அதில்கூட அவரை நினைவுபடுத்துவது ‘தோராயமாக’ என்னும் சொல்லைப் பயன்படுத்தி டாக்ஸி டிரைவரிடம் அவர் பேசும் நீளமும் குழப்பமுமான அந்த வசனம்தான். இவ்வளவுக்கும் அந்தப் படத்தில் விசு வெறும் நடிகரே. ஆனால், விசு என்றவுடனேயே இயக்குநர்களுக்கு இப்படியான வசனங்களுக்கான நடிகர் என்றே தோன்றியிருக்கிறது.

ஆனால், விஜயகாந்த் நடிப்பில் அவர் இயக்கிய ‘டௌரி கல்யாணம்’ என்னும் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். திருமணப் பந்தியில் இலைகளில் மிச்சம் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களெல்லாம் பணத் தாள்களாகவும் நாணயங்களாகவும் தென்படும். ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவனின் மனத் தாங்கலை, இதைவிடத் தெளிவாக வசனங்களால்கூட வெளிப்படுத்தியிருக்க முடியாத அளவுக்கு நயமான காட்சி.

எல்லாவற்றுக்கும் மேலாக, மேடையில் உருவாக்கப்பட்ட நாடகங் களைப் போன்ற திரைப்படங்களைப் படைக்கவே தான் திரைப்படத் துறைக்கு வந்தோம் என்பதில், அவருக்கு எள்ளளவும் சந்தேகம் இருந்ததில்லை. அந்தப் படங்களில் பல பெரும்பான்மையான ரசிகர்களை, குறிப்பாகத் தாய்க்குலத்தைக் கவர்ந்து வெற்றியை வாரிக்குவித்ததே அவரது சாதனைச் சரித்திரம். சினிமாவில் வசனங்களுக்கான முக்கியத்துவம் இருக்கும்வரை விசுவின் பெயரும் நிலைத்திருக்கும். ஏனெனில், அவர் வசனங்களால் வாழ்கிறார்!

கட்டுரையாளர், தொடர்புக்கு: chellappa.n@hindutamil.co.in

அன்பு வாசகர்களே....

வரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!

- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் செவிலியர்கள், ஊழியர்களுக்காக 200 பஸ்கள் இயக்கம் - சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை

சென்னையில் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளில் ஈடுபடும் செவிலியர்கள், ஊழியர்களுக்காக 200 மாநகர பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.

பதிவு: மார்ச் 26, 2020 05:00 AM

சென்னை, 

இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் கோ.கணேசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அத்தியாவசிய பணிகளான மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பால் மற்றும் அரசின் முக்கிய துறைகளில் குறைந்த அளவில் பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். எனவே அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்களை இயக்கிட வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் சென்னை தலைமைச் செயலக அலுவலர்கள், பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் தங்களது பணிக்கு வந்து செல்ல ஏதுவாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான சிங்கப்பெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, தாம்பரம், பூந்தமல்லி, மணலி, எண்ணூர், நெற்குன்றம், தேனாம்பேட்டை, துரைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200 மாநகர பஸ்கள் இயக்கப்பட்டன.

இத்தகைய அவசர பணிகளுக்கு மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் போதிய டிரைவர்களும், கண்டக்டர்களும் தயார்நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தேவைக்கு ஏற்ப அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்காக பஸ்களை இயக்குவதற்கு மாநகர போக்குவரத்து கழகம் தயார்நிலையில் உள்ளது என்றும், இந்த பஸ்களில் வேறு யாரும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

Added : மார் 26, 2020 21:21

சென்னை : சி.பி.எஸ்.இ., பள்ளிகள், இணைப்பு அந்தஸ்துபெற, விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஏப்ரல், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பாட திட்டத்தில் செயல்பட உள்ள பள்ளிகள், ஆண்டுதோறும்இணைப்பு அந்தஸ்து பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில், இந்த அந்தஸ்தை பெறுவதற்கு பள்ளிகள் தரப்பில் விண்ணப்பிக்க, மார்ச், 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. தற்போது, கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, நாடு முழுதும், 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், விண்ணப்பம் தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஏப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை, சி.பி.எஸ்.இ., செயலர்,அனுராக் திரிபாதி பிறப்பித்துள்ளார்.
ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுனர்களுக்கு 'கொரோனா' பரிசோதனை அவசியம்

Added : மார் 26, 2020 21:18

சென்னை வெளிநாட்டு பயணியரை ஏற்றிச் சென்ற, ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுனர்களின் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து வந்த, நம் நாட்டவர்களையும், வெளிநாட்டவர்களையும், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்து, பல இடங்களுக்கு ஏற்றிச் செல்லும் பணியை, நேரடியாக செய்தவர்கள், ஆட்டோ, கால் டாக்சி உள்ளிட்ட வாகன ஓட்டுனர்கள். அறிகுறிகள்எனவே, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு, கொரோனா தொற்றின் அறிகுறிகள் தெரியாத நிலையில், அவர்கள் நோய் பரப்பிகளாக இருந்திருக்க வாய்ப்புள்ளது.

அந்த வகையில், முதல் நிலை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களாக, ஓட்டுனர்கள் உள்ளனர். எனவே, அவர்களின் உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிவிக்கவும், அவ்வாறு அறிகுறிகள் தென்பட்டால், அருகில்உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை எடுக்கவும், குடும்பத்தினரை தனிமைப்படுத்தவும், அரசு சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், நோயின் தொடர்புச் சங்கிலியை அறுக்க முடியும் என, மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து, தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தின் செயலர், ஜூட் மேத்யூ கூறியதாவது:

தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இருந்து, பயணியரை அழைத்து வரும் பணியில், ஓலா, உபர் உள்ளிட்ட, கால் டாக்சிகள் இயங்குகின்றன. இது மட்டுமின்றி, வெளிநாட்டினருடன் தொடர்பில் உள்ள சுற்றுலாத் துறையிலும், கால் டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டுனர்கள் உள்ளனர்.

வாழ்வாதாரம் பாதிப்புஇந்நிலையில், வெளிநாட்டில் இருந்து, இந்தியாவுக்கு சுற்றுலா வந்தவர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய இந்தியர்களை, மூன்று வாரங்களாக, ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்ட ஓட்டுனர்கள், தாமாகவே முன்வந்து, உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அவர்களுக்கு உடல் பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்து, அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது தான், நோயின் பரவலை, உடனடியாக கட்டுப்படுத்த முடியும். அதேபோல், வெளிநாட்டினர் தங்கும் விடுதிகளில் உள்ள ஊழியர்களையும், பரிசோதிக்க வேண்டும்.தற்போது, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், வாடகை வாகனங்கள் அனைத்தும் முடங்கி உள்ளன.

இதனால், அவர்களின் வாழ்வாதாரமும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகைஎனவே, அவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்குவதோடு, வங்கிக் கடன் தொகை செலுத்த, நான்கு மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். தற்போது, உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டும், அரசு உதவித் தொகை கிடைக்கும் நிலையில் உள்ளது. இதில், 15 சதவீதம் ஓட்டுனர்களுக்கு கூட பலன் கிடைக்காது. எனவே, அனைத்து ஓட்டுனர்களுக்கும், அரசு உதவித் தொகை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
வட மாநில பக்தர்கள் ராமேஸ்வரத்தில் தவிப்பு

Added : மார் 27, 2020 01:04

ராமேஸ்வரம் :ரயில் போக்குவரத்து இன்றி, ராமேஸ்வரத்தில் தவிக்கும் வட மாநில பக்தர்களுக்கு, சமூக ஆர்வலர்கள் உதவி செய்கின்றனர்.உ.பி., பீஹார், ராஜஸ்தானைச் சேர்ந்த, 110 பக்தர்கள், மார்ச், 19ல் ரயிலில் புறப்பட்டு, மார்ச், 21ல் ராமேஸ்வரம் வந்திறங்கினர். இவர்கள், கோவிலில் தரிசிக்க முடியாமலும், மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல ரயில் வசதி இன்றியும், ராமேஸ்வரத்தில் தனியார் விடுதியில் முடங்கி உள்ளனர்.ஓட்டல்களும் மூடப்பட்டதால், உணவுக்கு வழியின்றி தவித்தனர். சன்னிதி தெருவில் உள்ள சீதாராம் தாஸ் பாபா மடத்தில், இவர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.தாசில்தார் அப்துல்ஜபார், அரிசி, காய்கறி, பருப்பு வழங்கி, விடுதியில் சமைத்து சாப்பிடவும், வெளியில் நடமாட கூடாது எனவும், அறிவுறுத்தினார்.
ஊரடங்கு உத்தரவு மீறல் 8,136 பேர் கைது: போலீஸ் அதிரடி

Added : மார் 26, 2020 21:44

சென்னை : தமிழகம் முழுதும், ஊரடங்கு உத்தரவை மீறியது தொடர்பாக, 8,136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாகன சோதனை மற்றும் ரோந்து பணியை, தீவிரப்படுத்தி உள்ளனர்.இந்நிலையில், தமிழகம் முழுவதும், ஊரடங்கு உத்தரவை மீறி, தேவையில்லாமல் வெளியில் சுற்றியவர்கள், கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டோர் என, 8,136 பேரை கைது செய்து, பின் விடுவித்துள்ளனர்.

அதேபோல, 144 என்ற தடையுத்தரவை மீறியதற்காக, 1,252 பேர் மீதும், கொரோனா வைரஸ் குறித்து, வதந்தி பரப்பியது தொடர்பாக, 16 பேர் மீதும், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கொரோனா தொற்று காரணமாக, தனிமைப்படுத்தப்பட்டவர்கள், அரசுக்கு தெரிவிக்காமல் வெளியில் சென்றது தொடர்பாக, ஆறு பேர் மீது, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மேலும், ஊரடங்கு உத்தரவை மீறுவோரை, தற்போது எச்சரித்து அனுப்பினாலும், அவர்களின் வாகன எண்களை, போலீசார் குறித்து வைத்துள்ளனர். எந்த நேரத்திலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
வீட்டில் மதுபானம் விற்பனை : மாஜி பெண் கவுன்சிலர் கைது

Added : மார் 27, 2020 00:57

தஞ்சாவூர் :பேராவூரணியில் 144 தடை உத்தரவை பயன்படுத்தி, வீட்டில் வைத்து மது விற்ற, முன்னாள் அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர், பேராவூரணி அடுத்த திருப்பூரணிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மனைவி ராஜகுமாரி,42. அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில், 3 மதுக்கடைகள் ஒரே இடத்தில் உள்ளது. அதில் ஒரு மதுபானக் கடையில் ராஜகுமாரி, 3 ஆண்டாக பார் நடத்தி வந்தார். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை, 144 தடை உத்தரவால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ராஜகுமாரி, மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்தார். இதுகுறித்து பேராவூரணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை ராஜகுமாரி வீட்டிற்கு, பேராவூரணி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உள்ளிட்ட போலீசார் சென்று, ராஜகுமாரியை கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த, 200 மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

NEWS TODAY 14.06.2026