ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுனர்களுக்கு 'கொரோனா' பரிசோதனை அவசியம்
Added : மார் 26, 2020 21:18
சென்னை வெளிநாட்டு பயணியரை ஏற்றிச் சென்ற, ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுனர்களின் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து வந்த, நம் நாட்டவர்களையும், வெளிநாட்டவர்களையும், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்து, பல இடங்களுக்கு ஏற்றிச் செல்லும் பணியை, நேரடியாக செய்தவர்கள், ஆட்டோ, கால் டாக்சி உள்ளிட்ட வாகன ஓட்டுனர்கள். அறிகுறிகள்எனவே, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு, கொரோனா தொற்றின் அறிகுறிகள் தெரியாத நிலையில், அவர்கள் நோய் பரப்பிகளாக இருந்திருக்க வாய்ப்புள்ளது.
அந்த வகையில், முதல் நிலை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களாக, ஓட்டுனர்கள் உள்ளனர். எனவே, அவர்களின் உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிவிக்கவும், அவ்வாறு அறிகுறிகள் தென்பட்டால், அருகில்உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை எடுக்கவும், குடும்பத்தினரை தனிமைப்படுத்தவும், அரசு சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், நோயின் தொடர்புச் சங்கிலியை அறுக்க முடியும் என, மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து, தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தின் செயலர், ஜூட் மேத்யூ கூறியதாவது:
தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இருந்து, பயணியரை அழைத்து வரும் பணியில், ஓலா, உபர் உள்ளிட்ட, கால் டாக்சிகள் இயங்குகின்றன. இது மட்டுமின்றி, வெளிநாட்டினருடன் தொடர்பில் உள்ள சுற்றுலாத் துறையிலும், கால் டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டுனர்கள் உள்ளனர்.
வாழ்வாதாரம் பாதிப்புஇந்நிலையில், வெளிநாட்டில் இருந்து, இந்தியாவுக்கு சுற்றுலா வந்தவர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய இந்தியர்களை, மூன்று வாரங்களாக, ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்ட ஓட்டுனர்கள், தாமாகவே முன்வந்து, உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அவர்களுக்கு உடல் பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்து, அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது தான், நோயின் பரவலை, உடனடியாக கட்டுப்படுத்த முடியும். அதேபோல், வெளிநாட்டினர் தங்கும் விடுதிகளில் உள்ள ஊழியர்களையும், பரிசோதிக்க வேண்டும்.தற்போது, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், வாடகை வாகனங்கள் அனைத்தும் முடங்கி உள்ளன.
இதனால், அவர்களின் வாழ்வாதாரமும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகைஎனவே, அவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்குவதோடு, வங்கிக் கடன் தொகை செலுத்த, நான்கு மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். தற்போது, உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டும், அரசு உதவித் தொகை கிடைக்கும் நிலையில் உள்ளது. இதில், 15 சதவீதம் ஓட்டுனர்களுக்கு கூட பலன் கிடைக்காது. எனவே, அனைத்து ஓட்டுனர்களுக்கும், அரசு உதவித் தொகை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment