Wednesday, August 7, 2019

வரும் 17-ஆம் தேதி மாலை 5 மணியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு: ஆக. 16, 17-இல் முக்கிய பிரமுகர்கள் தரிசனம் ரத்து By DIN | Published on : 07th August 2019 02:37 AM 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் அத்திவரதர் பெருவிழா தரிசனம் வரும் 17-ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.

மதியம் 12 மணிக்குப்பிறகு வரும் பக்தர்கள் பொதுதரிசனப்பாதையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், 16 மற்றும் 17-ஆம் தேதி முக்கிய பிரமுகர்கள் தரிசனம் ரத்து செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் கூறியது:
அத்திவரதர் பெருவிழா செவ்வாய்க்கிழமையுடன் 37 நாள்கள் நிறைவடைந்துள்ளது. மொத்தம் 48 நாள்கள் நடைபெறும் இவ்விழா வரும் 17-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் மதியம் 12 மணியுடன் கோயிலின் கிழக்கு கோபுர வாசல் வழியாக செல்லும் பொது தரிசனப்பாதை அடைக்கப்படும். அதன்பிறகு வரும் பக்தர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏற்கெனவே, கோயில் வளாகத்தில் உள்ள பக்தர்கள் மாலை 5 மணி வரையிலும் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் ஆகம விதிகளின்படி அத்திவரதர் குளத்தில் வைக்கப்படுவார்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மதியம் 4 மணி வரை 3.50 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். சுவாமி தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்கள் மேற்கு கோபுரம் வழியாக விரைந்து வெளியேறும் வகையில் அப்பாதை விரிவுபடுத்தப்படும். ஆக.16-ஆம் தேதி காஞ்சிபுரம் நகரில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக வேறு ஒரு நாள் பணிநாளாக நடைபெறும்.

இதுவரை 7,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இம்மாதம் 10, 11, 12-ஆம் தேதிகளில் 3 நாள்கள் விடுமுறை தினங்களாக இருப்பதால் வரும் 10- ஆம் தேதி முதல் மேலும் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

இந்நாட்களில் பக்தர்கள் இதுவரை வந்ததை விட கூடுதலாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் காஞ்சிபுரம் அருகேயுள்ள முத்தியால்பேட்டை, வந்தவாசி, கீழம்பி ஆகிய 3 இடங்களில் சுமார் 35 ஆயிரம் பக்தர்கள் இளைப்பாறும் வகையில் மேற்கூரையுடன் கூடிய பந்தல்கள் அமைக்கப்படும். அங்கு பக்தர்கள் உட்காரவும், உணவு அருந்தவும், கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

இம்மூன்று இடங்களிலிருந்து வரும் பக்தர்கள் கொஞ்சம்,கொஞ்சமாக நிறுத்தி பாதுகாப்பாக தரிசனம் செய்ய அனுப்பி வைக்கப்படுவார்கள். அத்திவரதரை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பொறுமையாக இருந்து தரிசனம் செய்யும் வகையில் தயாராக வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கூடுதல் தரிசன நேரம்: நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருப்பதால் அத்திவரதரை தரிசிக்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரவு 11 மணி வரை இருந்த தரிசன நேரம் இனி வரும் நாள்களில் பக்தர்களின் கூட்டத்தைப் பொறுத்து இரவு 2 மணி வரை நீட்டிக்கப்படும்.

கோயில் வளாகத்திலும்,வெளியிலும் அன்னதானம் வழங்கிட 46 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போலியான அனுமதிச்சீட்டு வைத்திருந்ததாக 7 பேர் கண்டறியப்பட்டு, அதில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற 4 பேர் மீது விசாரணை நடந்து வருகிறது. போலி அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்கள் அல்லது அனுமதிச்சீட்டை விலைக்கு விற்பவர்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர்.பா.பொன்னையா தெரிவித்தார்.

பேட்டியின் போது ஏடிஜிபி ஜெயந்த்முரளி, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024