Thursday, August 8, 2019

‘கனவு நிறைவேறலையே!’ - வாழ்வை முடித்துக்கொண்ட மாணவிகள்

பி.ஆண்டனிராஜ்

எம்.திலீபன்

எல்.ராஜேந்திரன்

தே.தீட்ஷித்

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து நடத்துநர் செல்வராஜின் மகள் கீர்த்தனா, நெல்லை ஊருடையான் குடியிருப்பைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வராஜின் மகள் தனலட்சுமி ஆகியோரின் தற்கொலை தமிழகத்தை உலுக்கியிருக்கிறது.



கீர்த்தனா

‘‘நீட் தேர்வுதான் இவர்களின் தற்கொலைக்குக் காரணம்’’ என்று சமூக ஆர்வலர்கள் சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.

துறைமங்கலத்தில் உள்ள செல்வராஜ் வீட்டைத் தேடிச் சென்றோம். கீர்த்தனாவின் மரண சோகத்திலிருந்து குடும்பத்தினர் மீளாத நிலையில், செல்வராஜின் நண்பர் தியாகராஜன் நம்மிடம் பேசினார்.

கீர்த்தனா, தனலட்சுமி

  ‘‘புள்ளைங்கதான் உலகம்னு வாழ்ந்த குடும்பம். கீர்த்தனாவின் அப்பா செல்வராஜுக்கு, தொண்டையில கேன்சர். சிகிச்சையப்போ அவர் பட்ட கஷ்டங்களைப் பார்த்த கீர்த்தனா, ‘நான் டாக்டர் ஆகி, அப்பாவை நல்லா கவனிச்சுக்குவேன்’னு சொன்னா. அதுபோலவே நல்லா படிக்கவும் ஆரம்பிச்சா. பத்தாம் வகுப்புல 495 மார்க் எடுத்து மாநிலத்திலேயே மூணாவது இடம் பிடிச்ச கீர்த்தனா, போன வருஷம் ப்ளஸ் டூ தேர்வுல 1,053 மார்க் எடுத்தா. நீட் தேர்வுல 202 மார்க் மட்டுமே எடுத்ததால, மருத்துவ சீட் கிடைக்கலை. அதனால, சென்னையில நீட் கோச்சிங் கிளாஸுல சேர்ந்தா. அவருக்காக ஒட்டுமொத்த குடும்பமும் சென்னையில குடியேறிச்சு. இந்த வருஷம் நீட் தேர்வுல 384 மார்க் எடுத்தும் சீட் கிடைக்காததால, இந்த முடிவை எடுத்துட்டா ’’ என்று கலங்கினார்.

கீர்த்தனாவின் தோழிகளிடம் பேசினோம். ‘‘அவளோட கனவு, லட்சியம் எல்லாமே டாக்டர் ஆகணும்கிறதுதான். சின்ன வயசுல இருந்தே `எங்க அப்பாவுக்கு மருத்துவம் பார்க்க டாக்டர் ஆகணும்’னு சொல்லிக்கிட்டே இருப்பா. ஆனா, நீட் தேர்வால் அவளோட கனவெல்லாம் சிதைஞ்சுப்போச்சு. `இந்த முறை சீட் கிடைச்சிடும்’னு ரொம்ப நம்பிக்கையா இருந்தா. அவளைவிட குறைவான மார்க் வாங்கி சுமாரா படிக்கிற புள்ளைங்க பலர், நீட் தேர்வுல அதிக மார்க் வாங்கி டாக்டருக்குப் படிக்கப் போயிட்டாங்க. அது அவளை ரொம்பவே அவமானப்பட வெச்சிருச்சு. அதனாலத்தான் இப்படியொரு முடிவைத் தேடிக்கிட்டா’’ என்று கண்ணீர் வடித்தார்கள்.

தனலட்சுமியின் கடிதம்

பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, ‘‘நீட் தேர்வால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், நீட் தேர்வைத் தொடர்வதில் மத்திய அரசு பிடிவாதம் காட்டுவது சரியல்ல. தமிழக அரசு இந்த விவகாரத்தில் போதிய அழுத்தம் கொடுக்காதது வேதனைக்குரியது. ஜெயலலிதா எதிர்த்த நீட் தேர்வை, எடப்பாடி பழனிசாமி அரசு ஆதரிப்பது வெட்கக்கேடானது. மத்திய அரசின் அனைத்து அழிவுத் திட்டங்களுக்கும், தமிழக அரசு சிவப்புக் கம்பளம் விரிப்பது கேவலமானது. தமிழக அரசின் அரசியல் லாபத்துக்காக, நீட் தேர்வு என்ற பெயரில் இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப்போகிறீர்கள்?” என்றார் ஆவேசமாக.

நெல்லை மாவட்டம் ஊருடையான் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான செல்வராஜின் மகள் தனலட்சுமியின் தற்கொலை அந்தப் பகுதி மக்களை உலுக்கியுள்ளது.



தனலட்சுமி எழுதி வைத்த கடிதத்தில், ‘என் சாவுக்கு யாரும் காரணமில்லை. என்னால், நான் ஆசைப்பட்டதைப் படிக்க முடியவில்லை. பணம்தான் என் கனவுகளை நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டது. நான் மட்டும் நீட் கோச்சிங் கிளாஸுக்குப் போயிருந்தால், இப்போது டாக்டருக்குப் படித்துக்கொண்டிருப்பேன். நான் ஆசைப்பட்டது கிடைக்கவில்லை. அதனால் போய்வருகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


தனலட்சுமியின் தந்தை செல்வராஜிடம் பேசியபோது, ‘‘நான் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்திக்கிட்டு வர்றேன். எனக்கு இதயப் பிரச்னை ஏற்பட்டு சர்ஜரி செய்ததுல, மூணு லட்சம் ரூபாய் செலவாயிடுச்சு. அதை கடனுக்கு வாங்கியதால, வட்டி கட்டிட்டிருக்கேன். அதனாலதான் கடந்த வருஷம் தனலட்சுமியை கோச்சிங் சென்டர்ல சேர்க்க முடியலை. இவ இந்த மாதிரி ஒரு முடிவை எடுப்பானு நினைச்சுக்கூடப் பார்க்கலை’’ எனக் கதறினார்.

‘‘நீட் தேர்வு காரணமாக மருத்துவர் ஆக முடியாத ஆதங்கத்தில் அரியலூர் அனிதா, செஞ்சி பிரதீபா, திருப்பூர் ரிது, பட்டுக்கோட்டை வைஸ்யா, விழுப்புரம் மோனிஷா, திருச்சி சுப தற்கொலை செய்து கொண்டனர். அந்த வரிசையில், பெரம்பலூர் கீர்த்தனா, நெல்லை தனலட்சுமி என எண்ணிக்கை கூடுகிறது. அரசு அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டிய விவகாரம் இது’’ என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து குரல்கள் கேட்கின்றன.

No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...