Thursday, October 10, 2019

Published : 09 Oct 2019 15:46 pm

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில்; எதிரிகளை விரட்டும் சரபேஸ்வரர்! 




வி.ராம்ஜி

நம் முன் ஜென்ம பாவங்களைப் போக்கி அருளுவதற்காக, மாடம்பாக்கத்தில் கோயில் கொண்டிருக்கிறார் தேனுபுரீஸ்வரர்.

சென்னை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் வழியில், 10 கி.மீ. தொலைவில் உள்ளது மாடம்பாக்கம். இங்குதான் அருளாட்சி செய்துகொண்டிருக்கிறார் தேனுபுரீஸ்வரர்.

இங்கே, ஆலயத்தில் உள்ள சிவனாரின் திருநாமம் தேனுபுரீஸ்வரர். பசு பூஜித்து வழிபட்டதால், தேனுபுரீஸ்வரர் எனப் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். அம்பாளின் திருநாமம் தேனுகாம்பாள்.

இந்தக் கோயிலுக்கு வந்து, பிரதோஷ நாளில் சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் அபிஷேகத்தை தரிசித்தால், இழந்ததையெல்லாம் மீட்கலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

கபில முனிவர், இடது கையில் சிவலிங்கத்தை வைத்துக்கொண்டு, பூஜை செய்தாராம். இதனால் கடும் கோபம் கொண்ட சிவபெருமான், பசுவாகும்படி சபித்தாராம். அதன்படி இங்கே இந்தப் பகுதியில், பசுவாக இருந்து சிவ வழிபாடு செய்து, அபிஷேகித்து, பூஜித்து வரம் பெற்றார். அதேபோல், இந்திரன் தன் சாபத்தைப் போக்கிக் கொள்ள இங்கு வந்து சிவபூஜை செய்து, வரம் பெற்றான் என்கிறது ஸ்தல புராணம்.

மனதை அமைதியாக்கும் அற்புதமான ஆலயம். கஜ பிருஷ்ட விமான அமைப்புடன் கட்டப்பட்டிருப்பது சிறப்பு. கோயிலின் முன்மண்டபம் அழகு. அந்த மண்டபத்தில் உள்ள தூண்களும் தூண்களில் உள்ள சிற்பங்களும் கொள்ளை அழகு.

இந்த 18 தூண்களில் ஒரு தூணில், சரபேஸ்வரர் சிலை உள்ளது. தேனுபுரீஸ்வரர், தேனுகாம்பாளுக்கு அடுத்தபடியாக,இந்தக் கோயிலுக்கு சரபேஸ்வரரை தரிசிப்பதற்காகவே ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நரசிம்மரின் கோபம் தணிப்பதற்காக, சரபேஸ்வரர் திருவுருவத்தை உண்டுபண்ணினார் சிவபெருமான் என்கிறது புராணம்.

மிகவும் சக்தி வாய்ந்தவர் சரபேஸ்வரர். ஞாயிற்றுக்கிழமைகளில், மாலை 3 மணிக்கு மேல், ராகுகாலத்தில் (4.30 முதல் 6 மணி வரை), சரபேஸ்வரருக்கும் உத்ஸவ மூர்த்தியான சரபேஸ்வரருக்கும் அபிஷேகங்கள் விமர்சையாக நடைபெறுகின்றன. நரசிம்மரைப் போலவே, சரபேஸ்வரருக்கும் பானக அபிஷேகம் மிகவும் விசேஷம். எதிர்ப்புகள் விலகும். தீய சக்திகள் அஞ்சி ஓடும் என்பது ஐதீகம்.

மாடம்பாக்கம் சிவாலயத்துக்கு வந்து தரிசியுங்கள். நம் பாவமெல்லாம் தொலையும். புண்ணியங்கள் பெருகும். எதிரிகள் விலகுவார்கள். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024