Friday, March 6, 2020

கரோனா பீதி: டெல்லி அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு தற்காலிக ரத்து


கரோனா வைரஸ் பீதி காரணமாக டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரஸுக்கு (கோவிட் -19) அந்த நாட்டில் இதுவரை 3000 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது.

டெல்லி மற்றும் தெலங்கானாச் சேர்ந்த இருவருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது. டெல்லியைச் சேர்ந்தவர் சமீபத்தில் இத்தாலி சென்று திரும்பியுள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்தவர் துபாய் சென்று திரும்பியுள்ளார். இரு நோயாளிகளின் உடல் நிலையும் சீராக இருக்கிறது இதையடுத்து, இருவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் தனி அறையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 28 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி இத்தாலி, ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே கரோனா வைரஸ் குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது.

இந்தநிலையில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க டெல்லி மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தலைநகர் டெல்லிக்கு வெளிநாட்டினர் அதிகம் வர வாய்ப்பு இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மத்திய சுகாதாரத்துறையும் எச்சரித்து இருந்தது.

இதைத் தொடர்ந்து டெல்லி தொடக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 30-ம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி மாநில அரசு ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் அனைவரும் பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவேடு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கையெழுத்திடும் பதிவேடு பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 10.01.2025