Wednesday, March 11, 2020

மொபைல் செயலி, இணையதள பிரச்சினையால் ரீசார்ஜ் செய்ய முடியாமல் சிரமப்படும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் 10.03.2020




பிஎஸ்என்எல் செயலி மற்றும் இணையதளம் மூலம் செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்ய முடியவில்லை என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் "மை பிஎஸ்என்எல்" என்ற செல்போன் செயலி மற்றும் பிஎஸ்என்எல்-ன் இணையதளம் ஆகியவை மூலமாக தங்களது தரைவழி தொலைபேசிகளுக்கான பில்கள் மற்றும் செல்போன்களுக்கான ரீசார்ஜ், டாப் அப் போன்றவைகளை செய்து வருகின்றனர்.

காகிதமில்லா பரிவர்த்தனை, மற்றும் ஊழியர்களின் வேலைப்பளுவை குறைப்பது போன்ற காரணங்களுக்காக பிஎஸ்என்எல் நிர்வாகமும் இதுபோன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு அவ்வப்போது சிறப்பு சலுகைகளும் வழங்கி வருகிற

து. வாடிக்கையாளர்களுக்கும் பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு நேரில் சென்று வரிசையில் நிற்பது போன்ற அலைச்சலை தவிர்ப்பதற்காக டிஜிட்டல் முறையை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக பிஎஸ்என்எல்-ன் மொபைல் செயலி மற்றும் இணையத்தளத்தில் பண பரிவர்த்தனைகள் செய்ய முடியவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் கடைசிநாள் வரை முயற்சித்துவிட்டு, பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கோ, அல்லது ரீசார்ஜ் கடைகளுக்கோ செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

டிஜிட்டல் முறைக்கு மாறிய அனைவரும் மீண்டும் கவுன்டர்களில் பணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால் பிஎஸ்என்எல் அலுவலகங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது. எனவே செயலி மற்றும் ஆன்லைன் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து “இந்து தமிழ்” உங்கள் குரல் சேவையில் தொடர்புகொண்ட எல்லீஸ்நகரை சேர்ந்த சிவகுமார் கூறியதாவது, “பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புக்கான பில் தொகை, செல்போன்களுக்கான ரீசார்ஜ் ஆகியவற்றை மொபைல் செயலி மற்றும் இணையத்தளம் மூலமாக செலுத்தி வந்தோம்.

ஆனால் 2 வாரங்களுக்கும் மேலாக செயலி மற்றும் ஆன்லைன் முறையில் பில்லிற்கு பணம் செலுத்தவோ, ரீசார்ஜ் செய்யவோ முடியவில்லை. பிற செயலிகள் மூலமாக முயற்சித்தாலும் பிஎஸ்என்எல் எண்களுக்கு மட்டும் ரீசார்ஜ் செய்ய முடியவில்லை. ஆனால் பிஎஸ்என்எல் அலுவலங்களிலோ, தனியார் கடைகளிலோ ரீசார்ஜ் செய்ய முடிகிறது. இதனால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களில் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்.

அங்கு பணியிலுள்ள குறைவான ஊழியர்களால் இவர்களை விரைவாக கையாள முடியவில்லை. பிஎஸ்என்எல்-ன் வாடிக்கையாளர் தொடர்பு எண்ணில் புகார் செய்தால், “இப்பிரச்சினை விரைவில் சரிசெய்யப்படும் அதுவரை வாடிக்கையாளர் சேவை மையங்களில் பணம் செலுத்துங்கள்“ என்கிறார்கள். அனைத்தும் டிஜிட்டல்மயமாகி வரும் நிலையில் பிஎஸ்என்எல் மீண்டும் பழையகாலத்தை நோக்கி செல்வது வருத்தமளிக்கிறது. பிஎஸ்என்எல் நிர்வாகம் இப்பிரச்சினைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 10.01.2025