Friday, March 6, 2020

நிர்பயா' குற்றவாளிகளுக்கு 20ல் தூக்கு; புது தேதி அறிவிப்பு

Updated : மார் 06, 2020 00:27 | Added : மார் 06, 2020 00:25 |

புதுடில்லி: மருத்துவ மாணவி, 'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேருக்கும், வரும், 20ல் துாக்கு தண்டனையை நிறைவேற்றும்படி, டில்லி நீதிமன்றம் புதிய தேதியை அறிவித்துள்ளது.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி, நிர்பயா, 2012ல், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கில், முகேஷ் குமார் சிங், 32, பவன் குப்தா, 25, வினய் சர்மா, 26, அக் ஷய் குமார் சிங், 31, ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு, முதலில், ஜன., 22ம் தேதியும், பின், பிப்., 1, மார்ச், 3 ஆகிய நாட்களிலும் துாக்கு தண்டனையை நிறைவேற்ற தேதி குறிக்கப்பட்டது. நான்கு பேரும், கருணை மனு, சீராய்வு மனு என, மாறி மாறி, தங்களுக்கு உள்ள சட்ட வாய்ப்புகளை பயன்படுத்தியதால், தண்டனை நிறைவேற்றுவது தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தாக்கல் செய்த கருணை மனுவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சமீபத்தில் நிராகரித்தார்.

டில்லி மருத்துவ மாணவி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரையும் ஜனவரி 22ம்தேதி தூக்கிலிட தேதி குறிக்கப்பட்டது. ஆனால் நால்வரும் மாறி மாறி மனுக்களை போட்டு மூன்று முறை தூக்கு தேதியை ஒத்திப்போட வைத்து விட்டார்கள். குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புதனன்று நிராகரித்தார். இதன்மூலம் குற்றவாளிகளின் அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்துவிட்டன.

இதையடுத்து, குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்வதற்கான சட்ட வாய்ப்புகள் அனைத்தும் முடிவடைந்தன. இது குறித்த தகவலை, டில்லி மாநில அரசின் வழக்கறிஞர், டில்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார். குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞரும், கருணை மனுவுக்கான சட்ட வாய்ப்புகள் முடிந்து விட்டதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, குற்றவாளிகள் நான்கு பேருக்கும், வரும், 20ம் தேதி அதிகாலை, 5:30க்கு துாக்கு தண்டனையை நிறைவேற்றும்படி, டில்லி திஹார் சிறை நிர்வாகத்துக்கு, நீதிபதி தர்மேந்திர ராணா, 'வாரன்ட்' அனுப்ப உத்தரவிட்டார்.


மார்ச் 23ல் விசாரணை:

'நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேரையும் தனித் தனி தேதிகளில் துாக்கிலிடக் கூடாது; ஒரே நேரத்தில் தான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.


மனு தாக்கல்:

இதை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று, நீதிபதிகள் ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு முன் ஆஜரான சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா, குற்றவாளிகளுக்கு, வரும், 20ல் தண்டனையை நிறைவேற்றும்படி, டில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை சுட்டிக் காட்டினார்.

அப்போது அவர் வாதிட்டதாவது: இந்த வழக்கில் நான்கு குற்றவாளிகள் உள்ளனர். இவர்களே, இரண்டு மாதங்களுக்கு மேலாக, தண்டனை நிறைவேற்றுவதை இழுத்துடித்து விட்டனர். எதிர்காலத்தில், ஒரு வழக்கில், 20 குற்றவாளிகள் இருந்தால், அவர்கள் மாறி மாறி மனு தாக்கல் செய்தால், தண்டனையை எப்படி நிறைவேற்ற முடியும். குற்றவாளிகள் தங்களுக்கு உள்ள சட்ட வாய்ப்புகளை பயன்படுத்தி, நீதிமன்ற நடவடிக்கைகளை கேலிக் கூத்தாக்குகின்றனர்.

எனவே, ஒரு வழக்கில் ஒருவரது சட்ட வாய்ப்புகள் முடிவடைந்து விட்டால், அவருக்கான தண்டனையை உடனடியாக நிறைவேற்ற அனுமதி அளிக்க வேண்டும். அந்த வழக்கில் தொடர்புடைய அடுத்த குற்றவாளியின் சட்ட வாய்ப்புக்காக காத்திருக்க கூடாது. இவ்வாறு, அவர் வாதிட்டார்.

சந்தேகம்:

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்யவுள்ளதாக கூறிய நீதிபதிகள், இந்த மனுவை, வரும், 23ல் விசாரிப்பதாக உத்தரவிட்டனர். மீண்டும் இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படாது என்றும் உறுதி அளித்தனர். மார்ச், 20ல், குற்றவாளி களுக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்ற தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி தண்டனை நிறைவேறுமா என்ற சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது.

'துாக்கில் தொங்குவதை நேரில் பார்க்க ஆசை'

மாணவி நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கூறியதாவது: என் மகள் சாகும்போது, 'குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்' என்றாள். குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை நிறைவேறும் நாளில் தான், எங்களின் பொழுது விடியும். எனக்கு வாய்ப்பு கிடைத்தால், குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தண்டனை நிறைவேற்றப்படுவதை, நேரில் பார்ப்பேன். எனக்கு அதற்கு அனுமதி கிடைக்குமா என, தெரியவில்லை. இதற்கு மேலும், குற்றவாளிகளுக்கான தண்டனை நிறைவேறுவது, தாமதமாவதை ஏற்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 10.01.2025