அண்ணா பல்கலை சிறப்பு அந்தஸ்து அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகிறது
Added : மார் 12, 2020 23:06
சென்னை: மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்க, தமிழக அரசு தயக்கம் காட்டுவதால், அண்ணா பல்கலைக்கான, உயர் கல்வி அந்தஸ்து, அடுத்த கல்வி ஆண்டுக்கு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள, சிறப்பு வாய்ந்த உயர் கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து, அவற்றில் சிறந்த நிறுவனங்களுக்கு, 'இன்ஸ்டிடியூட் ஆப் எக்ஸலன்ஸ்' என்ற, சீர்மிகு கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த வரிசையில், மத்திய அரசின் கல்வி நிறுவனமான, சென்னை, ஐ.ஐ.டி.,க்கு, இந்த அந்தஸ்து கிடைத்துள்ளது. மேலும், தமிழக அரசின் உயர் கல்வி நிறுவனமான, அண்ணா பல்கலைக்கும், இந்த அந்தஸ்து வழங்குவதற்கு, மத்திய அரசு முன்வந்தது.
ஆனால், சிறப்பு அந்தஸ்து வழங்கும் முன், மத்திய அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றி, புதிய திட்டங்களை வகுக்க வேண்டும். அதற்கான செலவில், 50 சதவீதத்தை, தமிழக அரசு ஏற்க வேண்டும் என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்பதில், தமிழக அரசு தாமதம் செய்தது.
சிறப்பு அந்தஸ்து கிடைத்தால், அண்ணா பல்கலை, மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடுமோ என்று, பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் சந்தேகம் தெரிவித்தனர். தமிழக அரசின், இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்றுவதில் சிக்கல் ஏற்படலாம் என்றும், சந்தேகம் எழுந்தது. இதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தரப்பில், தெளிவான விளக்கம் தரப்பட்டது. அதில், 'அண்ணா பல்கலை, எந்த விதிகளின் படி, தற்போது செயல்படுகிறதோ, அதில் எந்த மாற்றமும் செய்யப்படாது' என, கூறியது.
இதை தொடர்ந்தும், தமிழக அரசின் உயர் மட்டக் குழு முடிவு எடுக்கவில்லை. நேற்று, சட்டசபையில், உயர் கல்வி துறையின் மானிய கோரிக்கையில், இதற்கான அறிவிப்பு வரும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த அறிவிப்பும் வராததால், அண்ணா பல்கலையின் சிறப்பு அந்தஸ்து விவகாரம், அடுத்த கல்வி ஆண்டுக்கு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment