வாரணாசி கோவிலில் சாமி சிலைகளுக்கு 'மாஸ்க்'
Updated : மார் 10, 2020 20:12 | Added : மார் 10, 2020 20:10
வாரணாசி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், வாரணாசி பிரகலதேஸ்வரர் கோவிலில் உள்ள விஸ்வநாதர் சிலைக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. சாமி சிலையை பக்தர்கள் யாரும் தொட வேண்டாம் என அர்ச்சகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சீனாவில் உருவான, 'கொரோனா' வைரஸ், இன்று சர்வதேச நோயாகி இருக்கிறது. இந்தியா உட்பட, 100க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டம் காண செய்துள்ளது. இந்நிலையில், வாரணாசி பிரகலதேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் ஒருவர் சாமி சிலைகளுக்கு முகக்கவசம் அணிவித்துள்ளார். பக்தர்கள் யாரும் சாமி சிலையை தொடவேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அர்ச்சகர் கிருஷ்ண ஆனந்த் பாண்டே கூறுகையில், கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விஸ்வநாதர் சிலைக்கு முகக்கவசம் அணிவித்துள்ளோம். வெயில் காலத்தில் ஏசி, பேன் போடுவது போலவும், குளிர் காலத்தில் துணிகளை போர்த்துவது போலவும் தற்போது முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.
சாமி சிலையை தொட்டு வணங்குவதால், வைரஸ் மற்றவர்களுக்கு பரவி பாதிப்படைவதை தடுக்க, சிலைகளை தொட்டு வணங்க வேண்டாம் என பொதுமக்களிடம் வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். கோவிலில் அர்ச்சகர்கள் மட்டுமன்றி, பக்தர்களும் முகக்கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment