மின் விளக்குகள் அணைப்பால் மின் தேவை, 2,200 மெகா வாட் குறைந்தது
Added : ஏப் 06, 2020 00:19
சென்னை : பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தில் உள்ள வீடுகளில், நேற்று இரவு, 9 நிமிடங்கள், மின் விளக்குகள் அணைக்கப்பட்டதால், மின் தேவை, 2,200 மெகா வாட் அளவுக்கு குறைந்தது.
கொரோனா வைரஸ் ஒழிப்பில், நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்த, நேற்று இரவு, 9:00 மணி முதல், 9 நிமிடங்களுக்கு, வீடுகளில், மின் விளக்குகளை அணைத்து விட்டு, தீபம் ஏற்ற வேண்டும்; மெழுகு வர்த்தி ஏந்த வேண்டும்; டார்ச் லைட்களை ஒளிர விட வேண்டும் என, பொது மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.ஒரே சமயத்தில், நாடு முழுவதும், அனைத்து வீடுகளிலும், மின் விளக்கை நிறுத்தினால், மின் வினியோகத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.இதையடுத்து, வீடுகளில், மின் விளக்குகளை நிறுத்தும் சமயத்தில், மின் விசிறி, 'ஏசி' போன்ற மின் சாதனங்களை, வழக்கம் போல பயன்படுத்தும்படி, பொதுமக்களை, தமிழக மின் வாரியம் அறிவுறுத்தியது.
நேற்று இரவு, 8:59க்கு, தமிழகத்தின் மின்தேவை, 10 ஆயிரத்து, 100 மெகா வாட் என்றளவில் இருந்தது; 9:00 மணி முதல், 9 நிமிடங்களுக்கு, மாநிலத்தில் உள்ள, இரண்டு கோடி வீடுகளில், 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீடுகளில், மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. அதனால், 9:10க்கு, மின் தேவை, 7,900 மெகா வாட்டாக குறைந்தது. சில நிமிடங்களில் மட்டும், மின் தேவை, 2,200 மெகா வாட் அளவுக்கு குறைந்தது. இருப்பினும், மின் அழுத்தத்தில், எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. அதேநேரத்தில், நீர், அனல், எரிவாயு மின் உற்பத்தியும்; மின் கொள்முதலும் குறைக்கப்பட்டது. மீண்டும், 9:11க்கு மின் தேவை அதிகரிக்க துவங்கியது.
இது குறித்து, மின் துறை அமைச்சர் தங்கமணி கூறியதாவது:பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழகத்தில் உள்ள வீடுகளில், மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. மின் வினியோகத்தில், பிரச்னை ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வீடுகளில், மின் விளக்குகளை அணைப்பதால், 1,200 மெகாவாட் மின் தேவை குறையும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதை விட, அதிக அளவாக, 2,200 மெகா வாட் மின்சாரம் குறைந்தது; இருப்பினும், மின்னழுத்தத்தில், எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. மீண்டும், 9:11 மணிக்கு மின் தேவை அதிகரித்தது;
அதற்கேற்ப, மின் நிலையங்களில், மின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டது. இந்தியாவில், 31 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் குறைந்துள்ளது; தமிழகத்தில், அனைத்து வீடுகளுக்கும் தடையின்றி மின் வினியோகம் செய்யப்படுகிறது; சென்னையில் மட்டும், 350 மெகா வாட் மின்சாரம் குறைந்துள்ளது. மின் வினியோகத்தில், எந்த பிரச்னையும் ஏற்படாமல் சிறப்பாக பணியாற்றியதற்காக, மின் வாரிய ஊழியர்கள், அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment