தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு கிராம், 4,608 ரூபாய்க்கு விற்பனை
Added : ஜூன் 20, 2020 23:47
சென்னை; தமிழகத்தில், முதல் முறையாக, கிராம் ஆபரண தங்கம், 4,600 ரூபாயை தாண்டிய நிலையில், சவரன், 37 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது.
உலகின் பல நாடுகளில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, தொழில் துறை பாதித்துள்ளதால், பலரும், தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், அதன் விலை உயர்ந்து வருகிறது.ஏற்ற, இறக்கம்தமிழகத்தில், மே 18ம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 4,578 ரூபாய்க்கும்; சவரன், 36 ஆயிரத்து, 624 ரூபாய்க்கும் விற்பனையாகின. இதுவே, இதுவரை, தங்கம் விலையில் உச்ச அளவாக உள்ளது.
பின், அதன் விலை குறைந்தது.இருப்பினும், அதிக ஏற்ற, இறக்கம் காணப்பட்டது. நேற்று முன்தினம், கிராம் தங்கம், 4,553 ரூபாய்க்கும்; சவரன், 36 ஆயிரத்து, 424 ரூபாய்க்கும் விற்பனையாகின. கிராம் வெள்ளி, 53.10 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முதல் முறையாக, எப்போதும் இல்லாத வகையில், தங்கம் கிராமுக்கு, 55 ரூபாய் உயர்ந்து, 4,608 ரூபாய் என்ற, புதிய உச்சத்தை எட்டியது. சவரனுக்கு, 440 ரூபாய் அதிகரித்து, 36 ஆயிரத்து, 864 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 30 காசுகள் உயர்ந்து, 53.40 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அதிக வரிகளை விதித்து வருவதுடன், அந்நாட்டின் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கவும், அமெரிக்கா முடிவு செய்துள்ளது. நம் நாட்டின் எல்லையிலும், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, நம் ராணுவ வீரர்களை தாக்கியதால், மத்திய அரசும், அதே முடிவை எடுப்பதற்கான முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது.சந்தைகளில் சரிவுவைரஸ் பரவலால், பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால், உலக பொருளாதாரத்தில் வலுவாக உள்ள நாடுகளின் பங்கு சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.இதனால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில், அதிகளவில் முதலீடு செய்து வருவதால், உலக அளவிலும், உள்நாட்டிலும், அதன் விலை உயர்ந்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment