பேப்பர் போடும் தம்பிகளுக்கு எதற்கு, 'இ - பாஸ்?'
Added : ஜூன் 20, 2020 23:29
சென்னை; சென்னை மாநகர போலீசாருக்கு, 'இ - பாஸ்' குறித்த அடிப்படை புரிதல் கூட இல்லாததால், நாளிதழ்களை வீடுகளுக்கு எடுத்து செல்ல விடாமல் தடுத்து, அரசின் உத்தரவுக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு, மருத்துவம், இறப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக செல்ல, tnepass.tnega.org என்ற, இணையதளம் வாயிலாக, அரசு, இ - பாஸ் வழங்கி வருகிறது.புரிதலே இல்லை'மருத்துவம், வங்கி ஊழியர்கள், நாளிதழ்களில் பணிபுரிவோர் மற்றும் வினியோகம் செய்வோர் என, அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்கு, இ - பாஸ் தேவையில்லை. அவர்களுக்கு அடையாள அட்டைகள் இருந்தால் போதுமானது' என, ஏற்கனவே, அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.
சென்னையில் வரும், 30ம் தேதி வரை, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், போலீசார், வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு, இ - பாஸ் குறித்த அடிப்படை புரிதல் கூட இல்லை. சோதனையின்போது, ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு எண் சான்றிதழ்கள் இருக்கிறதா என கேட்பதை விட, இ - பாஸ் உள்ளதா என, கேள்விகளால் துளைத்தெடுத்து, வாகன ஓட்டிகளை கொலை குற்றவாளிகள் போல நடத்துகின்றனர்.அவர்களின் நோக்கம், வழக்குப்பதிவு செய்வது; அபராதம் வசூலிப்பது; வாகனங்களை பறிமுதல் செய்வதிலேயே உள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி, வெட்டியாய் ஊர் சுற்றுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார், அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோரை இம்சித்து வருகின்றனர்.நாளிதழ்களின் முகவர்கள், அலுவலக அடையாள அட்டை வைத்துள்ளனர். அதுபோல, நாளிதழ்களை வீடுகளுக்கு கொண்டு செல்லும், வினியோக தம்பிகளுக்கு, சம்பந்தப்பட்ட நாளிதழ்களின் அலுவலகத்தில் இருந்து, அனுமதி கடிதம் வழங்கப்பட்டு உள்ளது.வழக்கும் பதிவுஆனால், சென்னை மாநகர போலீசார், 'இ - பாஸ் இருந்தால் தான், நாளிதழ்களை எடுத்துச் செல்ல அனுமதிப்போம்' என, அவர்களை இம்சிக்கின்றனர்.
அரசின் உத்தரவு, இவர்களுக்குத் தெரியாமல் போனது ஏன் எனத் தெரியவில்லை.'வாகனம் ஓட்டும் அனைவரும், இ - பாஸ் வைத்திருக்க வேண்டும்' என நினைக்கின்றனர்.சென்னையில், கோடம்பாக்கம், மாம்பலம், போரூர், குன்றத்துார், தண்டையார்பேட்டை, அம்பத்துார், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில், போலீசார், நாளிதழ்களின் முகவர்கள், பேப்பர் தம்பிகள் மற்றும் வாகனங்களை நேற்று சிறைபிடித்து, பொது மக்களுக்கு, நாளிதழ்களை கொண்டு செல்ல முடியாமல் தடுத்து விட்டனர்.மாம்பலம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், வினியோக தம்பியிடம், உரிய ஆவணங்கள் இருந்தும் வழக்குப்பதிவு செய்து, வாகனத்தை பறிமுதல் செய்துள்ளார்.
கோரிக்கை
இப்படி, போலீசார் புரிதல் இல்லாமல் இருந்தால், கொரோனா வைரஸ் பரவல் மற்றும் விழிப்புணர்வு குறித்த தகவல்கள், பொது மக்களுக்கு எப்படி சேரும்?வாகன சோதனையில் ஈடுபடும், போக்குவரத்து மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசாருக்கு, இ - பாஸ் என்றால் என்ன; வாகன ஓட்டிகளிடம் இருக்க வேண்டிய ஆவணங்கள் என்ன; அவர்களிடம் எப்படி சோதனை செய்ய வேண்டும் என்பது பற்றி தெரியவில்லை.நாளிதழ்களை வினியோகிக்கும் முகவர்கள், பேப்பர் தம்பிகளுக்கு, இ - பாஸ் அவசியமா என்பது குறித்து, கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் தெளிவாக விளக்கி, சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என, பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
வங்கி ஊழியருக்கும்அதே கதி தான்!
வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பணிக்கு செல்லும்போது, போலீசார் தடுத்து நிறுத்தி, வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர் மற்றும் அதிகாரியை, வடபழனி, அண்ணாநகர் போலீசார் தடுத்து நிறுத்தி, வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். அடையாள அட்டையை காண்பித்தும், அவர்களை விடவில்லை என, மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.***
No comments:
Post a Comment