உறைநிலையில் சென்னை: பசித்திருக்கும் வயிறுகளுக்கு என்ன பதில்?
18.06.2020
மீண்டும் ஊரடங்கை எதிர்கொள்ளலாகின்றன சென்னையும் அதைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும். ஊரடங்கு எனும் சொல்லுக்குப் பின் மக்கள் கொடுக்கும் விலை என்னவென்பதை மிகச் சுலபமாக எண்ணிவிடுகிறதோ அரசு என்கிற கேள்வியே பிரதானமாக எழுகிறது. கிருமித் தொற்றைக் குறைப்பதற்கான தவிர்க்க முடியாத வியூகம் என்று அரசு இதற்கான காரணத்தைச் சொல்லுமானால், முன்னதாக அமலாக்கப்பட்ட ஊரடங்கு நாட்களில் அரசு இயந்திரம் சாதித்தது என்ன என்ற பதில் கேள்வி தவிர்க்கவே முடியாதது.
சென்னையில் முந்தைய ஊரடங்குக்குப் பிறகு, மே 25 முதலாகவே தொழிற்பேட்டைகள் இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. ஜூன் 1 முதலாகக் கடைகளைத் திறக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆயினும், முந்தைய நிலைமையில் நான்கில் ஒரு பங்குக்கேனும் தொழில் நடந்தபாடில்லை. தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிவிட்ட நிலையில், தொழிற்பேட்டைகள் தடுமாறின. மக்களிடம் உள்ள பணமும் கரைந்து, கிருமித் தொற்றின் அச்சமும் துரத்த கடைகளிலும் வியாபாரம் இல்லை. வேலை இழப்பும் வருமான இழப்பும் மக்களை அழுத்துகின்றன. இத்தகு சூழலில்தான் மீண்டும் ஒரு ஊரடங்கை சென்னை எதிர்கொண்டுள்ளது. சென்னையில் மட்டும் அல்ல; டெல்லி, மும்பை என்று தொற்று அதிகமாக இருக்கும் ஏனைய பெருநகரங்களிலும் சூழல் இதுதான். ஆனால், அங்கெல்லாம் ஊரடங்கு முடிவு எடுக்கப்படவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. சென்னையைவிட இரண்டு மடங்குக்கு மேலான மக்கள்தொகையைக் கொண்ட மும்பை, ஆசியாவிலேயே நெரிசலான சேரியான தாராவியில் கிருமித் தொற்றை எப்படிக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது என்கிற விஷயத்தைப் படித்தால், தமிழக அரசு எவ்வளவு பெரிய நிர்வாக ஓட்டைகளைக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடியும். தொற்றுப் பரவல் தொடர்பான எண்ணிக்கையிலேயே நம்பகத்தன்மையைப் பராமரிக்க முடியாத அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டோம் என்கிற உண்மைக்கு முகம் கொடுத்தால் மட்டுமே இந்த மோசமான நிலையிலிருந்து தமிழக அரசு முன்னகர முடியும்.
ஊரடங்கை நோக்கி நகர்ந்தாகிவிட்டாயிற்று. குறைந்தபட்சம் இந்த முறையேனும் முழுத் திட்டமிடலோடு நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர கடும் உழைப்பை அரசு கொடுக்கட்டும். வீடு வீடாக மக்களைச் சென்று பார்ப்பதும், பரிசோதனைகளை அதிகரிப்பதும், சிகிச்சை வட்டத்துக்குள் தொற்றாளர்கள் அனைவரையும் கொண்டுவருவதும் அதன் அடிப்படைப் பணியாக அமையட்டும். இடைப்பட்ட நாட்களில் பசியால் ஒருவரும் பாதித்திடாத நிலையையும் உறுதிசெய்திட வேண்டும்.
No comments:
Post a Comment