ஊரடங்கு அமலாகும் பகுதிகளில் வீட்டு வாடகை வசூலுக்கு தடை?
Added : ஜூன் 17, 2020 23:58
சென்னை; முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில், இம்மாதத்திற்கான வீட்டு வாடகை வசூலிக்க கூடாது என, வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவிடும்படி, தமிழக அரசுக்கு, வாடகைதாரரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த பலரும், சென்னையில் தங்கி, வேலை செய்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். சிரமம் மார்ச் இறுதியில் இருந்து, கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன.
இதனால், பலர் வேலைக்கு செல்லாத நிலையில், கையில் பணமும் இல்லாததால், குடும்ப செலவுகளை சமாளிக்க சிரமப்பட்டனர்.இதையடுத்து, 'வாடகை வசூலிக்க வேண்டாம்' என, வீட்டு உரிமையாளர்களுக்கு, அரசு வேண்டுகோள் விடுத்தது. இருப்பினும், பலர் வாடகை வசூலித்தனர். வாடகை தர முடியாதவர்கள், தாங்கள் ஏற்கனவே கொடுத்துள்ள முன்பணத்தில், வாடகையை பிடித்தம் செய்து கொள்ளும்படி, உரிமையாளர்களிடம் கூறினர்.சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சில பகுதிகளில், நாளை முதல், 30ம் தேதி வரை, அரசு முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது. இதனால், அந்த பகுதிகளில் வசிப்போர், வீடுகளில் முடங்குவதோடு, பணம் இல்லாமல், குடும்ப செலவுகளை சமாளிக்க சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது.கோரிக்கைஎனவே, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில், வாடகை வீடுகளில் வசிப்போரிடம், இம்மாதத்திற்கு வாடகை வசூலிக்கக் கூடாது என, வீட்டு உரிமையாளர்களுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கும்படி, அரசுக்கு வாடகைதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வீட்டு உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில், சொத்து வரி, குடிநீர் வரி செலுத்துவதில் இருந்து, அரசு விலக்கு அளிக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment