Wednesday, September 16, 2020

சசிகலா விடுதலை ; இபிஎஸ் என்ன செய்வார்? - டிரண்டிங்கில் விவாதம்

சசிகலா விடுதலை ; இபிஎஸ் என்ன செய்வார்? - டிரண்டிங்கில் விவாதம்

Updated : செப் 15, 2020 14:09 | Added : செப் 15, 2020 13:33 

சென்னை : சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா, அடுத்தாண்டு ஜனவரி 27ல் விடுதலையாக உள்ளார். இதனால் அதிமுக.,வினரை வைத்தும், முதல்வர் பழனிசாமியை வைத்தும் சமூகவலைதளங்களில் விவாதம் நடக்கிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை 2017ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 2017ம் ஆண்டு பிப்ரவரி முதல் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராதத்தை செலுத்தவில்லை என்பதால், அவரின் விடுதலை தாமதமாகும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ், சசிகலாவின் விடுதலை குறித்து கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சிறை நிர்வாகம், சசிகலா 2021 ஜன., 27ல் விடுதலையாவதாக தெரிவித்துள்ளது. மேலும், அபராதத்தொகை ரூ.10 கோடியை அவர் செலுத்தாதபட்சத்தில் 2022ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி தான் விடுதலையாவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுநாள் வரை சசிகலா அப்போது விடுதலை ஆவார், இப்போது விடுதலை ஆவார் என யூகங்களாக செய்திகள் வந்தன. ஆனால் இப்போது சிறை நிர்வாகமே அதிகாரப்பூர்வமாக இப்படி ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் சசிகலா ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்விளைவாக காலை முதலே #Sasikala என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரண்ட் ஆனது.

முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின் சசிகலா தான் முதல்வராக பொறுப்பேற்க இருந்தார். ஆனால் அதற்குள் சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்ற உத்தரவு வரவே இவர் சிறை செல்ல வேண்டியதாகிற்று. இதனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அறிவித்தார் சசிகலா. அதன்பின் தமிழகத்தில் நடந்த அரசியல் கூத்துகள் அனைவரும் அறிந்ததே. துணை முல்வர் பன்னீர் செல்வம் கட்சியிலிருந்து விலகி சென்றது. பின் அவர் இணைந்து, துணை முதல்வர் பதவி பெற்றார். சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கினர். தினகரன் தனிக்கட்சி தொடங்கினார். இப்படி அதிமுக., தலைமை பொறுப்பில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறின.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுக., கட்சியில் ஒருவித புகைச்சல் நிச்சயம் இருக்கும் என்ற கருத்தே இப்போதும் நிலவுகிறது. இப்படிப்பட்ட சூழலில் சசிகலாவின் விடுதலை பற்றிய அறிவிப்பு அதிமுக.,வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இதை வைத்து சமூகவலைதளங்களில் நிறைய மீம்ஸ்களும், டிரோல்களும் வெளியாகி வருகின்றன. முதல்வர் பழனிசாமி முன்பு, சசிகலா காலில் விழுந்த வீடியோக்களை இப்போது மீண்டும் டிரண்ட் செய்து வருகின்றனர். சசிகலா விடுதலையாகி வந்த பின் அரசியலில் என்ன மாதிரியான விளைவுகள் இருக்கும் என விவாதங்கள் தொடங்கிவிட்டன. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் வேறு வருகிறது. இதனால் சமூகவலைதளங்களில் இந்த விவகாரம் பரபரப்பு விவாதமாகிவிட்டது. இதனால் #Sasikala ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்டிங்கில் வந்தது.

இதுபற்றி அதிமுக பிரமுகர் ஒருவர் கூறும்போது, முதல்வருக்கு எதிராக உள்ளவர்களும் எதிர்க்கட்சிகளும் சேர்ந்து சசிகலா விடுதலையை விவாதம் ஆக்குகிறார்கள். சசிகலா விடுதலையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றார்.

ஆனால் எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் ஒரு தரப்பினர் அவரை ஆதரிக்கக் கூடும். அதிமுகவில் எங்களது ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் என்று டிடிவி தினகரன் ஒருமுறை கூறியதை மறந்துவிடக் கூடாது என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024