திருப்பூர்: ரஜினியின் அரசியல் பிரவேசத்தை முன்னிட்டு, திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், அவரின் 'பஞ்ச்' டயலாக் பொறித்த 'டி-சர்ட்' அதிகளவில் தயாரித்து வருகின்றன.
நடிகர் ரஜினி, புதிய கட்சி துவக்குவதாகவும், தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு, ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளத்தையும் உற்சாகப்படுத்தியுள்ளது. 'இப்போ இல்லைனா எப்பவும் இல்லை', மாத்துவோம், 'எல்லாத்தையும் மாத்துவோம்' என்கிற வாசகங்களை, பேட்டியின் போது கூறினார். இவை, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதனால், திருப்பூர்ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ரஜினி உருவப்படம் பொறித்து, 'அதிசயம், அற்புதம்', 'ஆன்மிக அரசியல்'; 'இப்போ இல்லைனா எப்பவும் இல்லை', 'மாத்துவோம்.... எல்லாத்தையும் மாத்துவோம்', என்கிற பஞச் டயலாக்களை பிரின்டிங் செய்துள்ளனர். இன்று, ரஜினி பிறந்தநாள். இதனால், இந்த 'டி-சர்ட்'டுகளை வாங்கி அணிய, ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில், '' திருப்பூரில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ரஜினி படம் மற்றும் பஞ்ச் டயலாக் பொறித்த டீ சர்ட்டுகளை தயாரிக்க, பிரின்டிங் நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்கி வருகின்றன. ''கட்சி அறிவிப்பு வெளியாகும்போது, ரசிகர் மன்றங்களில் இருந்து நேரடியாக அதிகளவு ஆர்டர்கள் திருப்பூருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment