Saturday, December 12, 2020

துணைவேந்தர்கள்- நிதி அலுவலர்கள் 'கூட்டணி' பல்கலைகளில் அதிகரிக்கும் தணிக்கை தடைகளால் ஆபத்து

துணைவேந்தர்கள்- நிதி அலுவலர்கள் 'கூட்டணி' பல்கலைகளில் அதிகரிக்கும் தணிக்கை தடைகளால் ஆபத்து



தமிழக பல்கலைகளில் துணைவேந்தர் - நிதி அலுவலர் 'கூட்டணியால்' அதிகரித்து வரும் தணிக்கை தடைகள் பல்வேறு நிதி மோசடிகளுக்கு வழிவகுக்கின்றன.

மாணவர் சமுதாயத்திற்கு உயர்கல்வி அளிப்பதற்கும் மக்களுக்கும் பயன்படக்கூடிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதன் பயன்களை அரசுகளுக்கு அளித்து சமுதாய வளர்ச்சிக்கு உதவுவது பல்கலைகளின் நோக்கம்.ஆனால் பல்கலைகளில் நிலவும் குழப்பங்கள், ஊழல் ஆகியவற்றுக்கு நிதி ஒழுக்கம், சட்டப்பூர்வ நிதி மேலாண்மையை கடைபிடிக்க வேண்டிய முக்கிய பொறுப்பில் உள்ள நிதி அலுவலர்கள் கடமை தவறுகின்றனர்.

துணைவேந்தரின் 'கைப்பாவை'

இவர்கள் பல்கலை விதிகளை கடைபிடிக்காமலும் ஆட்சிக் குழு, நிதிக் குழு, ஆட்சிப் பேரவை ஆகிவற்றிற்கு நிதிநிலைமை குறித்த குறிப்புகளை சரிவர சமர்ப்பிக்காமலும், துணைவேந்தர்களை சரியான வழியில் நெறிப்படுத்தாமலும் முறைகேடுகளுக்கு துணைபுரிகின்றனர்.பல்கலைகளில் பல்வேறு பதவிகளில் பேராசிரியர் நிலையில் உள்ளவர்கள் பொறுப்பு வகிக்கின்றனர்.

ஆனால் நிதி அலுவலர் பதவிக்கு உள்ளாட்சி நிதித்தணிக்கை துறை உயர்நிலை அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றனர்.அதற்கு காரணம் நிதிகளை முறையாக பயன்படுத்த வேண்டும் என்பதே. ஆனால் நடப்பதோ வேறு. சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல் அவர்கள் துணைவேந்தர்களின் கைப்பாவையாக இருந்து, ஊழல், நிதி மோசடிகளுக்கு காரணமாகின்றனர்.


'விசித்திர' தணிக்கை

இவர்களால் அனுமதிக்கப்படும் செலவினங்கள், ஆசிரியர், அலுவலர் பதவி உயர்வு, சம்பள நிர்ணயம், பல்கலை நிதி சம்மந்தப்பட்ட கோப்புக்களை இவர்களின் துறையின் கீழ் உள்ள அதிகாரிகளே தவறு என்று தணிக்கைக்கு உட்படுத்துவது விசித்திரமாக உள்ளது.மேலும் நிதிஅலுவலர் அனுமதித்த செலவினங்களை, முறையற்றது எனக் கூறி உள்ளாட்சி நிதி தணிக்கை துறையினரே தணிக்கை தடை ஏற்படுத்துவதும் முரண்பாடாக உள்ளது.

இதில் பல்கலை நிதி அலுவலர் செயல் சரியானதா. அல்லது இவர் சார்ந்த துறையினர் இவர் அனுமதித்த செலவினங்களுக்கு தணிக்கை தடை ஏற்படுத்துவது சரியானதா என புரியவில்லை.நிதி அலுவலர்கள் பணி ஓய்வுக்கு பிறகும் அந்த பல்கலையிலேயே பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் பல்கலை நிதி சம்மந்தமான விவகாரங்களில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே ஓய்வு பெற்றவர்கள் நிதி ஆலோசகராக தொடர்வதை தடை செய்ய வேண்டும்.

தனி இயக்குனரகம் தேவை

தணிக்கை தடைகளுக்கு நிதி அலுவலரே காரணம் என்பதால் அதனால் ஏற்படும் நிதி இழப்பிற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். தவறு செய்தவர்களை சஸ்பெண்ட் செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.கூட்டுறவு, அறநிலைத் துறைக்கு தனியாக தணிக்கை துறை இருப்பது போல் பல்கலைகளுக்கும் தனி இயக்குனரகம் ஏற்படுத்தினால் முறைகேடுகள் குறையும்.
--நமது சிறப்பு நிருபர்--

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024