`ஆளைவிடுங்க... பதில் சொல்ல மாட்டேன்!’ -ரஜினியின் அரசியல் வருகை குறித்து துரைமுருகன்
துரைமுருகன்
ரஜினியின் அரசியல் வருகை குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பின்வாங்கினார், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன்.
``தமிழகத்தின் தலைவிதியை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. எனது, உயிரைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஜனவரி மாதம் கட்சித் தொடங்கவிருக்கிறேன்’’ என்று தனது அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.``வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாக்குவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்’’ என்றும் ட்வீட் தட்டியிருக்கிறார் ரஜினிகாந்த்.
ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினியின் இந்த அரசியல் அறிவிப்புக்கு தி.மு.க மற்றும் அதன் கூட்டணியிலுள்ள கட்சித் தலைவர்கள் சிலரைத் தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் வரவேற்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.``வாய்ப்பிருந்தால் ரஜினியுடன் கூட்டணி அமையலாம்’’ என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.
அதேசமயம், ``ரஜினியின் அரசியல் வருகை தி.மு.க-வை ஆட்சிக்கட்டிலில் ஏறவிடாமல் தடுக்கும்’’ என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துவருகிறார்கள். ரஜினியின் அரசியல் வருகையை தி.மு.க எப்படிப் பார்க்கிறது... ரஜினியின் அறிவிப்புக்குக்கூட வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது ஏன்... என்பதை அறிய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனை செல்போனில் தொடர்புகொண்டோம்.
துரைமுருகனை வாழ்த்திய ரஜினியின் பதிவு
நமது கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பாத துரைமுருகன், ``ஆளைவிடுங்க சார்... இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நான் பொதுச்செயலாளராக இருக்கிறேன்’’ என்றுகூறி உடனடியாக அழைப்பைத் துண்டித்துவிட்டார்.
``துரைமுருகன் பொருளாளராக இருந்து, தி.மு.க-வின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தலைவர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதிலும், `எனது மதிப்புக்குரிய நண்பர்கள் துரைமுருகனுக்கும், பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டிருந்தார். பதிலுக்கு, ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவிக்காத மனநிலை படைத்தவராக துரைமுருகன் இருக்கிறார். தி.மு.க இப்போதே அச்சப்பட ஆரம்பித்துவிட்டது’’ என்கிறார்கள், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.
No comments:
Post a Comment