சுரப்பா விவகாரத்தை முற்றவிடாமல் சுமுகத்தீர்வு: உயர்நீதிமன்றம் கருத்து
Added : டிச 05, 2020 00:04
மதுரை:சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவிற்கு எதிரான விசாரணைக்கு தடை கோரிய வழக்கில், 'பல்கலை, மாணவர்களின் நலன் கருதி பிரச்னையை மேலும் முற்றவிடாமல் வேந்தர், தமிழக அரசுத் தரப்பில் சுமுக முடிவு எடுப்பார்கள்,' என நம்புவதாக கருத்து வெளியிட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
கன்னியாகுமாரி ஈத்தாமொழி மணிதணிக்கைகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:சென்னை அண்ணா பல்கலையில் ரூ.280 கோடி முறைகேடு நடந்துள்ளதாகக்கூறி, துணைவேந்தர் சுரப்பாவிற்கு எதிராக தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் சென்றது. இதை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. புகாரில் முகாந்திரம் இல்லை. விசாரணையில் உள்நோக்கம் உள்ளது. விசாரணை கமிஷன் அமைத்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மணிதணிக்கை குமார் மனு செய்தார்.
ஏற்கனவே விசாரணையில் நீதிபதிகள், 'இதில் அரசு அவசரப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. சுரப்பா மீதான விசாரணை கமிஷனுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது,' என அதிருப்தி வெளியிட்டனர்.நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.அரசுத் தரப்பில்,'அலுவலர் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் இதை பொதுநல மனுவாக விசாரிக்க முகாந்திரம் இல்லை. மனுதாரர் பாதிக்கவில்லை. அவர் மனு செய்ய முகாந்திரம் இல்லை,' என பதில் மனு செய்தது.சுரப்பா தரப்பில் தன்னையும் ஒரு தரப்பாக வழக்கில் சேர்க்க மனு செய்யப்பட்டது.
பல்கலை வேந்தர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 'வேந்தரிடம் விபரம் பெற்று தெரிவிக்க அவகாசம் தேவை,' என்றார்.
நீதிபதிகள்: பல்கலையின் கீழ் 500க்கு மேல் பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. பல்கலை, மாணவர்களின் நலன் கருதி பிரச்னையை மேலும் முற்றவிடாமல் வேந்தர், தமிழக அரசுத் தரப்பில் சுமுக முடிவு எடுப்பார்கள் என நம்புவதாக கருத்து வெளியிட்டு டிச.9க்கு ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment