Saturday, December 5, 2020

பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை:சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு

பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை:சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு

Added : டிச 05, 2020 00:02

மதுரை:மாணவர்கள், முதியோர்களுக்கு சேவை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த ஆய்வுக்காக மதுரை மாணவர் யோகபாலாஜியை பத்மஸ்ரீ விருதுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை பரிந்துரைத்துள்ளது.

கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரியில் ஐ.டெக்., 3ம் ஆண்டு படித்து வருகிறார். வசதிவாய்ப்பு, கல்வி போன்று எந்தப் பின்னணியும் இல்லாமல் எப்படி ஜெயித்தார் யோக பாலாஜி… அவரே விவரிக்கிறார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் சொந்த ஊர். அப்பா கணேசன் தனியார் நிதிநிறுவன வாட்ச்மேன். அம்மா மீனாட்சி கோவை தொண்டாமுத்துாரில் ஊர்நல அலுவலர். 10ம் வகுப்பு வரை முடுவார்பட்டி அரசு பள்ளி, அதன்பின் செயின்ட் மேரீஸ் பள்ளியில் படித்தேன். கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரியில் அரசு கோட்டாவில் சிவில் இன்ஜினியரிங் கிடைத்தது.விருப்பப்பட்ட பாடம் கிடைத்ததால் ஆசையாய் படித்தபோது தான் கான்கிரீட்டின் ஆபத்து தெரியவந்தது. ஒரு எக்டேர் பரப்பில் வீடுகட்டும் போது பயன்படுத்தப்படும் கான்கிரீட்டால் 78 சதவீத கார்பன் டை ஆக்ஸைடு வெளியாகிறது.

அதுகுறித்து ஆராய்ச்சி செய்தேன். மணல், சிமென்ட், ஜல்லிக்கு மாற்றான பொருட்களை 50 சதவீதம் சேர்த்தால் இந்த கார்பன் டை ஆக்ஸைடு மாசை குறைக்கலாம் என கண்டறிந்தேன். தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் சிலிகான் புகை, கடலை தோல், முட்டைஓடு, கரும்பு சக்கை, குவாரி டஸ்ட், மார்பிள் டஸ்ட் ஆகியவற்றை மாற்றுப் பொருளாக கண்டறிந்தேன்.

பள்ளியில் படிக்கும் போதே மரம் நடுவது, சுற்றுச்சூழல் கவிதை எழுதுவதை தொடர்ந்தேன். கல்லுாரி விடுமுறை நாட்களில் அங்குள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில, கணித வகுப்புகள் எடுத்தேன். என்னைப் போல் கஷ்டப்படும் மாணவர்களை கண்டறிந்து உயர்கல்வியில் சேர தொண்டு நிறுவனங்களோடு இணைந்து செயல்பட்டேன்.

திறமையான மாணவன் முன்னுக்கு வரவேண்டும் என்பதே எனது நோக்கம். ஆதரவற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்த்து வந்தேன். கொரோனா காலத்தில் மதுரை வந்த போதும் எங்கள் கிராமத்தினருக்கு கொரோனா விழிப்புணர்வு பாடல், பயிற்சி அளித்துவந்தேன்.இந்த செயல்பாடுகளை அறிந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, கொரோனா விழிப்புணர்வுக்கான 'சமாதான் சேலஞ்ச்'சில் என்னை சேர்த்தது.

கடந்த மாதம் யுனெஸ்கோவின் காலநிலை மாற்றம் குறித்த ஆன்லைன் மாநாட்டில் கொரோனாவுக்கும், காலநிலைக்கும் உள்ள ஒற்றுமை குறித்தும், சுற்றுச்சூழல் மாசுபாட்டில் கான்கிரீட்டின் பங்கு குறித்தும் 35 நிமிடங்கள் பேசினேன். சிறப்பாக பேசியதற்காக அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் அல்கோர் எனக்கு 'கிரீன் பின்' விருது வழங்கினார்.

கான்கிரீட் குறித்த எனது ஆய்வுக்காக அமெரிக்கன் கான்கிரீட் இன்ஸ்டிடியூட் 500 டாலர்கள் பரிசு வழங்கியது. கட்டுமானத் துறையில் சுற்றுச்சூழலுக்கு மாசு இன்றி சாதிக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. அதுவே சமுதாயத்திற்கு செய்யும் மிகப்பெரிய சேவை என்றார்.

யோகபாலாஜியின் சேவையை பாராட்டி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இவரின் பெயரை பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைத்துள்ளது. இது மதுரை மண்ணுக்கும் கிடைத்த பெருமை தான்.இவரைப் பாராட்ட: 63810 55142.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024