விவேகமானவர்... விவரமானவர்...விருப்பமானவர்!
Dhinamalar
Added : ஏப் 18, 2021 00:51
தமிழ் நகைச்சுவை நடிகர்களில் விவேக்கிற்கு தனி இடம் உண்டு. சிரிப்பலையை ஏற்படுத்திய இவர், சிந்திக்கவும் வைத்தார். ஊழல், மக்கள்தொகை பெருக்கம், மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற சமூக சீர்திருந்த கருத்துகளை நகைச்சுவை கலந்து கொடுத்ததால், 'சின்ன கலைவாணர்' என அழைக்கப்பட்டார். லட்சக்கணக்கான மரங்களை நட்டு பசுமை நாயகனாக ஜொலித்தார். மண்ணுலகை விட்டு ளின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.
பயோடேட்டா
பெயர் :விவேக்
முழுபெயர் :விவேகானந்தன்
பிறப்பு :1961 நவ. 19, பெருங்கோட்டூர் சங்கரன்கோவில்
பெற்றோர் : அங்கையா - மணியம்மாள்
படிப்பு :எம்.காம்.,
மனைவி : அருள்செல்வி,
மகள்கள் : அம்ரிதா நந்தினி, தேஜஸ்வினி
பெருமை
''இந்திய இளைஞர்களின் ஒரே 'சூப்பர்ஸ்டார்' ஜனாதிபதி அப்துல் கலாம். என்னிடம் திரைப்படங்களில் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து பேசுங்கள். வெப்பமயமாதலை தடுக்க மரம் நடுவதை ஊக்குவிப்பு செய்யுங்கள் என்றார். இது எனக்கு கிடைத்த பெருமையாக பார்க்கிறேன். இதுவரை 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறேன்.''
அறிமுகம் எப்படி
மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் படித்த பின் டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்று சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றினார் விவேக். சென்னையில் நடந்த பரதநாட்டிய இறுதிப் போட்டியில் பங்கேற்ற போது, கலாகேந்திரா கோவிந்தராஜன் மூலம் இயக்குநர் பாலசந்தர் அறிமுகம் கிடைத்தது. 1987ல் வெளியான 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் விவேக்கை அறிமுகம் செய்தார்.
விவேகானந்தர் பிரியர்
சுவாமி விவேகானந்தரை விவேக்கிற்கு மிகவும் பிடிக்கும். இந்திய விஞ்ஞானத்தின் பெருமையை தொழில் அதிபர் ஜே.ஆர்.டி டாடாவுக்கு எடுத்துச் சொன்னவர் விவேகானந்தர் என்றும், அமெரிக்காவின் சிகாகோவில் 'சகோதர...சகோதரிகளே' என விவேகானந்தர் ஆற்றிய உரையையும் அடிக்கடி நினைவு கூறுவார்.
வடிவேலுவுடன்...
விவேக் - வடிவேலு இணைந்து விரலுக்கேத்த வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, பொங்கலோ பொங்கல், மனதை திருடி விட்டாய், மிடில் கிளாஸ் மாதவன் என பல படங்களில் நடித்துள்ளனர்.
ரசிக்க வைத்த வசனங்கள்
* இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்
* எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்
* கோபால்... கோபால்...
* எனக்கு ஐ.ஜி.,-யைத் தெரியும்!… ஆனா அவருக்கு என்ன தெரியாது.
விருது
* பத்மஸ்ரீ - 2009
* பிலிம்பேர் சவுத் - மூன்று முறை (ரன், சாமி, பேரழகன்)
* தமிழக அரசு விருது - ஐந்து முறை (உன்னருகே நான் இருந்தால், ரன்,
பார்த்திபன் கனவு, அந்நியன், சிவாஜி)
கலாம் 'சலாம்'
ஜனாதிபதி அப்துல் கலாம் மீது விவேக்கிற்கு அன்பு அதிகம். 2015ல் ஷில்லாங்கில் மாணவர்களிடம் உரையாற்றும் போது கலாம் மாரடைப்பால் எதிர் பாராதவிதமாக மரணமடைந்தார். இதே போன்று விவேக்கும் மாரடைப்பால் திடீரென மரணத்தை
சந்தித்தார். கலாமிடம் ஒருமுறை விவேக் எடுத்த பேட்டியின் முக்கிய அம்சம்.
*கல்வியில் நிறைய பட்டம், பரிசு வாங்கி இருக்கிறீர்கள். சின்ன வயதில் பட்டம் விட்டிருக்கிறீர்களா?
பத்து வயதில் என் உயரத்தில், பாதி அளவுக்கு பெரிய பட்டம் தயார் செய்து, நண்பர்களுடன் ராமேஸ்வரம் கடற்கரையில் பறக்க விட்டிருக்கிறேன்.
*கவிதை மீது உங்களுக்கு ஈர்ப்பு வர யார் காரணம்
முதலில் எனக்கு பிடித்த உங்களது இரண்டு வரி கவிதையை சொல்கிறேன். 'காலையில் நாம் சீரியல் சாப்பிடுகிறோம். மாலையில் சீரியல் நம்மை சாப்பிடுகிறது'. இன்ப எண்ணங்களுடன், துன்ப எண்ணங்கள் இணையும் போது, கவிதை வெளிப்படுகிறது.
*வீணை வாசிக்க கற்று இருக்கிறீர்கள். இசை எப்படி உங்களுடன் இணைந்தது.
ராமநாதபுரத்தில் எட்டாம் வகுப்பு படித்த போது, தமிழாசிரியர் வகுப்பில் நுழைந்ததும் ஒரு பாடல் பாட சொல்வார். அது எனக்கு பிடித்த பாரதியார் பாட்டு. 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று' இது 1910ல் பாரதியார் பாடினார். சுதந்திரத்துக்கு முன் 1946ல் நாங்கள் பாடினோம்.
தடுப்பூசி விழிப்புணர்வு
கடைசி பத்திரிகையாளர் சந்திப்பிலும் சமூக அக்கறையுடன் பேசினார் விவேக். சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் கூறுகையில், "தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லையென பொதுமக்களுக்குத் தெரிவிக்கவே அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்பு இருக்காது. ஏதாவது ஒரு தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள். இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு, இரண்டு வாரத்திற்கு பின் தான் பாதுகாப்பு வரும். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முக கவசம், கை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்,''என்றார்.
நிறைவேறா ஆசை
'கமலுடன் நடிக்க வேண்டும் என்ற கனவு 'இந்தியன் 2' வின் மூலம் நனவாக போகிறது. அவருடன் நானும் நடிக்கிறேன்' என்று சமூக வலைதளத்தில் விவேக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை.
மகன் சோகம்
விவேக் மகன் பிரசன்னா 13, மூளைக்காய்ச்சலால் 2015ல் உயிரிழந்தார். மகனை நினைத்து இவர் எழுதிய கண்ணீர் கடிதம் மறக்க முடியாதது. மகன் மறைவால் மனதளவில் உடைந்து போன போதும், விரைவில் மீண்டு சமூகப்பணியில் அக்கறை செலுத்தினார்.
முன்னணி நடிகர்களுடன்...
ரஜினி, அஜித், விஜய், பிரசாந்த், சூர்யா, அர்ஜூன், விக்ரம், மாதவன், தனுஷுடன் நடித்துள்ளார்.
பிளாஸ்டிக் ஒழிப்பு
பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டம், டெங்கு, கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.
'ஹீரோ'
விவேக் முதலில் 'ஹீரோ'வாக நடித்த 'சொல்லி அடிப்பேன்' படம் வெளிவரவில்லை. பின் 'நான் தான் பாலா', 'பாலக்காட்டு மாதவன்', 'வெள்ளைப்பூக்கள்' படங்களில் 'ஹீரோ' அந்தஸ்தில் அசத்தினார்.
சினிமா துறையில் 34 ஆண்டு பயணத்தில் விவேக் 234க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நுாறாவது படம் 'சூப்பர் குடும்பம்'. 2020
மார்ச் 13ல் வெளியான 'தாராள பிரபு' கடைசி படம்.
No comments:
Post a Comment