ஓய்வூதிய பலன்களில் பங்கு கோரிய 2வது மனைவியின் மனு தள்ளுபடி
Added : மே 18, 2021 23:49
சென்னை:கணவரின் ஓய்வூதிய பலன்களில் பங்கு கோரிய, இரண்டாவது மனைவியின் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில், முருகேசன் என்பவர் ஆசிரியராக பணியாற்றினார்; உடல் நிலை சரியில்லாமல் இறந்தார். ஓய்வூதிய பலன் வழங்கக்கோரி, அவரின் இரண்டாவது மனைவி அம்மு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
என் கணவர் ஏற்கனவே திருமணமானவர் என்பது எனக்கு தெரியாது. ஓய்வூதிய பலன்களை பெற, முதல் மனைவி முயற்சி செய்துள்ளார். எனக்கும், ஓய்வூதிய தொகையில், 50 சதவீதம் பெற உரிமை உள்ளது. எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டதால், முன்னர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றேன்.அதன்பின், உடன்பாட்டை மீறி, தனக்கு ஓய்வூதிய பலன் வழங்கும்படி, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரிடம், முதல் மனைவி மனு அளித்தார்.
அதை தொடர்ந்து, முதன்மை கணக்காளருக்கு தலைமை ஆசிரியர் கடிதம் அனுப்பி உள்ளார். ஓய்வூதிய பலன்களை, சமமாக வாரிசுகளுக்கு வழங்கும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கை தொடர, மனுதாரருக்கு தகுதி இல்லை. சட்டப்பூர்வ வாரிசுகள் சார்பில், அவர்களின் தாய் என்ற முறையில், வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும். அதற்கு பதில் அவரே இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அதனால், அவர் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
சட்டப்பூர்வ வாரிசுகள் சார்பில் அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க, இந்த உத்தரவு தடையாக இருக்காது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment