Wednesday, May 19, 2021

கூகுள் 'நியூஸ் ஷோகேஸ்' இந்தியாவில் அறிமுகம்

கூகுள் 'நியூஸ் ஷோகேஸ்' இந்தியாவில் அறிமுகம்

Updated : மே 19, 2021 04:52 | Added : மே 19, 2021 04:51 

புதுடில்லி : கூகுள் நிறுவனம், இந்தியாவில் 'கூகுள் நியூஸ், டிஸ்கவர்' வலைதளப் பிரிவுகளில், 'நியூஸ் ஷோகேஸ்' என்ற செய்திப் பலகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், சிறந்த செய்திகள், கருத்துருக்கள் ஆகியவற்றை தரும், அச்சு மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு சன்மானம் தரப்படும் என, கூகுள் தெரிவித்துள்ளது.

கூகுள் நியூஸ், டிஸ்கவர் வலைதளங்களில் உள்ள நியூஸ் ஷோகேஸ் பகுதியில், ஜெர்மனி, கனடா, பிரேசில், பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த, 700 செய்தி நிறுவனங்களின் தலைப்புச் செய்திகள் இடம் பெறுகின்றன. இதற்காக, இந்நிறுவனங்களுடன் கூகுள் ஒப்பந்தம் செய்துள்ளது. நெட்டிசன்கள், இந்த செய்திப் பலகையில், தங்களுக்கு பிடித்த தலைப்பை, 'கிளிக்' செய்து, சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனத்தின் வலைதளத்திற்கு சென்று விரிவான செய்தியை படிக்கலாம்.இத்தகைய வசதியை, கூகுள் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து, கூகுள் துணை தலைவர் பிராட் பென்டர் கூறியதாவது: நியூஸ் ஷோகேஸ், ஏற்கனவே பல நாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது அறிமுகமாகியுள்ளது. இதற்காக, 30 செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். மேலும், பல நிறுவனங்களை இணைக்க உள்ளோம். இதன் மூலம், அச்சு, ஊடக செய்தி நிறுவனங்கள், நம்பிக்கைக்குரிய செய்திகளை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். அத்துடன் அந்நிறுவனங்களுக்கு, கூகுள் மூலம் குறிப்பிட்ட தொகையும் கிடைக்கும்.

ஆங்கிலம், இந்தி மொழிகளைத் தொடர்ந்து விரைவில் பிராந்திய மொழிகளிலும் இச்சேவை அறிமுகமாகும். அடுத்த மூன்று ஆண்டுகளில், 50 ஆயிரம் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையியல் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, கூகுள் இலக்கு நிர்ணயித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024